என் மனம், அலை பாயுதே...

கற்றது கடலளவு- அத்தியாயம் 32

அத்தியாயம் 32

நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
இந்த வருடத்தில் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற வாழ்த்துகிறேன்.


மெரிக்கா...இன்று 'டாட் காம்' தலைமுறையினரின் லட்சிய தேசம்.

இந்த முறை கப்பலில் சேருவதற்கு முன்பாகவே மும்பையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் விசா கிடைக்க எனது கம்பெனி ஏற்பாடு செய்திருந்தது.

அப்படி என்ன இருக்கிறது அந்த 'அமே.. ரிக்கா'வில் என்று பார்க்கும் ஆசையில் நானும் ஏராளமான எதிர்பார்ப்புடன் இருந்தேன்.

அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள 'ஹாம்ப்ட்டன் ரோட்ஸ்' துறைமுகத்துக்குள் நுழையும் போதே ஏகப்பட்ட 'டிராஃபிக்'.

ஹாம்ப்டன் ரோட்ஸ் துறைமுகத்தில் அமெரிக்கக் கடற்படைத் தளம் உள்ளது.. எங்கள் கப்பல் துறைமுகத்துக்குள் போகும்போது, ஏராளமான கப்பற்படை கப்பல்களும், விமானந்தாங்கிக் கப்பல்களும் எங்களின் கப்பலின் அருகே கடந்து சென்றன.

கப்பல் துறைமுகத்தில் கட்டப்பட்டு சரக்கு ஏற்றும் பணி ஆரம்பித்தது.

மாலையில் 'Seamen Mission' - ஐச் சேர்ந்த வேன் வந்தது. கப்பலில் உள்ளவர்களை நகருக்குள் கூட்டிப்போக வந்திருந்தது.

உலகில் உள்ள நிறைய நாடுகளின் துறைமுகங்களில் (குறிப்பாக அமெரிக்க, ஆஸ்திரேலிய மற்றும் ஐரோப்பிய கண்டங்களில்) எல்லாம் கப்பல் பணியாளர்களுக்காக 'Seamen Club'-கள் உள்ளன.

கப்பல்வாசிகளுக்காக வெளிநாட்டு தொலைபேசி செய்யும் வசதியும், டேபிள் டென்னிஸ் போன்ற விளையாட்டு வசதிகளும், அந்தந்த நாட்டு நினைவுப்பரிசுகள், பொருட்கள் வாங்க கடையும், சின்ன 'பார்' போன்ற வசதிகளும் (வெளியே இருக்கும் 'பெண்கள்' சம்பந்தப்பட்ட பார்கள் அல்ல.. இவை நாகரீகமாக குடித்துவிட்டு வந்துவிட மட்டும்) உண்டு.

இதைத் தவிர மினி பஸ் மூலம் இலவசமாக ஊரைச் சுற்றிக் காட்டவும் ஏற்பாடு செய்வார்கள். பிரார்த்தனை செய்வதற்கு சர்ச்சுகள் இணைந்த இத்தகைய கிறித்தவ சேவை அமைப்புகள் உலகம் முழுவதிலும் உள்ள கப்பல் பணியாளர்களின் நல்ல அபிமானத்துக்கு உரியவை.

கப்பல் ஒரு துறைமுகத்துக்குப் போய் சேர்ந்ததும், எல்லா கப்பல்வாசிகளும் கேட்கும் முதல் கேள்வி, "ஏஜெண்ட் வந்தாச்சா.. கடிதங்கள் கொண்டு வந்தானா" என்பதுதான்.

வீட்டிலிருந்து தொலைவில் வாழ்வதால் கடிதங்கள் தரும் சந்தோசமே தனி.. (ஆனால் இப்போது பெரும்பாலான கப்பல்களில் E-mail வசதி வந்துவிட்டதால், துறைமுகம் வரும்வரை காத்திருக்க வேண்டியிராமல், கம்ப்யூட்டர் உதவிபுரிகிறது.)

