அலை பாயுதே...

'கற்றது கடலளவு'-அத்தியாயம் 1 முதல்19 வரை



'கற்றது கடலளவு' எனது கப்பல் வாழ்வின் டைரிக் குறிப்பு அல்ல.. 
பல சம்பவங்கள் என் வாழ்வில் அப்படியே நடந்தவை.. நான் கேள்விப்பட்ட சில விஷயங்களை மட்டும் 'சிறிது' கற்பனை கலந்து விவரித்திருக்கிறேன்.

பல வருடங்களுக்கு முன் நிகழ்ந்த எனது அனுபவங்களை எழுதியுள்ளேன்.. தொடரைப் படித்துவிட்டு, இப்போதும் கப்பலில் வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது என்று முடிவு செய்து விட வேண்டாம்.. இப்போது கப்பல் வாழ்க்கையில் எவ்வளவோ மாற்றங்கள்..

சில பெயர்களும், சம்பவ இடங்களும் அவசியம் கருதி மாற்றத்துடன் உபயோகித்திருக்கிறேன். கப்பல் வாழ்க்கையைப் பற்றி தெரியாதவர்களுக்கு, ஒரு அறிமுகமாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.

'கற்றது கடலளவு' என்ற தலைப்பு, மனதில் பதியக்கூடியதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், 'விகடன் ஆசிரியர் குழு'வால் தேர்ந்தெடுக்கப் பட்டதே தவிர, நான் கற்றது-கடலளவு என்ற அர்த்தத்தில் வைக்கப்பட்டதல்ல..

இது முதலில் ஜூனியர் விகடன் பத்திரிக்கையில் தொடராக வெளிவந்தது..


அத்தியாயம்-1


ஒரு புதிய வழித்தடத்தில், எனது வாழ்க்கைப் பயணம்..

புதிய உலகம்.. முற்றிலும் புதுமையான அனுபவங்கள்.. இன்று நினைத்தாலும் உள்ளுக்குள் சிலிர்ப்பூட்டும், பரவசம் நிறைந்த அந்த நாளின் பசுமையான நினைவுகள்..

அன்று ஒரு புதிய வேலையில் சேர இருந்தேன். அது திசைகளையும், தேசங்களையும் எனக்கு அறிமுகப் படுத்திய - 'மெரைன் இஞ்ஜினீயர்' வேலை..

கப்பலிலேயே பயணம் செய்து கொண்டு, உலகத்தையே சுற்றி வரலாம்.. எத்தனையோ தேசங்களையும், புதிய மனிதர்களையும் சந்திக்க வாய்ப்புள்ள ஒரு வேலை.. ஏராளமான கற்பனைகளைச் சுமந்து கொண்டு, நான் எனது புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கத் தயாராக இருந்தேன்..

எல்லோரும் கனவிலும், கற்பனையிலும் மட்டுமே பார்க்கக் கூடிய இடங்களை நான் நிஜமாகவே பார்க்கப் போகிறேன் எனபதை நினைத்தபோது மிகவும் பரவசமாக இருந்தது..

சென்னையிலிருந்து மும்பை சென்று, அங்கிருந்து பாரீஸுக்குப் போய்ச் சேர வேண்டும். நான் சேர இருந்தது ஒரு பிரிட்டிஷ் கம்பெனிக்குச் சொந்தமான கப்பல். அப்போது ஃபிரான்ஸ் நாட்டில் இருந்தது.

மறுநாள் காலை ஃபிரான்ஸில் காலடி வைத்தபோது சிலிர்ப்பாக இருந்தது.

------------------------

பாரீஸ் 'சார்ல்ஸ் டி கால்' விமான நிலையம். ஒரு இனிமையான அதிகாலைப் பொழுது.

இரண்டு சூட்கேஸ்களை எடுத்துக் கொண்டு மெதுவாக 'இமிக்ரேஷன் கௌண்ட்டர்' நோக்கி நகர்ந்தபோது தான் கவனித்தேன்.

இமிகிரேஷன் அறையின் கண்ணாடி சுவருக்கு அப்பால், என் பெயர் மற்றும் நான் சேரவிருந்த கப்பலின் பெயர் எழுதப்பட்டிருந்த அட்டையைக் கையில் பிடித்துக் கொண்டு ஒரு இளம்பெண் நின்றிருந்தாள்.

இமிகிரேஷன் சம்பந்தப்பட்ட வேலை எல்லாம் முடிந்து வெளியே வந்தவுடன், "ஹாய்.. ஐ'ம் ஸோஃபி(Sophie).. உன்னை கப்பலுக்குக் கூட்டிப்போக இருக்கும் ஏஜெண்ட்"- என்று அறிமுகப் படுத்திக் கொண்டாள்.

கப்பல் 'டங்கிர்க்' (Dunkirque) துறைமுகத்தில் இருப்பதாகவும், காரில் நான்கு மணி நேர பயணம் என்றும் சொன்னாள்.

இருபத்தைந்து வயது இருக்கும். நேர்த்தியாக உடையணிந்திருந்தாள். நீல நிற கோட் அவளுக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது.

அந்த அதிகாலை ஆறுமணி குளிரில் பனிபடர்ந்த பாரீஸ் நகரம் மிகமிக அழகாகக் காட்சியளித்தது.

"இதற்குமுன் பாரீஸுக்கு வந்திருக்கிறாயா?"

"இல்லை.. இதுதான் முதல் தடவை".

ஃபிரான்ஸ் நாட்டவர்கள் ஆங்கிலம் நன்றாகத் தெரிந்திருந்தாலும், பிரெஞ்சில்தான் பதில் சொல்வார்கள் என்று கேள்விப்பட்டிருந்தேன்.

ஆனால் அவள் நன்றாகவே ஆங்கிலம் பேசினாள்.

"நீங்கள் நன்றாக ஆங்கிலம் பேசுகிறீர்கள். நான் வேறு மாதிரி அல்லவா ஃபிரான்ஸ் மக்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன்.."

கார் நூறு மைல் வேகத்தையும் தாண்டிச் சென்று கொண்டிருந்தது..

வேகத்தைச் சற்றும் குறைக்காமல், வளைவுகளில் அநாயசமாக காரைத் திருப்பியது, அவள் திறமையான காரோட்டி என்பதைப் புரியவைத்தது.

அதுவரை என் கேள்விக்கு பதில் சொல்லாமல் சாலையில் கவனமாக இருந்துவிட்டு, பின் என் பக்கம் திரும்பி மெலிதாகப் புன்னகைத்தாள்.

"நீ நினைப்பது எனக்குப் புரிகிறது. பிரெஞ்சு மக்களைப் பற்றி அப்படி ஒரு அபிப்ராயம் இருப்பது எனக்குத் தெரியும்.. எங்களுக்கும் பிரிட்டிஷ்காரர்களுக்கும் ஆகாது.. ஆனால் நான் இருக்கும் தொழிலில் அப்படி இருக்க முடியுமா?. இங்கே பல நாட்டுக்காரர்களை வரவேற்று கப்பலில் சேர்க்க வேண்டியது என் பொறுப்பு. எனவே ஆங்கிலத்தில்தான் பேசியாக வேண்டும்."

தூரத்தில் ஈஃபிள் டவர் தெரிந்தது. உலக அதிசயங்களில் ஒன்றைக் கண்முன் நேரில் பார்ப்பது இதுவே முதல்முறை. அருகில் சென்று பார்க்க வேண்டும் என்று மனதுக்குள் ஆர்வம் பொங்கியது.

"அது ஈஃபிள் டவர் தானே.. அங்கே போய்விட்டுப் போகலாமா?"

"ஐ'ம் வெரி ஸாரி.. நாம் அந்தப் பாதை வழியாகப் போகவில்லை.. அங்கே போய்விட்டுத் திரும்ப அரைமணி நேரமாவது ஆகும். இப்போது போகும் வேகத்தில் போனால்தான் உன்னைக் கப்பல் புறப்படுவதற்குள் கொண்டுபோய்ச் சேர்க்க முடியும்.

உன்னுடைய விமான நேரம் அப்படி அமைந்திருக்கிறது. ஊரிலிருந்து புறப்படும்போது, 'உலகத்தைச் சுற்றிப் பார்க்கப் போகிறோம்' என்ற கனவுகளுடன் வந்திருப்பாய்.. ஆனால் பார்த்தாயா.. கண்ணுக்கெட்டிய தூரத்தில் அரைமணி நேர பயணத்தில் ஈஃபிள் டவர் இருந்தும் உன்னால் அருகே போய் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை.. இல்லையா.."

நிஜமாகவே பெரிய ஏமாற்றமாக இருந்தது. விகடனில் பத்திரிக்கை நிருபராக வேலை பார்த்த அனுபவம் இருந்ததால், கப்பல் வாழ்க்கையில் சேர்ந்தால் உலக நாடுகளைச் சுற்றிப்பார்த்து அதைப் பற்றியெல்லாம் எழுதலாம் என்ற எண்ணத்தில் நான் இருந்தேன்.

அதனால், ஈஃபிள் டவரைப் பார்க்க முடியாமல் போனபோது, முதல்நாள் அனுபவமே ஏமாற்றமாக இருந்ததை நினைத்து மனம் வாடிப்போனது.. அதற்குப் பின் எதுவும் பேசப்பிடிக்காமல் அமைதியாக கார் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன்.. தூரத்தில் ஈஃபிள் டவர் பார்வையிலிருந்து மங்கி, காணாமல் போனது..

கப்பல் வாழக்கையைப் பற்றிய என்னுடைய பல கனவுகளும் அதேபோல் என்னைவிட்டுப் பிரியப் போகின்றன என்பதை நான் அப்போது அறியவில்லை.

--------------------------

பாரீஸ் நகரைவிட்டு விலகி கார் வேகமாகச் சென்று கொண்டிருந்தது.

