என் மனம், அலை பாயுதே...

கற்றது கடலளவு - அத்தியாயம் 39

அத்தியாயம் 39

ப்பலுக்கு மின்சாரம் வழங்க ஜெனரேட்டர்கள் உண்டு.

கப்பலில் உள்ள எல்லா இயந்திரங்கள், பம்ப்புகள் முதலியவற்றை இயக்கவும், விளக்குகளுக்குத் தேவைப்படும் மின்சாரத்தை வழங்கவும் ஜெனரேட்டர்களில் இருந்துதான் மின்சாரம் எடுக்கப்படுகிறது.

கப்பலில் குடிப்பதற்கும் மற்ற உபயோகங்களுக்கும் தேவைப்படும் நல்ல தண்ணீர், கடல் நீரிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

'FRESH WATER GENERATOR' என்ற சாதனத்தின் உதவியால் கடல் நீர் கொதிக்க வைக்கப்பட்டு, ஆவியாகி, உப்பு தனியாகப் பிரிக்கப்பட்டு சுத்தமான 'டிஸ்ட்டில்டு' தண்ணீர் பெறப்படுகிறது.

இந்த தண்ணீர் பெரிய இரும்புத் தொட்டிகளில் சேமிக்கப்பட்டு இருக்கும்.

இன்ஜின் அறையிலுள்ள தொட்டியிலிருந்து மேலே தங்கும் அறைப்பகுதிகளுக்கு தண்ணீரை கொண்டு செல்ல 'HYDROPHORE' என்ற சாதனம் உண்டு.

முழுதும் மூடப்பட்ட தொட்டி போன்ற அதிலிருந்து, சுமார் நான்கு கிலோ (4Kg/Cm2) அழுத்தமுள்ள காற்றை உபயோகித்து, எல்லா இடங்களுக்கும் தண்ணீர் விநியோகிக்கப்படும்.

அதற்குத் தேவையான காற்றை சப்ளை செய்ய 'கம்ப்ரஸர்' ஓட வேண்டும்.. கம்ப்ரஸருக்கு மின்சாரம் தேவை.

ஜோதிக்குமார் சம்பவத்தைச் சொல்ல ஆரம்பித்தவுடன், அந்த கிரேக்கர் ஏன் கப்பலைவிட்டு வெளியே உள்ள இடத்துக்குப் போகவேண்டிய அவசியம் ஏற்பட்டது என எனக்குப் புரிந்தது. நான் நினைத்ததையே ஜோதிக்குமார் சொன்னார்.

கப்பலில் ஜெனரேட்டர்கள் எதுவும் இயங்கவில்லை. அதனால் தண்ணீர் சப்ளையும் இல்லை. கப்பலில் இருந்த அனைவரும் கரையில் உள்ள ஒரு இடத்திற்குப் போக வேண்டியிருந்தது.

கப்பலில் நுழைந்தவுடனேயே கேள்விப்பட்ட இந்தச் செய்தியால் அதிர்ந்து போனேன்.. மூன்று நாளாக கப்பலில் மின்சாரம் இல்லையாம்.

கிரேக்கக் கப்பல்களின் நிலைமை கொஞ்சம் மோசமாகவே இருக்கும் என்று தெரியும். ஆனால் இந்த அளவுக்கு மோசம் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை.

ஆப்பிரிக்காவிலுள்ள 'அங்கோலா' விற்குக் கொண்டு செல்வதற்க்காக கப்பலில் 'மொச்சைக் கொட்டை' ஏற்றப்பட்டிருந்தது.

அங்கோலாவில் கடுமையான வறுமையும், வறட்சியும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது. மொச்சை அவர்களின் உணவில் மிக முக்கியமானது. அங்கே அது அவசரமாகத் தேவைப்பட்டது.

கப்பலிலோ மின்சாரம் கிடையாது. கப்பல் இப்போதைக்குப் புறப்பட வழியில்லை.

எனவே 'கார்கோ' வை, (கப்பலில் ஏற்றப்படும் எல்லா சரக்கையும் 'கார்கோ' என்றே அழைப்பது வழக்கம்) கப்பலில் ஏற்றியனுப்பும் முதலாளி, தாமதமாகும் என்பதால் இன்னொரு கப்பலுக்கு மாற்ற ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்.

அப்படிச் செய்ய நேரிட்டால், எங்கள் கப்பல் கம்பெனிக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுவது மட்டுமல்ல. கம்பெனியின் பெயரும் கெட்டுவிடும் என்ற நிலை இருந்தது.

எனவே கப்பலுக்கு உடனடியாக மின்சாரம் கிடைக்கச் செய்வது மிக முக்கியமாக இருந்தது.

நான் போன முதல் நாளே இவ்வளவு பிரச்னைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

கேப்டனை சந்தித்து விட்டு, உடை மாற்றிக்கொண்டு கீழே என்ஜின் அறைக்குச் சென்றேன். கப்பலில் மூன்று ஜெனரேட்டர்கள் இருந்தன.

ஒரு ஜெனரேட்டர் துறைமுகத்தில் மட்டும் உபயோகிப்பது.. ஆனால் அது உபயோகிக்கவே முடியாமல் உடைந்து போய் இருந்தது.

இன்னொரு ஜெனரேட்டரின் சில பாகங்கள் பழுதடைந்திருந்ததால், முழுதும் பிரிக்கப்பட்டு கிடந்தது. அதை மாட்டி தயார் செய்ய குறைந்தது நான்கு நாட்களாவது ஆகும் என்றார்கள்.

நன்றாக ஓடிக் கொண்டிருந்த ஒரே ஒரு ஜெனரேட்டரும் எலக்ட்ரிக்கல் கோளாறு காரணமாக நின்று போனது.