அதற்கடுத்தாற்போல் கேட்கப்படும் இரண்டாவது கேள்வி, "இந்தத் துறைமுகத்தில் 'ஸீமேன் மிஷன்' பஸ் சர்வீஸ் உண்டா" என்பது.

அந்த அளவுக்கு பெயர்பெற்றவை இந்த சேவை நிறுவனங்கள்.. அதிலும் Norfolk-ல் உள்ள மையம் எங்கள் கம்பெனியில் எல்லோருக்கும் பிடித்த ஒன்று...

அங்கேயுள்ள பாதிரியார் ஜெர்ரியின் அன்பில் கப்பல்வாசிகள் கரைந்தே போவார்கள். கப்பலிலிருந்து போன் செய்து அவரைக் கூப்பிடத் தேவையில்லாமல், துறைமுகத்துக்குப் புதிதாக ஒரு கப்பல் வந்தவுடன், அவரே காரை எடுத்துக் கொண்டு வந்து விடுவார் என்று ஏற்கனவே அவரைப் பற்றி சொல்லியிருந்தார்கள்.

வயதானவர்.. என்றாலும் தானே காரை எடுத்துக்கொண்டு ஊர் சுற்றிக் காட்ட புறப்பட்டு விடுவாராம்.

நான் முதல் தடவை அமெரிக்கா வந்திருப்பதால், அன்று இரவு நெடு நேரம் தங்கிசுற்றிப் பார்த்துவிட்டு வரவேண்டும் என்று திட்டமிட்டு இருந்தேன்.

மாலை ஐந்து மணிக்கு ஃபாதர் ஜெர்ரியின் கார் வந்தது. கப்பலில் இருந்து பாதிப்பேரை மதியமே ஒருமுறை கூட்டிப் போய்விட்டு, திரும்ப விடுவதற்காக வந்தார்.

என்னுடன் இன்னொரு பிலிப்பினோ மாலுமியும் வந்தான். என்னைப் பார்த்ததும் புன்னகையுடன் கைகுலுக்கி, "நான் இதற்கு முன் உன்னை சந்தித்ததில்லை.. இதுதான் முதல்முறை சரியா" என்றார்.

நான் ஆச்சர்யத்துடன் 'ம்' என்றேன்.

"ஏனென்றால் இங்கே வரும் உங்கள் கம்பெனி கப்பல்களில் இருக்கும் எல்லோர் முகமும் எனக்கு நன்றாக அறிமுகமானவை.. எல்லோருடனும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்வேன். உன்னுடைய புகைப்படம் என்னுடைய ஆல்பத்தில் இல்லை.. அதனால் கேட்டேன்" என்றார்.

அவர் சொன்னது நிஜம் என்று அவரின் இடத்துக்குப் போய், புகைப்பட ஆல்பத்தைப் பார்த்தபோது தெரிந்தது.

எங்கள் கம்பெனியில் பணிபுரியும் நிறைய பேர் அதில் இருந்தனர். போன கப்பலில் என்னுடன் வேலை செய்த நிறைய பேரின் முகங்கள் அதில் இருந்தன.

"ஊர் சுற்றிப் பார்க்கலாமா" என்று கேட்டு விட்டு எங்களை காரில் ஏற்றிக் கொண்டார். காரை ஓட்டிக்கொண்டே ஊரின் முக்கியப் பகுதிகளைச் சுற்றிக்காட்டி அவற்றைப் பற்றியெல்லாம் சொல்லிக் கொண்டே வந்தார்.

கடைசியில் நாங்கள் 'ஷாப்பிங்' செய்வதற்காக, ஊரில் இருந்த மிகப் பெரிய 'ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்' வாசலில் கொண்டு போய் நிறுத்தினார்.