ஸோஃபி இடையிடையே இந்தியாவைப் பற்றி கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள். நான் பதில் சொல்லிக் கொண்டிருந்தாலும், பார்க்க முடியாமல் போன ஈஃபிள்டவர் தான் என் எண்ணம் முழுதையும் ஆக்ரமித்திருந்தது.

கார் பத்து மணிக்கு டங்கிர்க் துறைமுகத்திற்குள் நுழைந்து, கப்பல் இருக்கும் இடம் போய்ச் சேர்ந்தது.

பிரம்மாண்டமாகத் தோற்றமளித்தது அந்தக் கப்பல். சுமார் முந்நூறு மீட்டர் நீளத்தில் கம்பீரமாகக் கரையில் கட்டப்பட்டிருந்த அந்தக் கப்பலை ஆச்சர்யம் பொங்கப் பார்த்தேன்.

ஸோஃபி என்னை இறக்கிவிட்டுப் போய் விட்டாள்.

இரண்டு கைகளிலும் சூட்கேஸ் கனக்க, குறுகலான ஏணிப்படிகளில் ஏறி கப்பல் தளத்தை அடைந்தபோது மூச்சு வாங்கியது.

கேப்டன் அறையைத் தேடினேன்.

ஆறடி உயரத்தில் இருந்த கேப்டனுக்கு வயது ஐம்பதுக்கு மேல் இருக்கும். பிரிட்டிஷ்காரர்.

"கமான் மை ஸன்.. முதன்முதலாக கப்பல் வாழ்க்கைக்கு வந்திருக்கிறாய்.. உனது வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்"- அழுத்தமாகக் கைகுலுக்கினார்.

"இன்னும் அரைமணி நேரத்தில் கப்பல் புறப்பட்டு விடும்.. உடைமாற்றிக் கொண்டு இஞ்ஜின் கட்டுப்பாட்டு அறைக்குச் செல்.. உனது சீஃப் இஞ்ஜினீயரை அங்கே சந்திக்கலாம்." என்றார்.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் நான் கப்பல் பணியாளர்களுக்கான உடை அணிந்து இஞ்ஜின் கட்டுப்பாட்டு அறையில் இருந்தேன்.

பயமுறுத்தும் பிரம்மாண்டமான எலக்ட்ரிக்கல் சுவிட்ச் போர்டுகளுடன் இருந்த அந்த அறையில் நான்கு பேர் இருந்தனர்.

இவர்களில் யார் சீஃப் இஞ்ஜினீயர்..?

"யெஸ்..!"- சற்று அதட்டலுடன் வந்த குரலில் கொஞ்சம் அதிர்ந்து போனேன்.

தயக்கத்துடன், "நான் புதிய ஜூனியர் இஞ்ஜினீயர்.."- வார்த்தைகள் கோர்வையில்லாமல் வெளிவர எப்படியோ சொல்லி முடித்தேன்.

நெற்றிக்கு மேல் இருபுறமும் வழுக்கை.. கண்ணாடி அணிந்து 'யெஸ்'ஸுடன் அதட்டிய அந்த பிரிட்டிஷ்காரர் என்னை நெருங்கி கைகுலுக்கி, "சீஃப் இஞ்ஜினீயர் பால் ஆண்டர்ஸன்" -என்று அதிகாரம் குறையாமலேயே சொன்னார்.

மற்ற மூவரையும் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது இஞ்ஜினீயர்கள் என்று அறிமுகப் படுத்தினார். அவர்கள் மூவரும் இந்தியர்கள்.

சீஃப் இஞ்ஜீனீயரின் வெண்ணிற தாடி, மீசைக்குள் மெலிதாக புன்னகை தெரிந்தது. மனிதருக்கு சிரிக்கவும் தெரிகிறது.

"உன் வயதென்ன?.."- சீஃப் இஞ்ஜினீயர் கேட்டார்.

"இருபத்தைந்து.." என்றேன்.

"ஆர் யு எ வர்ஜின்..?"

எடுத்த எடுப்பிலேயே இப்படியா கேட்பார்கள்!. சிறிது கூச்சத்துடன், "ஆம்" என்றேன்.

"இன்னும் எத்தனை நாட்களுக்கு வர்ஜினாகவே இருக்கப் போகிறாய்..?"

இதெல்லாம் ஒரு கேள்வி என்று யாரையாவது கேட்பார்களா என்ன?

தயக்கத்துடன், "இன்னும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் வரை" என்றேன்.

"அதென்ன நான்காண்டு கணக்கு?"

"அதற்குப் பின்தான் திருமணம் செய்து கொள்வேன்."

நான் சொல்லி முடித்ததுதான் தாமதம்.. ஏதோ, பெரிய ஜோக்கைக் கேட்டதுபோல் அவர்கள் நால்வரும் சத்தம் போட்டுச் சிரித்தனர்.

சீஃப் இஞ்ஜினீயர் சிரித்து முடித்துவிட்டு, "ஆனால், திருமணத்துக்கும் வர்ஜினிட்டிக்கும் என்ன சம்பந்தம்" என்று மிகவும் சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டார்.

எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

மூன்றாவது எஞ்ஜினீயர், "சீஃப்.. இன்று இப்படித்தான் சொல்வான்.. இப்போதுதானே கப்பல் வாழ்க்கையில் சேர்ந்திருக்கிறான். அடுத்த கப்பலில் இவனை நீங்கள் சந்தித்தால், 'திருமணத்துக்கும் வர்ஜினிட்டிக்கும் என்ன சம்பந்தம்' என்று உங்களையே திருப்பிக் கேட்பான்."- என்று சொல்லிவிட்டு சிரித்தான்.

அந்த முதல் நாளின் ஆரம்பமே மிகவும் வித்தியாசமாக இருந்ததாகப் பட்டது.

இம்மாதிரி விஷயங்களையெல்லாம் எப்படி சர்வசாதாரணமாக சிரித்துக் கொண்டே கேட்கிறார்கள்?.. கரை வாழ்க்கையில் முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் எடுத்த எடுப்பிலேயே இதுபோன்ற வார்த்தைகளைப் பேசமுடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.

அதுமட்டுமல்ல.. அதன்பின் வந்த நாட்களில் அந்த பிரிட்டிஷ் கம்பெனி கப்பலில் இருந்தவர்களுக்கு இது போன்ற கேள்விகளெல்லாம் சகஜம் என்பதும், அங்கே அவர்கள் பேசும் ஒவ்வொரு வாக்கியத்திலும் ஆங்கிலக் கெட்ட வார்த்தைகள் மிகவும் சகஜமாக எல்லோரும் உபயோகிப்பதையும் நான் அதிர்ச்சியுடன் பார்த்தேன்.


மேலும், 'கற்பு என்பது ஆண்களுக்கும் பொதுவானது என்பதெல்லாம் பிரிட்டிஷ்காரர்களும், பிலிப்பினோ நாட்டவர்களும் வாழும் அந்தக் கப்பல் வாழ்க்கைக்கு சம்பந்தமில்லாத விஷயம்' என்பதை நான் மிக விரைவாகவே புரிந்து கொள்ள நேர்ந்தது.

அடுத்த சில நிமிடங்களில் கப்பல் மெதுவாக அந்தத் துறைமுகத்தை விட்டு பிரேஸில் நோக்கிப் புறப்பட்டது.

சீஃப் இஞ்ஜினீயரின் அனுமதி பெற்று இஞ்ஜின் அறையைவிட்டு வெளியே வந்து கப்பலின் மேல்தளத்துக்கு வந்தேன்..

மெதுவாக நடந்து கப்பலின் பின்பகுதிக்குப் போய், இரும்புக் கம்பியைப் பிடித்துக் கொண்டு தூரத்தில் விலகி போய்க் கொண்டிருந்த கரையைப் பார்த்தேன்..

கரையிலிருந்து கடலைப் பார்த்து வியந்ததற்கும், கடலுக்குள் மிதக்கும் கப்பலில் நின்று கரையைப் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசத்தை உணர்ந்தேன்.. உள்ளுக்குள் லேசான பயம் கலந்த உற்சாகம் தோன்றித் தோன்றி மறைந்தது.

ஒரு புதிய சாகசம் நிறைந்த வாழ்க்கையை எதிர்நோக்கி இருக்கும் சிலிர்ப்பு உடல் முழுதும் பரவியிருந்தது. இஞ்ஜின் அறைக்குத் திரும்பினேன்..

கப்பலின் பதினெட்டாயிரம் 'ஹார்ஸ் பவர்' சக்தியுள்ள எஞ்ஜின் மூன்று மாடி உயரம் இருந்தது..

அது மெதுவாக இயங்க ஆரம்பித்தபோது, பிஸ்டன்களின் இயக்கத்தில் எழுந்த சத்தம், இனிமையான சுதி சேர்ந்த தாளம் போல் ரசிக்கக் கூடியதாக இருந்தது..

அந்த இசையில் ஒருகணம் மனதை பறிகொடுத்து நின்றது நிஜம்.. ஆனால் அடுத்து வரும் சில நாட்கள் அவ்வளவு இனிமையாக இருக்கப் போவதில்லை என்று அப்போது தெரியவில்லை..

எத்தனையோ எதிர்பார்ப்புகளுடனும், உற்சாகத்துடனும் கடல் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த எனது கற்பனைக் கோட்டைகள் அனைத்தும், பதினைந்து நாள் பயணம் செய்து பிரேஸில் போய்ச் சேர்வதற்குள் அந்த அட்லாண்டிக் மகா சமுத்திரத்தினடியில் மூழ்கடிக்கப் பட்டன.

அது ஒரு வித்தியாசமான உலகம்.. அதுமட்டுமல்ல.. கிட்டத்தட்ட மன நோயாளிகளின் நிலையில் இருந்த ஒரு சிலரின் மத்தியில் நான் நுழைந்ததைப் போன்ற ஒரு பயங்கரத்தை அன்றிரவே புரிந்து கொள்ள நேர்ந்தது.



----------------------------------

நான் சேர்ந்திருந்த அந்தக் கப்பல் ஒரு சரக்குக் கப்பல்.. பயணிகள் கப்பல் அல்ல.