ஜெனரேட்டருடன் இணைந்த 'ஆல்ட்டர்னேட்டர்' பகுதியில் பிரச்னை, ஆனால் எதனால் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

ரிப்பேர் செய்வதற்க்காக வந்திருந்த கொரிய நாட்டு சர்வீஸ் எஞ்ஜினியர் கொஞ்சம் குண்டு.. தலை மிகப் பெரியது.. அவரும் முடிந்தவரை முயற்சித்து சோர்ந்துபோய் இருந்தார்.

நான் போனபோது மாலை ஆறு மணி ஆகிவிட்டிருந்தது.

கப்பலில் வெளிச்சத்திற்க்காக அங்கங்கே மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து விட்டார்கள்.

ஒரு ஆளை மட்டும் மெழுவர்த்தி ஏற்ற வைத்துவிட்டு மற்ற எல்லோரும் எஞ்ஜின் அறையை விட்டுப் போய் விட்டனர். எனக்கு அவர்தான் உதவிக்கு இருந்தார்.

ஒரே ஒரு டார்ச் இருந்தது. மெதுவாக எல்லாவற்றையும் பார்த்து விட்டேன். எனக்கும் என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லை.

கடைசியில் 'ஆல்ட்டர்னேட்டரி' ல் உள்ள சின்ன திறப்பின் வழியாக உள்ளே உள்ள பாகங்களைப் பார்க்க முயற்சித்தேன்.

மெதுவாக கழுத்தை வளைத்து, தலையை அதனுள் விட்டுப் பார்த்தவுடன் எனக்கு பிரச்சனை என்னவென்று புரிந்து விட்டது.

அதனுள் இருந்த ஒரு தகடு இன்னொரு பகுதியுடன் உரசிக் கொண்டிருந்தது.. அதனால், இயந்திரத்தின் 'இன்சுலேசன்' குறைந்து விட்டிருந்தது..

மிகவும் சுலபமான பிரச்னை.. ஆனால் மூன்று நாட்களாக ரிப்பேர் செய்ய முடியாததற்குக் காரணம் அது உள்பகுதியில் இருந்ததுதான்...

கொரிய நாட்டு சர்வீஸ் எஞ்ஜினியர் மிகவும் திறமையானர். அவரும் இதை மிக சுலபமாகக் கண்டுபிடித்து இருப்பார். அவரின் தலை கொஞ்சம் சின்னதாக இருந்திருந்தால்.

என்னுடைய தலை உள்ளே நுழையும் அளவுக்கு சின்னதாக இருந்ததால், என்னால் தலையை உள்ளே விட்டு பார்க்க முடியந்தது.

ஒரு வழியாக ஜெனரேட்டரை ஸ்டார்ட் செய்தேன். மின்சாரம் வந்தவுடன் கப்பலில் கல்யாண வீட்டுக் களைதான். அன்று முழுதும் கொண்டாட்டம்.

கப்பல் நள்ளிரவு இரண்டு மணிக்கு பர்மாவிலிருந்து புறப்பட்டது.

ஆனால் பர்மாவில் கப்பலுக்கு உணவுப் பொருட்கள் எதுவும் கொடுக்கவில்லை.. தரவும் முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.

கப்பலில் மூன்று நாட்களாக மின்சாரம் இல்லாததால் குளிர்பதன அறையில் வைத்திருந்த உணவுப் பொருட்கள் எல்லாம் கெட்டுப் போய் விட்டது...

எல்லாவற்றையும் வெளியே கொட்டி விட்டார்கள்.

இப்போது கப்பலில் அரிசி மட்டும் மிச்சம்.. கப்பல் அங்கிருந்து அங்கோலா சென்றாக வேண்டும்.. ஒரு மாதத்திற்கு மேல் ஆகும்.

சாப்பாட்டுக்கு என்ன செய்வது..?


-தொடரும்.

8 Comments:

  • சாப்பாட்டுக்கு "மீன்" தான்.
    கடலன்னையிடம் தான் நிறைய இருக்கே!!

    By , at January 17, 2007 7:08 AM  


  • மொச்சைக் கொட்டைதான்!

    By , at January 17, 2007 7:39 AM  


  • //
    கிரேக்கக் கப்பல்களின் நிலைமை கொஞ்சம் மோசமாகவே இருக்கும் என்று தெரியும். ஆனால் இந்த அளவுக்கு மோசம் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை
    //
    நாங்களும் தான்... சாப்பாட்டுக்கு குமார் சொன்ன மாதிரி மீங் தான் :)

    கிரேக்கர்கள் கப்பல் உலகத்தில் கலக்குகிறார்கள் :)

    By , at January 17, 2007 8:53 AM  


  • ஹாய் கணேஷ்,

    இவ்வளவு நல்ல கப்பல்கள் கூட உபயோகத்தில் இருக்க முடியுமா என்ன?

    By , at January 17, 2007 10:57 AM  


  • Hi Ganesh Sir,

    It is very disappointing to know that Rosy has not come to India.

    Wherever she is the God will and will have to take care

    May God Bless.

    By , at January 17, 2007 10:57 PM  


  • Hi Ganesh Sir,
    Comment for Chap 39 - U r so smart and a person with a small head but a big brain. God z Gr8
    May God Bless

    By , at January 20, 2007 10:35 AM  


  • ஓ!இதைதான் உருவம் சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்று சொல்வாங்களா.ஆனாலும் கிரேக்கக் கப்பல் இவ்வளவு மோசமாக இருக்குமா?--SKM

    By , at January 22, 2007 3:53 AM  


  • present Sir... Captain eppadi irukkenga..??

    By , at January 29, 2007 6:49 AM  


Post a Comment

Links">


Links to this page:

Create a Link

<< முகப்பு