எங்களை இறக்கி விட்டு, பொருட்கள் எல்லாம் வாங்கி முடித்தவுடன் டாக்ஸி பிடித்து அவருடைய இடத்திற்கு வந்தால் எங்களைக் கப்பலில் கொண்டுபோய் விடுவதாகச் சொன்னார்.

தேவைப்பட்டால், அங்கிருந்து போன் செய்தால் தானே மறுபடியும் வந்து கூட்டிச் செல்வதாகச் சொல்லி விடைபெற்றார்.

'மிலிட்டரி மால்' என்ற அந்த பிரம்மாண்டமான கட்டிடத்துக்குள் உலகில் உங்களுக்குத் தேவைப்படும் எல்லாப் பொருட்களும் கிடைக்கும்.. எங்கே திரும்பினாலும் கடைகள்..

தேவையான பொருட்கள் வாங்கிக் கொண்டு வெளியே வந்தபோது மணி எட்டு ஆகிவிட்டது.

கூட வந்த பிலிப்பினோ மாலுமி "கொஞ்சம் லேட்டாகவே போகலாம்.. நீ பாருக்கு வரவில்லையா.. இங்கே 'பாடி ஷோ' ரொம்பப் பிரபலம்.. பார்த்துவிட்டுப் போகலாம்.. எனக்கும் தனியாக இருந்தால் போரடிக்கும்.." என்றான்.

"கப்பலுக்கு போகும் வழியில்தானே பார் இருக்கிறது.. நீ போகும் இடம் வரை நானும் டாக்ஸியில் வருகிறேன். அதன்பின் என்ன செய்யலாம் என்று அப்புறம் யோசிக்கலாம்" என்றேன்.

டாக்ஸி பிடித்தோம். அவன் சொன்ன இடத்துக்குப் போய் நின்றது. அந்தத் தெரு முழுவதும் வண்ண வண்ண நிறங்களில் கவர்ச்சிகரமான அழைப்புகள்.

'பீப் ஷோ' என்றும் 'பாடி ஷோ' என்ற பெயர்களுடன் பெண்களை வைத்து வியாபாரமாக்கும் பொழுதுபோக்கு இடங்கள் வரிசையாக..

நான், "முதலில் சாப்பிடலாமா.. எனக்கு பசிக்கிறது" என்றேன்.

"நீ என்னுடன் வரவில்லையா.. இங்கே ஒரு நல்ல 'ஸட்ரிப்ட்டீஸ்' பார் ஒன்று உள்ளது. அங்கேயே சாப்பிட்டுக் கொள்ளலாம்" என்றான்.

எனக்கு நல்ல பசி.. தூரத்தில் 'மெக் டொனால்டு' கடை ஒன்று தெரிந்தது.

கூட வந்த பிலிப்பினோ மாலுமியை அவன் விருப்பப்பட்ட 'ஸ்ட்ரிப்ட்டீஸ்' பாருக்கு போகச் சொல்லி விட்டு, நான் சிறிது நடந்து ஊர் சுற்றிப் பார்த்தபின் கப்பலுக்கு போகிறேன் என்று 'மெக் டொனால்டு' கடை நோக்கி நடந்தேன்.

கடையில் பெரிய பெரிய சைஸ்களில் விதவிதமான 'பர்கர்'கள், குச்சி குச்சியாக விரலை விட நீளமாக உருளைக் கிழங்கு சிப்ஸ், கோகோ கோலா என்று விளம்பரம் செய்திருந்த படத்தில் மிக அழகாகத் தெரிந்தன.

நான் சிக்கன் பர்கர் ஆர்டர் செய்து விட்டு அதன்பின் எங்கே போகலாம் என்று யோசித்தேன்..

வழக்கமாக எங்கள் கப்பல் போகும் ஊர்களெல்லாம் பெரிய பெரிய இரும்பு தொழிற்சாலைகள், அல்லது மின்சாரம் தயாரிக்கும் 'பவர் ஸ்டேசன்' போன்ற இடங்களாக இருக்கும்.