அந்தக் கப்பலில் என்னையும் சேர்த்து மொத்தம் இருபத்தினாலு பேர். கேப்டன், சீஃப் இஞ்ஜினீயர் இருவரும் பிரிட்டிஷ்காரர்கள். மற்ற இஞ்ஜினீயர் மற்றும் 'நேவிகேட்டிங்' ஆபிஸர்கள் அனைவரும் இந்தியர்கள்.

அவர்களைத் தவிர மாலுமிகள், இஞ்ஜின் ரூம் ஃபிட்டர்கள், சமையல் டிபார்ட்மெண்ட் ஆட்கள் சேர்த்து மீதி பதினாறு பணியாட்களும் ஃபிலிப்பைன்ஸ் நாட்டவர்கள்.

மூன்றாவது இஞ்ஜினீயர் சண்முகம் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன். மற்ற இந்தியர்கள் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

---------

துறைமுகத்தை விட்டு வெளியே வந்த சிறிது நேரத்தில் கப்பல் முழு வேகத்துடன் கடலைக் கிழித்துக் கொண்டு பயணப்பட்டது.

சுமார் பதினான்கு கடல்மைல் (ஒரு கடல்மைல் [Nautical Mile] = கிட்டத்தட்ட 1.852 கி.மீ) வேகத்தில் தண்ணீரைக் கிழித்துக் கொண்டு ஃபிரான்ஸிலிருந்து பிரேஸிலில் உள்ள 'Ponta-De-Madeira' துறைமுகத்தை நோக்கிச் சென்றது.

கப்பலில் சரக்கு எதுவும் ஏற்றப்படவில்லை.. (இப்படிப்பட்ட சரக்கு இல்லாமல் செல்லும் கப்பல் பயணத்தை 'Ballast Voyage' என்பார்கள்).. அங்கிருந்து பிரேஸில் போய், இரும்புத்தாது ஏற்றிக் கொண்டு, பின் ஜப்பான் செல்லும்படி கம்பெனியின் உத்தரவு.

இஞ்ஜின் அறையின் பாதிப்பகுதி கடல் மட்டத்திற்குக் கீழே இருந்தது.

நான் இஞ்ஜின் அறையில் நுழைந்த நிமிடத்திலிருந்து, ஒரு வினாடி கூட ஓய்வு இல்லாமல் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருந்தேன். இதுவரை ஒரு இடத்தில் கூட உட்காரவில்லை.. உட்காரவும் கூடாதாம்.. நிற்கவும் விடவில்லை..

விமானத்திலிருந்து வந்த களைப்பு வேறு வாட்டி எடுத்தது.. நான்கு மாடிகள் கொண்ட அந்த இஞ்ஜின் அறையில், 'கீழே போய் கம்ப்ரஸருக்கு ஆயில் ஊற்று' என்றும் 'மேலே வொர்க் ஷாப்புக்குப் போய் ஸ்பானரை எடுத்து வா' என்றும் மேலும் கீழுமாக மற்ற சீனியர் இஞ்ஜினீயர்கள் என்னை ஓட வைத்துக் கொண்டிருந்தார்கள்..

திடீரென்று எல்லோரும் பரபரப்பாக கீழ்த்தளம் நோக்கி ஓட, நானும் தொடர்ந்து ஓடினேன்.

இஞ்ஜினைக் குளிர்விப்பதற்காக உள்ள கடல்நீர் செல்லும் பைப் ஒன்றிலிருந்து தண்ணீர் பீறிட்டுக் கொண்டிருந்தது..

இரண்டாவது இஞ்ஜினீயர் என்னை நோக்கி, "ஜெனரேட்டர் அருகே பெரிய டிரம் இருக்கும்.. போய் விரைவில் எடுத்து வா" என்றார்.

நான் ஓடிப்போய் காலியாக இருந்த இருநூறு லிட்டர் டிரம்மை தூக்கிக் கொண்டு வந்தேன். அதைக் கீழே வைத்து தண்ணீரை அதில் பிடித்தார்கள். பழைய சைக்கிள் ட்யூப் போன்ற ஒரு ரப்பர் ட்யூபை எடுத்து கசிவு உள்ள இடத்தில் கட்டியவுடன் தண்ணீர் கசிவு குறைந்தது..

"என்ன பார்க்கிறாய்.. இதெல்லாம் இங்கே சாதாரணம்.. இதற்கே மலைத்துப்போய் நின்றுவிட்டால், கப்பல் மூழ்குமளவுக்கு ஓட்டை ஏற்பட்டால் நீயெல்லாம் எப்படி சமாளிப்பாய்?"- என்று சிரித்துக் கொண்டே நான்காவது இஞ்ஜினீயர் அருண் என் தோளைத் தட்டினான்.

கப்பலே மூழ்குமளவுக்கு ஓட்டை விழுமா.. 'திக்'கென்றது எனக்கு.. அப்படியெதுவும் என் வாழ்க்கையில் நடந்து விடக்கூடாது என்று நினைத்துக் கொண்டேன்.

"கப்பல் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய விபத்தோ, பிரச்னையோ ஏற்பட்டாலும் பதட்டப்படவே கூடாது.. இதுதான் கப்பல் இஞ்ஜினீயர் தெரிஞ்சுக்க வேண்டிய முதல் பாடம்.. இதே மாதிரி எப்போவாவது பைப்பில் சின்ன லீக் ஏற்பட்டால் இன்னொரு சின்ன பாடமும் கற்றுக் கொள்.. பைப்புக்கு மேலே ஸ்ப்ரே ஆனால் ஒரு சாக்குப்பையை அதன் மேல் போடு.. கீழே லீக் ஏற்பட்டால் ஒரு பக்கெட்டை அதன்கீழே வைத்துவிடு.. அவ்வளவுதான்"-என்று சொல்லிவிட்டுச் சிரித்தான்..

"அப்படியே விட்டுவிட முடியுமா.. ஏதாவது செய்ய வேண்டாமா"- நான்.

"வாழ்க்கையில் எல்லா விஷயத்தையும் எதிர்த்துப் போராடி ஜெயிச்சிட முடியாது.. சில விஷயங்களில் 'காம்ப்ரமைஸ்' பண்ணித்தான் ஆகணும்.. அதுபோலத் தான் இதுவும்.." என்று பெரிய தத்துவத்துக்கு சீரியஸாக விளக்கமும் கொடுத்தான்.

அவன் சொன்னது உண்மைதான். அந்தக் கப்பலில் அதேபோல் 'காம்ப்ரமைஸ்' செய்து கொள்ளாததால் நான் பட்ட அவஸ்தைகள் கொஞ்சமா என்ன..

பின்னர் அந்தக் கசிவை முழுதும் சரிசெய்ய, பைப்பை 'வெல்டிங்' செய்தார்கள்.

மதியம் பனிரெண்டு மணிக்கு சாப்பிட மேலே போனேன்.. சாப்பிட்டு விட்டு மீண்டும் ஒரு மணியிலிருந்து ஐந்தரை மணிவரை தொடர்ந்து வேலை கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். உடம்பு முழுதும் வலித்தது.

வேலை நேரம் முடிந்தவுடன் கண்டிப்பாக அறைக்குப் போய் நன்றாகத் தூங்க வேண்டும் என்று நினைத்தேன்.

ஐந்தரை மணிக்கு எனது உடை முழுதும் எண்ணெய்க் கறையில் நனைந்திருந்தது.. உடலின் எல்லா பாகங்களிலும் கப்பலின் முக்கிய எரிபொருளான 'ஹெவி ஃபியூல் ஆயில்' (Heavy fuel Oil) பட்டு பிசுபிசுத்தது.. அது 'தார்' மாதிரி இருந்தது.. முழங்கை வரை ஒட்டியிருந்த எண்ணெயை சோப்புப் போட்டுக் கழுவினேன்..

கண்ணாடியில் முகம் பார்த்தபோது முகத்திலும் எண்ணெய்க்கறை தெரிந்தது. ஒரு ஆட்டோமொபைல் ஒர்க் ஷாப்பில் வேலை பார்க்கும் மெக்கானிக்குகளை விட பல மடங்கு எண்ணெய்க்கறை.

மூன்றாவது இஞ்ஜினீயர் சண்முகம் தமிழன்.. அவனது டியூட்டி வழக்கமாக நான்கு மணிக்கே முடிந்து விடும்.. ஆனால் அன்று அதிக நேரம் இருந்துவிட்டு, ஐந்து மணிக்குத் தான் மேலே போனான்.

(கப்பல் வாழ்க்கையில் நேரக்கணக்கு பார்த்தெல்லாம் வேலை செய்ய முடியாது.. வழக்கமாக வேலை நேரம் என்று ஒன்று உள்ளது.. ஆனால் டியூட்டி நேரம் முடிந்து விட்டதே என்று உடனே போய்விட முடியாது.. வேலை இருந்தால், அதைமுடித்துக் கொடுத்து விட்டுத்தான் போக வேண்டும்- எத்தனை மணி நேரம் ஆனாலும் சரி!.. அடுத்த நாள் செய்து கொள்ளலாம் என்று தள்ளிப் போடும் வேலையே ஆகாது..)

சண்முகம் போகும் முன் என்னை அழைத்து, "வேலை முடிஞ்சு போகும் முன், நீ எடுத்து வந்த டிரம்மை ஜெனரேட்டர் பக்கத்திலேயே கொண்டுபோய் வை.. புரியுதா"- கண்களை விரித்து எச்சரிப்பது போல் சொன்னான்.

ஒரு சாதரண விஷயம்.. அதற்கு இப்படி விரோதியிடம் பேசுவது போல் சொன்னது ஆச்சர்யமாக இருந்தது. 'சரி'யென்று தலையசைத்தேன்.

போகும்முன், "ஹேய்.. மறந்து விடாதே. இன்று சீஃப் இஞ்ஜினீயரோட பிறந்த நாள். ஆறு மணிக்கு பார்ட்டி ஆரம்பித்து விடும்.. நீ குளித்துவிட்டு யூனிஃபார்ம் போட்டுக் கொண்டு ஆறு மணிக்கு 'பாரில்' இரு" என்றான்.

"எனக்கு மிகவும் களைப்பாக உள்ளது.. நான் கொஞ்ச நேரம் தூங்கி விட்டு வரலாமா?"- சொல்லி முடிப்பதற்குள் என்னை முறைத்தான்.

"முதல் நாளிலேயே சொன்ன பேச்சைக் கேட்பதில்லை என்று முடிவு செய்து விட்டாயோ.. கப்பல் வாழ்க்கை பற்றி யாரும் உனக்கு சொல்லிக் கொடுக்கவில்லையா.. நீ ஒரு ஜூனியர் இஞ்ஜினீயர்.. நாங்கள் என்ன சொல்கிறோமோ அதை மட்டும் செய்.. உனது விருப்பங்களை எல்லாம் ஓரத்தில் தூக்கி எறி.. போ.. போய்க் குளித்து விட்டு சரியா ஆறு மணிக்கு 'பாரில்' இரு.. புரிகிறதா?"- என்று கடுமையான குரலில் சொன்னான்.

கிட்டத்தட்ட ஒரு அடிமையிடம் கட்டளையிடும் தன்மை.. நான் பதில் எதுவும் சொல்லவில்லை.

ஐந்தரை மணிக்கு இரண்டாவது இஞ்ஜினீயர் சுனில் என்னை அழைத்து, "இன்று நீ வேலை செய்தது போதும்.. மேலே போ.. நாளை காலை எட்டு மணிக்கு வேலைக்கு வா." என்றார்.

கப்பலில் இரண்டாவது இஞ்ஜினீயர்தான் இஞ்ஜின் அறையின் இன்சார்ஜ்.. சீஃப் இஞ்ஜினீயரின் உத்தரவுப்படி மற்ற அனைவரிடமும் வேலை வாங்குவது அவரின் பொறுப்பு.

நான் சண்முகம் சொன்னபடி டிரம்மை தூக்கி, முன்பு இருந்த இடத்திற்கு எடுத்துச் செல்ல முயன்றேன்.

"என்ன செய்கிறாய் நீ?"- இரண்டாவது இஞ்ஜினீயர் கேட்டார்.

சண்முகம் செய்யச் சொன்னதைச் சொன்னேன்.

"வேண்டாம்.. இங்கேயே இருக்கட்டும்.. ஒருவேளை மறுபடியும் லீக் ஏற்பட்டால் அவசரத்துக்கு உதவும்.. நீ உன் ரூமுக்குப் போ" என்றார்.

களைப்புடன் இஞ்ஜின் அறையை விட்டு வெளியேறி, எனது அறைக்குள் நுழைந்தேன்..

அறை ஏ.ஸி. செய்யப்பட்டு இதமாக இருந்தது. அந்தப் பெரிய அறையில், ஒரு மூலையில் அழகான மெத்தையுடன் கூடிய படுக்கை.. அதன்மேல் தூய வெண்ணிற விரிப்பு, தலையணை. அறை முழுதும் தரையில் பதிக்கப் பட்டிருந்த மிருதுவான கார்ப்பெட்.

பாத்ரூம் இணைப்புடன் கூடிய டாய்லெட் இன்னொரு மூலையில்.. ஒருபக்க சுவரை ஒட்டி, எழுதுவதற்கும் படிப்பதற்கும் வசதியாக பெரிய டேபிள்.. அதன்மேல் டேபிள் விளக்கு..டெலிபோன்.. அருகே இரண்டு நாற்காலிகள்..

மூன்று பேர் உட்காரக் கூடிய சோபா ஒன்று.. சுவரில் பொருத்தப்பட்டிருந்த அழகான கடிகாரம்.கப்பலின் முன்பக்கத்தைப் பார்க்கும் வசதியுடன் இரண்டு கண்ணாடி ஜன்னல்கள். கிட்டத்தட்ட நட்சத்திர ஹோட்டல் அறையில் உள்ளது போன்ற வசதிகள்.. அறையில் மெலிதான நறுமணம்.. ஏதாவது 'ஸ்ப்ரே' உபயோகப் படுத்தியிருக்க வேண்டும்.

அந்த சோர்வான மனநிலையிலும் அதையெல்லாம் ரசிக்க முடிந்தது.. பாத்ரூமில் நுழைந்து 'ஷவரு'க்கு முன் நின்று தண்ணீரைத் திறந்தேன்.. இதமான சூட்டுடன் தண்ணீர் உடம்பில் பட்டது. வெந்நீர் மற்றும் சாதாரண தண்ணீர்..

அது தேவையென்றாலும், நமது விருப்பத்திற்கேற்ப 'ஷவரி'லிருந்து வெளிப்படும் தண்ணீரின் வெப்பத்தைச் சரிசெய்ய 'ரெகுலேட்டர்கள்' இணைக்கப்பட்ட குழாய் அமைப்பு..சலவை செய்யப்பட்ட துண்டு தயாராக இருந்தது. 'ராஜபோக வாழ்க்கைதான்' என்று தோன்றியது..

ஆனால் அது சுகபோக வாழ்க்கையில்லை.. வெறும் வசதி செய்யப்பட்ட ஏ.ஸி.. சிறைவாழ்க்கை மட்டுமல்ல..

அடிமை வாழ்க்கையும் தான் என்று அடுத்த சில மணி நேரத்தில் புரிய வைத்தார்கள்.

-------------------

கப்பலில் வேலை நேரத்தில் மட்டுமே இஞ்ஜினீயர்கள் 'பாய்லர் சூட்' எனப்படும் உடையில் இருப்பார்கள். (பேண்ட், சட்டை தனித்தனியே இல்லாமல், ஒரே உடையாக தைக்கப்பட்டிருக்கும்..)

உணவுக்காக டைனிங் டேபிளுக்கு வரும்போதும், கப்பலின் 'பார்' பகுதிக்கு வரும்போதும் கருப்பு பேண்ட் (சில கம்பெனிகளில் வெள்ளை பேண்ட்), வெள்ளை சட்டை அணிந்து இருக்க வேண்டும்.. தோள் பகுதியில் அவரவரின் பதவிக்குத் தகுந்த 'அப்லெட்ஸ்' என்ற பேட்ஜ்.. அதில் பொன்னிறத்தால் ஆன பட்டைகள் இருக்கும்.

கேப்டன் மற்றும் சீஃப் இஞ்ஜினீயருக்கு நான்கு பொன்னிற பட்டைகள்.. இரண்டாவது இஞ்ஜினீயர் மற்றும் சீஃப் நேவிகேட்டிங் ஆபிஸருக்கு மூன்று, என பதவிக்கேற்ப குறைந்து கொண்டே போகும்.

நேவிகேட்டிங் டிபார்ட்மெண்ட்டில் உள்ளவர்களுக்கு, இரண்டு பொன்னிற பட்டைக்கிடையே கறுப்பு நிறம் இருக்கும்.. இஞ்ஜின் துறையைச் சேர்ந்தவர்களுக்கு கருப்புக்குப் பதில் 'மெரூன்' நிறம்.. இதுதான் யூனிபார்ம்..

புதிய சீருடை அணிந்து நான் 'பார்' அமைந்திருந்த ஹாலில் நுழைந்தபோது சரியாக மணி ஆறு.

கலர் கலர் விளக்குகள்.. மங்கலான வெளிச்சம்.. சுவரில் பொருத்தப்பட்டிருந்த பலவகை பாட்டில்களில் விஸ்கி, ரம், ஜின் என்று எல்லா மதுபானங்களும்.. கிட்டத்தட்ட ஒரு ஹோட்டல் பார் போலவே தோற்றமளித்தது.

எனக்கு முன்பாகவே மற்ற ஆபிஸர்கள் அனைவரும் அங்கே இருந்தனர். இரண்டாவது இஞ்ஜினீயர், இஞ்ஜின் அறையில் நான்கிலிருந்து, எட்டு மணி வரையிலான டியூட்டியில் இருந்தார் (கப்பலில் டியூட்டி பார்க்கும் முறை பற்றி பின்பு சொல்கிறேன்).

அதேபோல் கப்பலின் கட்டுப்பாட்டு அறையான 'வீல் ஹவுஸ்' (wheel house) என்ற இடத்தில் சீஃப் மேட் என்ற நேவிகேட்டிங் ஆபிஸர் பணியில் இருந்தார். மற்ற ஆபிஸர்கள் அனைவரும் அங்கே இருந்தனர்.

சீஃப் இஞ்ஜினீயரின் கைகுலுக்கி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தேன்.

"சீஃப்.. பார்ட்டியை தொடங்கலாமா.." - என்றார் எலக்ட்ரிக்கல் இஞ்ஜினீயர்..

எல்லோரும் போதையில் மிதக்க ஆயத்தமாக இருந்தனர்..

பிரச்னையில் சிக்கப் போவது தெரியாமல் நானும் உற்சாகமாக நடப்பவற்றைக் கவனிக்கத் தயாரானேன்.


-----------------------------


'தண்ணீர்..தண்ணீர்.. எங்கு பார்த்தாலும் தண்ணீர். ஆனால் ஒரு சொட்டுகூட குடிப்பதற்கு இல்லை'- யாரோ சொன்ன வார்த்தைகள் இந்த கடலைப் பார்த்துத்தான்.
(அவர் காலத்தில் டெக்னாலஜி முன்னேறவில்லை.. இப்போது கடல் தண்ணீரைத்தான் குடி நீராக மாற்றி கப்பலில் குடிக்கிறோம் என்பது வேறு விஷயம்.)

ஆனால், தண்ணீரில் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தின் பெரும்பகுதியை ஒருசிலர் 'தண்ணி'யிலேயே செலவழிக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை..