நிலக்கரி, இரும்புத்தாது ஏற்றும் கப்பல்கள் வேறு எங்கே போகும்?. அதனால் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளைப் பார்ப்பது என்பது மிகவும் அரிது.

இப்போது அப்படி ஒரு சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது..

அதுவும் 'அமே.. ரிக்கா' எனக்கு ஆசை வந்தது..

கண்டிப்பாக இன்று வீடுகள் உள்ள பகுதியில் போய்ப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

நான் இருந்த பகுதியில் கொஞ்ச தூரம் தள்ளி வீடுகள் தென்பட்டன. வீதியில் அதிக ஆள் நடமாட்டம் இல்லை.

நான் ஆர்டர் செய்திருந்த பர்கர் வந்தது.

எனக்கு அதைப் பார்த்தவுடன் சிரிப்பு வந்தது.

இந்த அமெரிக்கர்களும், ஏமாற்றுவதில் நம்மூர் ஆட்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல...'பர்கர்' விளம்பரத்தில் ஊதிப்போய் தெரிந்த பர்கரின் 'பன்' நிஜத்தில் மெலிந்துபோய் பரிதாபமாகக் காட்சியளித்தது...

விளம்பரத்தில் போட்டோ பிடித்து போட்டிருந்த சைஸில் ஐந்தில் ஒரு பங்கு கூட இல்லை.
வாங்கிக் கையில் வைத்துக்கொண்டு மெதுவாக அந்தப் பகுதியில் இருந்த குடியிருப்புப் பகுதி நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

அந்தப் பகுதியில் இருந்த வீட்டு வாசல்களில் எல்லாம் சின்னக் குழந்தைகள் விளையாடிக் கொண்டு இருந்தன..

வீட்டுமுன் இருந்த புல்வெளியில் சாய்வு நாற்காலி போட்டு வயதான பாட்டி, தாத்தாக்கள்.

மருந்துக்குக் கூட வெள்ளையர்கள் யாரும் இல்லை. அந்தப் பகுதி முழுவதுமே கறுப்பின மக்கள்.

நீண்டு இருந்த தெருவில், வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தேன். எனது கையில் இருந்த ப்ளாஸ்டிக் பைக்குள் மாலையில் செய்த 'ஷாப்பிங்' பொருட்கள்..

தெரு முடியும் இடத்தில் விளக்கு வெளிச்சம் குறைந்து இருளாக இருந்தது.. வீடு எதுவும் இல்லை.

அடர்த்தியான மரங்கள் இரண்டு பக்கமும், ஆனால் தொலைவில் பாதை இரண்டாக பிரியும் இடத்தில் மறுபடியும் வீடுகள் தென்பட்டன.

மணி ஒன்பதுதான் ஆகியிருந்தது. இன்னும் சிறிது நேரம் நடந்து விட்டு வரலாம் என்ற எண்ணத்தில் மெதுவாக நடக்க ஆரம்பித்தேன்..

பத்தடி தூரம் நடந்திருப்பேன். திடீரென பிரகாசமான வெளிச்சம் எதிரேயிருந்து கண்களைக் கூசவைத்தது. தொடர்ந்து என்னருகே மோட்டர் பைக் ஒன்று வந்து நின்றது.

பைக்கில் இரண்டு பேர்.. நல்ல உயரம்.. திடகாத்திரமான உடல்வாகு... இரண்டு பேருமே ஆப்பிரிக்க அமெரிக்க(African Americans) இனத்தவர்கள்..

பின்னால் உட்கார்ந்திருந்தவன் இறங்கி, என்னருகே வந்தான். என்னை ஏற இறங்கப் பார்த்தான்.

"வாட் த ஹெல் யு ஆர் டூயிங் இன் திஸ் ப்ளேஸ்" அவன் என்னை நெருங்கிக் கொண்டே கேட்கவும் எனக்கு பயத்தில் கால்கள் நடுங்கின...