கப்பலின் 'பாரி'ல் நான் நுழைந்த அடுத்த இரண்டு நிமிடங்களில் பிறந்த நாளைக் கொண்டாட பிலிப்பினோ பணியாளர்களும் ஆபிஸர்களின் பாருக்குள் வந்து விட்டனர்.

தினமும் மாலைநேரம் ஆகிவிட்டாலே குறைந்தது இரண்டு கேன் பீர் ஆவது குடிக்கும் பிரிட்டிஷ்காரர்களும், பிலிப்பினோக்களும் பார்ட்டி நேரத்தில் நள்ளிரவைத் தாண்டி அதிகாலை நான்கு மணிவரையிலும் குடிப்பார்கள் என்பதை அன்று இரவு தெரிந்து கொண்டேன்.

இங்கே 'பார்ட்டி' என்பது அதிகமாகக் குடிக்க இவர்களாகவே தேடிக்கொள்ளும் ஒரு காரணம்.

"கமான் யங் மேன்.. என்ன குடிக்க விரும்புகிறாய்.. விஸ்கி, ஜின், பகார்டி, வோட்கா.." - வரிசையாக சுவரில் பொருத்தப்பட்டிருந்த பாட்டில்களைக் காட்டி என்னைப் பார்த்தார் சீஃப் இஞ்ஜினீயர்.

தயக்கமாக இருந்தாலும் தைரியப்படுத்திக் கொண்டு, "ப்ளீஸ் கிவ் மீ ஆரஞ்ச் ட்ரிங்க்" என்றேன்.

"வ்வாட்.. ஆரஞ்ச்..?" -போலியான அதிர்ச்சியுடன் முகம் சுளித்து, "இன்று எனது பிறந்தநாள் பார்ட்டி.. ஆனால் நீ ஸாஃப்ட் ட்ரிங்க் கேட்கிறாய்.. ஐ டோண்ட் திங்க் யு வில் கெட் இட்.. ஓகே.. அட்லீஸ்ட் பீர் குடிக்க உனக்கு அனுமதி தருகிறேன்.."- என்று சொல்லிவிட்டு ஒரு 'ஹெனிக்கன்' பீர் டின்னை எடுத்து என்னிடம் நீட்டினார்.

தயக்கத்துடன், "இல்லை சீஃப்.. எனக்கு பழக்கமில்லை.. ஆரஞ்ச் மட்டும் கொடுங்கள்" என்றேன்.

நான் சாதாரணமாகத் தான் சொன்னேன்.. ஆனால், அதுவே அவரின் கோபத்தைத் தூண்டிவிட்டதன் காரணம் எனக்குப் புரியவில்லை..

"நீ ஒரு ஜூனியர் மோஸ்ட் இஞ்ஜினீயர்.. உன்னிடம் அனுமதி கேட்டது என் தவறு.. இங்கே உன் விருப்பத்திற்கு இடமில்லை.. நான் சொல்வதைக் கேள்.. நீ பீர் குடிக்கிறாய்.. இது என் உத்தரவு.." - என்று கடுமையான குரலில் கோபத்துடன் சொன்னவரை எனக்கு அந்த வினாடியில் பிடிக்காமல் போனது.

எல்லோர் முன்னிலையிலும் அவமானப்படுத்தப் பட்ட உணர்வில் கூசிபோனேன். பார்ட்டியின் ஆரம்பத்திலேயே சீஃப் இஞ்ஜினீயர் கோபப்படுவதை மற்ற யாருமே ரசிக்கவில்லை.

"கமான். ரிலாக்ஸ் அண்ட் எஞ்ஜாய் யுவர்ஸெல்ஃப்.. வாழ்க்கையை அனுபவிக்கத்தானே கடல் வாழ்க்கையில் சேர்ந்திருக்கிறாய்.. ஜஸ்ட் பீர் தானே.." என்றார் என் அருகில் நின்ற எலக்ட்ரிக்கல் இஞ்ஜினீயர்.. இதற்கு முன்பு இந்திய கடற்படையில் வேலை பார்த்தவர்.

"இல்லை ஸார்.. நான் இதுவரை குடித்ததில்லை.. எனக்குப் பிடிக்காது.." -திடமாகச் சொன்னேன்.


"எல்லோரும் முதல்தடவை ஆரம்பிப்பதற்கு முன்பு குடித்திருக்க மாட்டார்கள்தான்.. இன்றிலிருந்து நீயும் ஆரம்பித்து விடு. இதற்குமுன் குடித்ததேயில்லை என்கிறாய்.. பின் எப்படி பிடிக்கவில்லை என்று சொல்கிறாய்?"- மூன்றாவது இஞ்ஜினீயர் சண்முகம் கேலியாகக் கேட்டான். (நியாயமான கேள்வி..! )

நான் அந்த இடத்தில் அந்நியமாகிப் போனதை உணர்ந்தேன். எனது பழக்க வழக்கங்களில் மற்றவர்கள் தலையிட்டு, கட்டாயப்படுத்துவதை ஏற்க முடியவில்லை.. மற்றவர்கள் சமாதானப்படுத்தி என்னை குடிக்க வைக்க முயற்சிப்பதை சீஃப் இஞ்ஜினீயரும் ரசிக்கவில்லை..

"லீவ் ஹிம்.. நான் அவனை கவனித்துக் கொள்கிறேன்.. பீர், இல்லையேல் Hard Drinks.. இரண்டில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க உனக்கு வாய்ப்பளிக்கிறேன்.. நீ ஆரஞ்சோ, கோக்கோ கோலாவோ இந்தக் கப்பலில் தொடவே கூடாது.."- என்று என்னைப் பார்த்து சொல்லிவிட்டு, "கமான்.. லெட்'ஸ் ஸ்டார்ட் த பார்ட்டி" -என்று மற்றவர்களிடம் திரும்பி விட்டார்..

என்னால் மற்றவர்களின் சந்தோஷம் குறைவது வருத்தத்தை அளித்தது.. ஆனால் அதற்காக ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரத்தில் மற்றவர்கள் அதிகாரம் செய்வதை யார் தான் அனுமதிக்க முடியும்.. அதுதான் கப்பல் வாழ்க்கையின் சாபக்கேடு.. அங்கே அப்படித்தான் நடந்தது..

முதல் நாளிலேயே இந்த வாழ்க்கையின் அவலங்கள் வெளிப்பட ஆரம்பித்து விட்டன. அந்த நிமிடத்தில், அந்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்த தவறுக்காக என்னையே வெறுத்தேன். அதன்பின் என்னை யாரும் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

நான் மௌனமாக நிற்பதைப் பார்த்த சீஃப், "நீ அப்படியே நில்.. இதில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்தால் மற்றவர்களுடன் சேர்ந்து உட்கார அனுமதிக்கிறேன்.. இல்லையேல் பார்ட்டி முடியும் வரை நின்று கொண்டே இரு.. எவ்வளவு நேரம் நிற்கிறாய் என்று நானும் பார்க்கிறேன்.." - கோபத்துடன் சொல்லிவிட்டு, க்ளாஸில் 'ஜின்'னுடன் டானிக் வாட்டர் கலந்து, ஐஸ் துண்டுகள் மிதக்க மற்றவர்களுடன் சேர்ந்து உட்கார்ந்து விட்டார்.

பலரது முன்னிலையில், எந்தத் தவறும் செய்யாததற்கு தண்டனை அனுபவிப்பது அதுதான் முதல்முறை. பார்ட்டி மியூஸிக், டான்ஸ் என்று களைகட்டிக் கொண்டிருந்தது.

நான் நின்று கொண்டேயிருந்தேன்.அரைமணி நேரத்துக்கு மேல், ஒரே இடத்தில் கால் வலிக்க நின்றதைக் கண்டு கடைசியில், "தொலைந்து போ..உட்கார்" -என்று திட்டி அனுப்பிவிட்டார் சீஃப் இஞ்ஜினீயர்.

வெற்றி பெற்றதாக அன்று நினைத்தது எவ்வளவு தவறு என்று மிகச் சீக்கிரம் புரிந்தது.. அன்று நள்ளிரவே அதை புரியவைத்தார்கள்.

-------------------



பார்ட்டி நடந்து கொண்டிருக்கும் போதே நான் ரூமிற்குப் போய் தூங்க வேண்டுமென்று விரும்பினேன்.

(விமானத்தில் வந்ததால், இந்தியாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான நேர வித்தியாசத்தால் உடலின் தினசரி பழக்கத்திலும் மாறுதல் ஏற்பட்டிருந்தது).

ஆனால் பார்ட்டியின் இடையில் விட்டுவிட்டுப் போக முடியாதே..பனிரெண்டு மணி ஷிஃப்ட் டியூட்டிக்குப் போக வேண்டிய சண்முகமும், வீல் ஹவுஸ் டியூட்டி பார்க்கும் இரண்டாவது ஆபிஸரும் ஒன்பது மணிக்கே தூங்கப் போய்விட்டார்கள்.

கடைசியில், ஒருவழியாக பதினொன்றரை மணிக்கு, "நீ களைப்பாய் இருப்பாய். தூங்கப் போ" என்று அனுப்பி வைத்தார் கேப்டன்.

தப்பித்த மகிழ்ச்சியில் நான் அறைக்கு ஓடிப்போய் படுக்கையில் விழுந்ததுதான் தெரியும்.. உடனேயே தூங்கிப்போனேன். ஆழ்ந்த தூக்கத்திலிருந்த என்னை டெலிபோன் சத்தம் கலைத்தது.

இருட்டில் தடுமாறி, இடம் கண்டுபிடித்து டெலிபோனை எடுத்தேன். நான் எங்கேயிருக்கிறேன் என்று முதலில் குழப்பமாக இருந்தது. இன்னமும் தூக்கக் கலக்கத்தில் இருந்தேன்.

"ஹலோ" என்றேன்.

"நான் சண்முகம் பேசறேன்"- என்றது எதிர்முனை.

'யார் சண்முகம். கேள்விப்படாத பெயராக இருக்கிறதே.. தூங்கும்போது எதற்கு கூப்பிடுகிறான்.'

எதுவும் புரியவில்லை. யோசித்து, பின் சட்டென்று விழித்துக் கொண்டேன்.. நான் இருப்பது கப்பல் என்று புரிந்தது..

சுதாரித்து பதில்சொல்லுமுன், "என்னடா.. தூங்கிட்டு இருந்தியா?" என்று அதட்டல் கேட்டது.

கடிகாரம் பார்த்தேன். மணி நள்ளிரவு இரண்டு மணி ஆகியிருந்தது. இந்நேரத்தில் தூங்காமல் எப்படி..?

"ஆமாம்.." என்றேன்.

"சரி சரி. டிரஸ்ஸை மாத்திட்டு கொஞ்சம் இஞ்ஜின் ரூமிற்கு வர்றியா. உங்கிட்ட ஒரு விஷயம் டிஸ்கஸ் பண்ணனும்.. இன்னும் ரெண்டே நிமிஷத்தில் நீ கண்ட்ரோல் ரூமில் இருக்கணும்"- மறுபடியும் அதே மாதிரியான மிரட்டல் குரல்.

எனக்கு எதுவும் புரியவில்லை.. நல்ல களைப்பில் தூங்கிக் கொண்டிருந்தவனை இடையில் எழுப்பி, இந்த நேரத்தில் கீழே வரச் சொல்வது என்ன நியாயம்?.. கொஞ்சம் கூட மனிதாபிமானம் கிடையாதா..

வேதனை கலந்த எரிச்சலுடன் இஞ்ஜின் ரூமுக்கான டிரெஸ் அணிந்து வேகமாக கீழே போனேன்.

இஞ்ஜின் கட்டுப்பாட்டு அறையில் சேரில் உட்கார்ந்து இருந்த சண்முகத்தின் கால்கள் இரண்டும் முன்னால் இருந்த உயரமான டேபிள் போல் அமைந்த 'டெலிகிராப் பேனலி'ன் மேலே இருந்தன.

என்னைப் பார்த்தவுடன் எழுந்தான்.

"நல்ல தூக்கத்தை இடையில் கலைச்சிட்டேனா".

நான் பதில் சொல்லாமல் பார்த்தேன்..

"என்னடா பதிலைக் காணோம்.. சாயந்தரம் நான் போறதுக்கு முன்னால டிரம்மை எடுத்து பழைய இடத்தில வைக்கச் சொன்னேனே.. ஞாபகமில்லையா?"

எனக்கு நன்றாகவே ஞாபகம் இருந்தது. ஆனால் இரண்டாவது இஞ்ஜினீயர் அங்கேயே வைக்கச் சொல்லி விட்டாரே..

"இல்லை ஸார்.. நான் டிரம்மை எடுத்துப் போறேன்னு தான் சொன்னேன்.. ஆனால்.."-முடிக்குமுன் பளீரென்று என் கன்னத்தில் அறை விழுந்தது.

மிச்சமிருந்த கொஞ்ச தூக்கமும் காணாமல் போனது. கன்னம் வலிக்க, அதிர்ச்சியுடன் அவனையே பார்த்தேன்.. பார்ட்டியின் போது குடித்திருந்த விஸ்கி அவன் கண்களில் மிச்சமிருந்தது.

"உனக்கு திமிர்டா.. கப்பல் வாழ்க்கைன்னா என்னன்னு இன்னும் தெரியல.. 'இவன் என்ன சொல்றது, நாம என்ன கேட்கறது'ன்னு அலட்சியம்.."

நான் இரண்டாவது இஞ்ஜினீயர் டிரம்மை அங்கேயே வைத்துவிட்டுப் போகச் சொன்னதைப் பற்றி சொல்ல வாயெடுக்குமுன் எல்லாம் நடந்து விட்டது. மீண்டும் சொல்ல ஆரம்பித்தேன்.

ஆனால் என்னைப் பேசவிடாமல், "ஸ்டாப்.. டூ வாட் ஐ ஸே.. போ.. இப்பவே அந்த டிரம்மை எடுத்துப் போய் இருந்த இடத்தில் வச்சிட்டு தூங்கப்போ.. ஓடு.."- என்று என் தோளைப் பிடித்து தள்ளிவிட்டான்.

எனக்கு அவமானத்தில் உடல் நடுங்கியது. என்னையும் மீறி கண்களில் கண்ணீர்.

ஒரு சின்ன விஷயம்.. அவன் நினைத்திருந்தால் அவனோடு இப்போது டியூட்டியில் இருக்கும் 'ஆய்லர்' எனப்படும் பணியாளரிடம் சொல்லியிருந்தாலே போதும். எடுத்து வைத்திருப்பார். அரை நிமிட வேலை.

என்னை இப்படி பாதி தூக்கத்தில் அறையிலிருந்து இறங்கி வரச் செய்து, கன்னத்தில் அறைந்து அதைச் செய்யச் சொல்வதற்கு அவசியமே இல்லை.

நான் ஏன் அதைச் செய்யவில்லை என்பதையாவது பொறுமையோடு கேட்டிருக்கலாம். நான் எதுவும் பேசாமல், வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, கீழே போய் அந்த டிரம்மை எடுத்துக் கொண்டுபோய் பழைய இடத்தில் வைத்துவிட்டுத் திரும்பினேன்.

இது என்னவிதமான தண்டனை?.. நான் ஏதோ பெரிய கற்பனைகளோடு, கடல் வாழ்க்கை பற்றிய எதிர்பார்ப்புகளோடு வந்துவிட்டிருந்தேன்.. இங்கே வாழ்க்கை கொத்தடிமைகளை விடவும் மோசமாக இருக்கிறதே

"போ.. இப்போ போய்த் தூங்கு.. இன்னிக்கு அனுபவம் என்னிக்குமே மறக்க மாட்டே.. சீனியர் சொல்லை அலட்சியப்படுத்தினா என்ன நடக்கும்னு புரியுதில்லே"- என்று இன்னும் கோபம் குறையாமல் சொன்ன அவனது மனநிலையைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை.

படுக்கையில் விழுந்த நான் அதன்பின் தூக்கம் வராமல் நெடுநேரம் விழித்திருந்தேன். இயலாமையால் என் கண்ணில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

எந்தத் தவறுமே செய்யாததற்கே இந்தத் தண்டனையா..

ஆனால், அது ஒரு ஆரம்பமே.. சீஃப் இஞ்ஜினீயரின் பார்ட்டியில் நான் குடிக்க மறுத்தது தவறு என்று மறுநாள் விடிந்தவுடன் புரிந்தது..

--------------------

நான் மேலே அறைக்கு வந்து படுக்கையில் படுத்தேன்..

நீண்ட நேரம் தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு, பின் எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை.

கடிகாரத்தின் அலாரம் என்னை எழுப்பியபோது கண்ணில் எரிச்சல் நிறைய மிச்சம் இருந்தது. முந்தின இரவில் படுக்குமுன் ஏழு மணிக்கு எழுவதற்கு அலாரம் வைத்திருந்தேன்.

தலை பாரமாக இருந்தது. சரியாக தூங்காததால் உடலும் வலித்தது.

கண்ணாடி ஜன்னல் வழியாக கடலைப் பார்த்தேன்.வெளியே கடல் மிகவும் சீற்றத்துடன் இருந்தது. அலைகள் தளத்தின் உயரத்துக்கு வரும்போல் தோன்றியது..

கப்பலும் அதிகமாக அசைய ஆரம்பித்திருந்தது. வானம் மந்தமாக இருந்தது. மழை வருமென்று தோன்றியது. எனது மேஜை மேலிருந்த பொருட்கள் கப்பலின் ஆட்டத்தால் மெதுவாக நகர ஆரம்பித்தன.

'பே ஆஃப் பிஸ்கி' (Bay of Piscay) கடல் பகுதி மிகவும் சீற்றமானது என்றும், இந்தக் கடலில் நுழைந்து வெளியே வருவது எப்போதும் சோதனையாகவே இருக்கும் என்றும் கேள்விப்பட்டிருந்தேன் (பல கப்பல்கள் அந்தக் கடலில் மூழ்கியுள்ளன)..

ஒருவேளை கப்பல் அந்தக் கடல் பகுதியில் நுழைந்திருக்கக் கூடும். குளித்து முடித்து டைனிங் ஹாலுக்குச் சென்றேன்..

நான்காவது எஞ்ஜினீயர் அருணும் வந்திருந்தான்.

"நீ முதல் முறையாக கடலுக்கு வந்திருக்கிறாய்.. 'ஸீ ஸிக்னெஸ்' (Sea sickness) உன்னை என்ன பாடுபடுத்தப் போகிறதோ" என்று பயமுறுத்தினான்.

புதிதாக கடலில் பயணம் செய்பவர்களுக்கு வாந்தி போன்ற சிரமங்கள் ஏற்படும். இதைத்தான் 'ஸீ ஸிக்னெஸ்' என்பார்கள். சுருக்கமாகச் சொல்லிவிட்டேன்..

(இதுபற்றி சரியான மருத்துவ ரீதியான விளக்கம் கேட்பவர்களுக்கு மட்டும், நான் எங்கோ படித்த ஒருவரின் குறிப்பை இங்கே தருகிறேன்..

Sea sickness: ".. the endolymph in my semicircular canals was stimulating the endings of my cochlear nerve, which transmitted influences to the Brain and initiated the reflex arc of vomitting. It should be easy for a little will power to inhibit the reflex....There may be psychological element. But there is obviously some fault with the balancing apparatus in the ear, and probably with the gastric nerves..

- யாரோ ஒருவரின் அனுபவம் இது, உடற்கூறு சம்பந்தப்பட்ட வார்த்தைகளுடன்.. தமிழ்ப்படுத்துவது சுலபமல்ல என்று தோன்றியதால் அப்படியே தந்துவிட்டேன்.)