'யார் நீ' என்று கேட்டுக் கொண்டே என் இடது தோளில் கைவைத்து அழுத்தினான்.
எனக்கு பேச வார்த்தைகள் வெளிவரவில்லை.

அவன் என்னை உலுக்கி மறுபடியும் அதட்டினான்.

பயம் நீங்காமலேயே பாதி உளறலுடன் நான் கப்பல்வாசி என்பதையும் சும்மா நடந்து போகலாம் என்று நினைத்ததையும் சொல்லி முடித்தேன்.. அதற்குள் முற்றிலுமாக வியர்த்திருந்தேன்.

மனதுக்குள் என்னவோ நடக்கப் போகிறது என்று தோன்ற இதயத்துடிப்பு மிகவும் அதிகமானது..

"இந்த ஏரியாவுக்குள் தனியாக வரக்கூடாது என்று கப்பலில் யாரும் உனக்கு சொல்லித் தரவில்லையா" -குரலில் மிரட்டல் இருந்தது.

என் தோளில் கைவைத்திருந்தவன், பைக்கில் உட்கார்ந்திருந்தவனை நோக்கி திரும்பி கை நீட்டினான்.

அவன் ஏதோ ஒன்றை இவனிடம் கொடுத்தான்.. இருட்டில் சரியாகத் தெரியவில்லை..
நான் அதற்குள் எதையெதையோ கற்பனை செய்துவிட்டிருந்தேன்.

அவர்கள் என்னை சுட்டுவிட்டு பணத்தையெல்லாம் பறித்துக்கொண்டு தெருவில் தள்ளிவிட்டுப் போகக்கூடும்.. கப்பலில் என்னைத் தேடுவார்களே.. வினாடிகளுக்குள் ஏராளமான கற்பனைகள் வந்து என்னைக் கலக்கின..

"ஹேய் மேன்.. வந்து என் பின்னால் ஏறிக்கொள்" என்று பைக்கில் அமர்ந்திருந்தவன் என்னைப் பார்த்துச் சொன்னான்.

எனக்கு எதுவும் புரியவில்லை.. ஏன் அவன் பைக்கில் ஏறச் சொல்கிறான்?.
நான் பயந்து போய் ஓரடி பின்வாங்கினேன்.

"பயப்படாதே.. உன்னை உன் கப்பலில் கொண்டு போய் விடுகிறேன். இது மிகவும் மோசமான ஏரியா.. தனியாக வந்ததே தப்பு.. ஏறி உட்கார்" என்றான் அவன்.

நான் என்னருகே நின்றிருந்தவனை பயத்துடன் பார்த்தேன். அவன் கையில் சாவிக்கொத்து - நான் துப்பாக்கி என்று கற்பனை செய்தது அதைத்தான். பைக்கில் இருந்தவன் கொடுத்தது.

என்னருகே நின்றவன் என் தோளில் தட்டி "என்ன.. உன்னை ஏதாவது செய்து விடுவோம் என்று பயப்படுகிறாயா.. அப்படிச் செய்வதென்றால் இந்த இடத்திலேயே உன்னிடம் உள்ளதைப் பறித்திருக்கலாம் இல்லையா...

நாங்கள் கல்லூரி மாணவர்கள்.. உன்னை யாரும் எதுவும் செய்து விடக் கூடாதே என்பதற்காக இவன் கொண்டு போய் விடுகிறான்.. ஏறு பைக்கில்" என்றான்.

எனக்கு அவன் சொன்னதும் நம்பிக்கை வந்தது..

உண்மைதான்.. தப்பான ஆட்கள் என்றால் இப்போதே என்னிடம் இருப்பதைப் பறித்திருக்கலாம்.

சிறிது தயக்கம் இருந்தாலும் நம்பி பைக்கில் ஏறினேன்.