"பே ஆஃப் பிஸ்கி வரப்போகிறது.. சரியாக சாப்பிடக்கூட முடியாது.. வெறும் பிஸ்கெட் மட்டும் தான் சாப்பிட முடியும்.. அதனால் எனக்கு இந்தக் கடல் 'பே ஆஃப் பிஸ்கெட்' தான்" என்றான் அருண்.

அப்போது அங்கே வந்த எலக்ட்ரிக்கல் இஞ்ஜினீயர் "சும்மா பயமுறுத்தறான்.. ஒண்ணும் ஆகாது.. பேசாம ரெண்டு பெக் விஸ்கி குடி.. எல்லாம் சரியாப் போகும்.. எனக்கு இது 'பே ஆஃப் விஸ்கி' தான்" என்றார் சிரித்துக் கொண்டே..

டைனிங் அறையில் நீளமான மேஜைமீது சலவை செய்யப்பட்ட வெண்ணிற துணிவிரிப்பு. நட்சத்திர விடுதியில் இருப்பது போல் நேர்த்தியாக ஒவ்வொரு பொருளும் அதனதன் இடத்தில் வைக்கப்பட்டு சாப்பாட்டு அறை ரசிக்கக் கூடியதாகவே இருந்தது.

'சாப்பிடுவதற்கு என்ன இருக்கும்.?'- யோசித்துக் கொண்டே தயக்கத்துடன் அங்கே பணியில் இருந்த பிலிப்பினோ பணியாளரை அணுகினேன்.

அந்தக் கப்பலில் சமையல் செய்வதற்கு இரண்டு சமையற்காரர்கள் இருந்தனர்.. 'Chief Cook' என்பவர் பிரிட்டிஷ் மற்றும் இந்திய ஆபிஸர்களுக்கான உணவைத் தயார் செய்வார். Second cook என்ற அடுத்த நிலை சமையற்காரர், பிலிப்பினோ பணியாளர்களுக்காக சமைப்பவர். இருவருமே பிலிப்பைன்ஸ் தேசத்தவர்.

சமையல் டிபார்ட்மெண்டில் அவர்களைத் தவிர இரண்டு உதவியாளர்களும் உண்டு. 'ஸ்டூவர்ட்ஸ்' என்ற பதவியில் இருக்கும் இவர்கள் கப்பலின் தங்கும் தளம், மற்றும் ஆபிஸர்களின் அறைகளைச் சுத்தம் செய்யும் பணி செய்வதோடு, உணவு பரிமாறும் வேலையையும் கவனிப்பவர்கள்..

"பிரேக் ஃபாஸ்ட், டேபிளில் இருக்கிறது. வேறு ஏதாவது வேண்டுமானால் கேள்" என்றார் சீஃப் குக்.

டைனிங் டேபிளில் ப்ரெட் டோஸ்ட், ஸீரியல், ஜூஸ், பால் எல்லாம் இருந்தன. பேக்கன்(Bacon), Sausage என்று 'மெனு'வில் இருந்த பெயர்கள் எதுவும் புரியாததால் அதை எல்லாம் தொடவேயில்லை.

'பிரிட்டிஷ் கம்பெனி கப்பலில் வேலை பார்க்கப் போகிறாய். உங்கள் சவுத் இந்தியன் இட்லி, வடை, தோசை எல்லாம் கிடைக்காது. அங்கே உள்ள உணவுப் பழக்கத்துக்கு தயாராக இருந்து கொள்'- எனது கம்பெனியின் மும்பை அலுவலகத்தில் ஏற்கனவே சொல்லி அனுப்பியிருந்தார்கள். சமாளித்துத்தான் ஆகவேண்டும்.

கப்பல் அலைகளாலும், காற்றினாலும் இடதுபுறமும் வலதுபுறமும் ஆடுவதை 'ரோலிங்' என்பார்கள். அப்போது ரோலிங் அதிகரித்திருந்தது.

அருண் சொன்னது சரிதான். ஜூஸ், ப்ரெட், பால் எல்லாம் சாப்பிட்ட ஐந்தே நிமிடத்தில் வாந்தியெடுத்தேன்.. கடைசியில் நான்கு பிஸ்கட் துண்டுகள் மட்டும் சாப்பிட்டுவிட்டு, எட்டு மணிக்கு இஞ்ஜின் கட்டுப்பாட்டு அறையில் போய் நின்றேன்.

இரண்டாவது இஞ்ஜினீயர் என்னைப் பார்த்துவிட்டு, கடிகாரத்தையும் பார்த்தார்.

"முதல்நாள் என்பதால் உன்னை மன்னிக்கிறேன்.. இங்கே எட்டு மணிக்கு இருக்க வேண்டுமென்றால் பத்து நிமிடம் முன்னதாகவே வந்து விட வேண்டும்.. புரிகிறதா?"

நான் 'சரி' என்பதாக தலையாட்டினேன்.

"நேற்று பார்ட்டியில் குடிக்க மறுத்து விட்டாயல்லவா.. சீஃப் இஞ்ஜினீயர் உன்மீது கோபமாக இருக்கிறார். இந்த வாழ்க்கையில் சிறிது வளைந்து கொடுக்க பழகிக் கொள்.. திடமாக இருக்க நினைத்தால் உடைந்து தான் போவாய்.. நஷ்டம் உனக்குத்தான். இதுமாதிரி நிறைய விஷயங்களில் உன் கொள்கைகளை மாற்றிக்கொள்." என்றார்.

சண்முகம் நேற்று இரவு கன்னத்தில் அறைந்தது பற்றி சொல்லலாம் என்று நினைத்திருந்தேன்.. இப்போது அப்படியே விழுங்கிவிட்டேன்.. பயனிருக்கப் போவதில்லை என்று தெரிந்துவிட்டது.

"இன்னொரு விஷயம்.. நீ கப்பல் வாழ்க்கைக்கு புதிது என்பதால் எட்டு மணியிலிருந்து ஐந்தரை மணி வரை பகல் நேர வேலை மட்டும் இப்போதைக்குப் பார். உனக்கு எல்லா பைப்லைனையும் ட்ரேஸ் செய்யும் வேலை தரலாம் என்று நேற்று நினைத்தேன்.. ஆனால் சீஃப் இஞ்ஜினீயர் உன்னை 'பில்ஜ் க்ளீனிங்' வேலையில் போடச் சொல்லி உத்தரவிட்டு இருக்கிறார்..

அவர் உத்தரவை மீறி என்னால் எதுவும் செய்ய முடியாது. அவர் கோபம் தணியும் வரை அந்த வேலைதான் உனக்கு.. அருணிடம் கேள்.. நீ என்ன செய்ய வேண்டுமென்று சொல்லித்தருவான்."- இரண்டாவது இஞ்ஜினீயர் சுனில் சொல்லிவிட்டுப் போய் விட்டார்.


கப்பலில் இஞ்ஜினீயர்களாக சேர்பவர்களின் வேலை, அங்கே உள்ள நூற்றுக்கணக்கான இயந்திரங்களை கவனித்து பராமரிப்பதும், அவற்றில் ஏதாவது பிரச்னை ஏற்படும் போது சரி செய்வதும் தான்..

கப்பலை இயக்க 'மெயின் இஞ்ஜின்' என்ற பெரிய இஞ்ஜின் உண்டு.. அதனுடன் இணைக்கப் பட்டுள்ள ஷாஃப்டில் தான் ஃபேன் போன்ற அமைப்பில் உள்ள 'ப்ரொப்பல்லர்' (propeller) பொருத்தப் பட்டுள்ளது.. அது கப்பலுக்கு வெளியே தண்ணீரில் இருக்கும். இஞ்ஜினுடன் சேர்ந்து அதுவும் சுழல்வதால், தண்ணீர் பின்னுக்குத் தள்ளப்பட்டு அதனால் கப்பல் முன்புறம் செல்கிறது.. இப்படித்தான் கப்பல் தண்ணீரில் செல்கிறது.


இந்த மெயின் இஞ்ஜின் தொடர்ந்து நல்ல முறையில் இயங்க சின்னச் சின்ன பம்புகள், மோட்டார்கள், ஹீட்டர்கள் போன்ற பல உபகரணங்கள் இயங்க வேண்டும். இதையெல்லாம் இயக்க மின்சாரம் தேவை.


கப்பலில் மின்சாரம் தயாரிக்க ஜெனரேட்டர்கள் உண்டு.. பொதுவாக மூன்று ஜெனரேட்டர்கள் இருக்கும். இவற்றின் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தைக் கொண்டு, கப்பலின் இதர தேவைகளுக்குப் பயன்படும் எல்லா சாதனங்களும் இயங்குகின்றன.. விளக்கு எரிய தேவைப்படும் மின்சாரமும் இதிலிருந்து தான் கிடைக்கிறது.


கிட்டத்தட்ட ஒரு 'மினி பவர் ஸ்டேசனே' கப்பலுக்குள் இருக்கிறது. அதில் எல்லா இயந்திரங்களுக்கும் தேவைப்படும் எண்ணெய், இயந்திரங்களைக் குளிர்விக்கும் தண்ணீர், எண்ணெய் மற்றும் தண்ணீரை சூடுபடுத்த உதவும் நீராவி, அதிக அழுத்தத்தில் இருக்கும் காற்று எல்லாம் தனித்தனி குழாய்களில் கொண்டு செல்லப படுகிறது..


(இதைக் குறிப்பிடாவிட்டால், தரப்பட்ட வேலையால் எனக்கு என்ன பிரச்னை என்பதை புரிந்து கொள்வது கஷ்டம்.. மெரைன் இஞ்ஜினீயரிங் பாடம் நடத்துவது போல இருந்தால் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளவும்).

இயந்திரங்களில் ஏதாவது பிரச்னை ஏற்படும்போது எந்த இயந்திரம் எந்த பைப்லைனுடன் இணைக்கப் பட்டுள்ளது என்பதெல்லாம் தெரிந்திருக்க வேண்டும். அது தெரிந்தால் தான் பிரச்னை ஏற்படும் போது அதை சரி செய்யவோ, தேவையான 'வால்வு'களை மூடவோ முடியும்.. இதற்கு இஞ்ஜின் அறையில் உள்ள பைப்லைன் அமைப்பு முழுதும் மனப்பாடம் ஆகவேண்டும்.. எல்லா கப்பலிலும் இவை ஒரே மாதிரி இருப்பதில்லை.