(தொடரும்)

18 Comments:

  • இன்னொரு சுவாரஸ்யமான அனுபவம்தான் கணேஷன்.

    உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    By , at January 01, 2007 8:23 AM  


  • அமெரிக்காவில் நல்ல அனுபவம்தான்.

    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    By , at January 01, 2007 8:33 AM  


  • ஆஹா... முந்தீட்டீங்களே myfriend..

    உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    By , at January 01, 2007 8:39 AM  


  • very intersting Mr.Ganesh

    By , at January 01, 2007 8:50 AM  


  • இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    By , at January 01, 2007 8:52 AM  


  • புத்தாண்டு வாழ்த்துக்கள்

    By , at January 01, 2007 9:02 AM  


  • இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    By , at January 01, 2007 9:24 AM  


  • வணக்கம் கணேசன்,
    அருமையான தொடர்..
    உங்களின் அமெரிக்கா அனுபவம் மிக சுவராஸ்யமாக உள்ளது.
    உங்களின் வலைப்பதிவுவில் இது தான் என் பின்னூட்டம்.
    உங்களின் பிற "கற்றது கடலளவு-அத்தியாயங்களை படித்து விட்டு பின்னூட்டம் இடுகிறேன்.

    உங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    By , at January 02, 2007 2:45 AM  


  • கணேசன்.....தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

    அடுத்த பதிவிற்க்காக வெள்ளிக்கிழமை வரை காத்திருக்கிறேன்....

    By , at January 02, 2007 12:08 PM  


  • http://valai.blogspirit.com/archive/2007/01/01/ferry.html

    By , at January 02, 2007 12:22 PM  


  • Thanks....,

    Pedharayudu.

    By , at January 02, 2007 12:51 PM  


  • இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்:)

    By , at January 02, 2007 1:42 PM  


  • அனுபவங்கள் ஒருத்தொருத்தருக்கும் வேறுபடும். எங்கள் நண்பருடைய பையனுக்கும், அவன் மனைவிக்கும் நியூயார்க் ரெயிலில் ஏற்பட்டது மோசமான அனுபவம். அதுவும் இந்த ஆஃப்ரோ அமெரிக்கர்களோடுதான். மற்றபடி உங்களோட பதிவிற்கு வரமுடியாமல் ரொம்பவே பிரச்னை கணினியாலே. இன்னிக்குத் தமிழ்மணத்தில் இருந்து வழி கண்டுபிடித்து வந்தேன்.என்னை நினைவு இருக்கும்னு நினைக்கிறேன்.

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும்.

    By , at January 02, 2007 2:35 PM  


  • வெகு அருமையாக விவரித்து உள்ளீர்கள்.அமெரிக்க அனுபவத்திலும் சஸ்பென்ஸா?வெகு சுவாரஸ்யம்.KGS புத்தாண்டு வாழ்த்துக்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்.--SKM

    By , at January 02, 2007 11:17 PM  


  • எங்கே போனாலும் உங்களுக்கு சுவாரஸ்யமான அனுபவங்கள் தான் :)

    புதன்கிழமைக்கு காத்துருக்கிறேன்

    By , at January 03, 2007 12:13 AM  


  • புத்தாண்டு வாழ்த்துகள் KG.

    எங்கே போனாலும் எதாவது ஒன்னு நடந்திடுதே..

    ம்ம் ..புதன் கிழமைக்கு வெயிட்டிங்.

    By , at January 03, 2007 12:19 AM  


  • mmmmm, Hope you did not see my greetings. So no new post also. Anyhow once again Happy New Year.

    By , at January 03, 2007 9:24 PM  


  • Hi Ganesh Sir,

    A Very Very Happy, Excellent and Prosperous New Year. May God Bless.

    By , at January 17, 2007 9:38 PM  


Post a Comment

Links">


Links to this page:

Create a Link

<< முகப்பு