எந்தக்கப்பலில் புதிதாக சேர்ந்தாலும் அந்த கப்பலில் சேர்ந்தவுடன் எல்லா இஞ்ஜினீயர்களும் செய்ய வேண்டிய முதல் வேலை, இந்த 'பைப் லைன் ட்ரேஸிங்' தான்.. அதனால் மெரைன் இஞ்ஜினீயராக வேலை செய்ய வந்த எனக்கு 'பைப் லைன் ட்ரேஸ்' பண்ணக்கூடாது என்ற சீஃப் இஞ்ஜினீயரின் உத்தரவு மிகுந்த அதிர்ச்சியை அளித்தது.. அவர் தன் பழிவாங்கும் செயலை உடனே தொடங்கி விட்டது புரிந்தது..

-------------


கப்பலில் பொதுவாக வேலை நேரம் என்பது நான்கு மணி நேர ஷிஃப்ட் முறையில் இயங்குகிறது.. ஒவ்வொரு நான்கு மணி நேர ஷிஃப்ட் முறையை இங்கே வாட்ச் கீப்பிங் (watch keeping) என்கிறார்கள்.

இஞ்ஜின் அறையைப் பொருத்த வரை, இருபத்திநாலு மணி நேர வேலையை இரண்டாவது, மூன்றாவது, நான்காவது இஞ்ஜினீயர்கள் சமமாக பிரித்துக் கொண்டு செய்கிறார்கள்.

நள்ளிரவு பனிரெண்டு மணி முதல் அதிகாலை நான்கு மணி வரையான வாட்ச் கீப்பிங் டியூட்டியை மூன்றாவது எஞ்ஜினீயர் பார்த்துக் கொள்கிறார். நான்கு மணியிலிருந்து காலை எட்டு மணி வரை இரண்டாவது இஞ்ஜினீயரின் டியூட்டி..

அதன்பின் எட்டுமணியிலிருந்து பனிரெண்டு மணி வரை நான்காவது இஞ்ஜினீயர் பார்த்துக் கொள்வார். மறுபடியும் பனிரெண்டு மணியிலிருந்து நான்கு மணி டியூட்டிக்கு மீண்டும் மூன்றாவது இஞ்ஜினீயர் வந்துவிடுவார்..
இப்படி ஒருநாளின் எட்டு மணி நேர வேலையை தொடர்ந்து செய்யாமல், இரு நான்கு மணி நேரங்களாகப் பிரித்துச் செய்கிறார்கள்.

கணக்குப்படி எட்டு மணி நேர வேலை என்றாலும், பொதுவாக நான்கு மணி நேர வாட்ச் கீப்பிங் டியூட்டி முடிந்த பிறகு, ஒவ்வொரு இஞ்ஜினீயரும் குறைந்த பட்சம் இரண்டு மணி நேரமாவது ஒரு நாளில் அதிக நேரம் வேலை பார்க்க வேண்டும். (ஓவர் டைம் சம்பளம் எல்லாம் ஆபிஸர் லெவலில் இருப்பவர்களுக்குக் கிடையாது)

கப்பலின் இயந்திரங்கள் இயங்கும்போது கவனித்துக் கொள்ள, ஒவ்வொரு நாளும் எட்டு மணி நேரமும், மற்ற ரிப்பேர் வேலை, பாகங்களை மாற்றி பழுதுநீக்கும் பணிக்காக கூடுதலாக இரண்டு மணி நேரம் என்று பத்து மணி நேரம் ஒவ்வொரு இஞ்ஜினீயரும் வேலை பார்க்க வேண்டும்.

(இதே போல் கப்பலின் 'வீல் ஹவுஸ்' எனப்படும் கப்பலின் கட்டுப்பாட்டு அறையில் மூன்று நேவிகேட்டிங் ஆபிஸர்கள் தங்கள் பணியை பிரித்துக் கொள்கிறார்கள்.. இஞ்ஜின் அறைக்கு சீஃப் இஞ்ஜினீயர் தலைவர்.. நேவிகேட்டிங் ஆபிஸர்களுக்கு கேப்டன் தலைவர்..)


ஆனால் இப்போதைய நவீன கப்பல்களில் இந்த வாட்ச் கீப்பிங் முறை மாறி, UMS (unattended machinery space) என்ற முறையில் இயங்குவதால், எல்லா இஞ்ஜினீயர்களும் பகலில் மட்டும் வேலை பார்த்துவிட்டு, இரவில் இஞ்ஜின் அறை ஆளில்லாத பகுதியாக மாறிவிட்டது..

நான் சேர்ந்திருந்த கப்பல் பழைய 'வாட்ச் கீப்பிங்' முறையில் இயங்கி வந்தது.

---------------

எட்டு மணி முதல் பனிரெண்டு மணி வரையான டியூட்டியை நான்காவது எஞ்ஜினீயர் அருண் பார்த்துக் கொண்டிருந்தான்.

அருண் டெல்லிக்காரன்.. இருபத்து ஐந்து வயது இருக்கும்.

அவனிடம் போய் நின்றேன். திரும்பிப் பார்த்துவிட்டு, வேகமாக இந்தியில் ஏதோ சொன்னான். நான் எதுவும் புரியாமல் விழித்தேன்.

மேலே ஏதோ சொல்ல முயலும்முன் "ஸாரி.. ஐ டோண்ட் நோ ஹிந்தி.. ப்ளீஸ் டெல் மீ இன் இங்கிலீஷ்" என்றேன்.

சட்டென்று சிரித்து விட்டான். பரவாயில்லை, இவனுக்காவது சிரிக்கத் தெரிந்திருக்கிறது. ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தான்.

"இந்த மதராஸிகளிடம் இதுதான் பிரச்னை.. இந்தியன் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.. ஆனால் ஹிந்தி தெரியாது என்பார்கள்.. அதை நினைத்து நீ வெட்கப்படவில்லையா.."- அவன் சிரித்துக் கொண்டே பேசினான். அதில் சிறிது கூட கோபமில்லை.

"என்ன செய்வது.. நான் படித்த பள்ளியில் ஹிந்தி கிடையாது.. இங்கே கப்பலில் தேவைப்பட்டால் கற்றுக் கொள்கிறேன்" என்றேன்.

அவன் சிரித்து விட்டு, "அதை விடு, ஆரம்பத்திலேயே சீஃப் இஞ்ஜினீயரின் பகையைச் சம்பாதித்து விட்டாய்.. வேறு வழியில்லை.. என்னோடு வா.. என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறேன்"- என்னை கீழ்த்தளத்துக்கு அழைத்துப் போய், நான் செய்ய வேண்டியதை விளக்கினான்.

எனக்குப் புரிந்தது. இங்கே 'பில்ஜ்' (Bilge) என்று அழைக்கப்படும் அந்த இடத்தில் எல்லா இயந்திரங்களின் கழிவு நீர் மற்றும் எண்ணெய்க் கசிவும் சேரும்.. குறுக்கும் நெடுக்குமாக பல சைஸ்களில் நூற்றுக்கணக்கான பைப்புகள் அந்தப் பகுதியில் இருக்கும். இடைவெளியும் குறைவு..

அதன்கீழே எப்போதும் அசுத்தமாகவும், சிலசமயம் முழங்கால் உயரத்திற்கும் எண்ணெய் கலந்த தண்ணீர் தேங்கியிருக்கும்.. சில பைப்லைன்களில் சூடான நீராவி செல்லும்.. கொஞ்சம் அசைந்தால் சூடு தான்..

அந்த இடத்தை சுத்தம் செய்யச் சொல்வது, நம் ஊரில் 'தண்ணீயில்லாக் காட்டுக்கு' ட்ரான்ஸ்பர் செய்யும் பழிவாங்கலுக்கு ஈடான் செயல்..

சீஃப் இஞ்ஜினீயர் என்னைப் பழிவாங்க இதையே முதல் வேலையாகத் தேர்ந்தெடுத்து இருந்தார்.


--------------

சீஃப் இஞ்ஜினீயர் கொடுத்திருந்த தண்டனையை ஏற்றுக் கொண்டு, பில்ஜ் க்ளீனிங் வேலையைச் செய்ய ஆரம்பித்தேன்.

கப்பல் வாழ்க்கையில் எந்த வேலையையும் செய்யத் தயங்கக் கூடாது என்ற மனோபாவத்தை உண்டாக்குவதற்காக, ஆரம்பத்தில் ஜூனியர் ரேங்கில் சேர்பவர்கள் எல்லோரும் இது போன்ற வேலையையும் செய்ய கட்டாயப்படுத்தப் படுவார்கள்.

ஆனால் 'குடிக்க மாட்டேன்' என்பதற்காக, தண்டனையாக எனக்கு அந்த வேலை தரப்பட்டதைத்தான் ஏற்க முடியவில்லை.

குழாய்களுக்கிடையே நகர்ந்து, குனிந்து வேலை செய்ய வேண்டியிருந்ததால் உடம்பின் எல்லா பாகங்களும் வலித்தன. சில இடங்களில் நீராவி குழாய்களில் உடல் உரசி, காயம் ஏற்பட்டது. உடை முழுதும் கப்பலின் எரிபொருளான ஹெவி ஆயில் கலந்த கலவையால் நனைந்திருந்தது.

கப்பலில் இஞ்ஜினீயர் வேலை என்பது முழுதும் உடல் உழைப்புடன் சம்பந்தப்பட்டது. எண்ணெய் படிந்த இடங்களை சுத்தம் செய்வது, இயந்திரங்களைப் பழுது பார்ப்பது போன்ற எல்லாவற்றையும் கூடுமானவரை உதவியாளர்கள் யாருமின்றி செய்ய வேண்டும்.

கப்பலின் கழிவுநீர், டாய்லெட் கழிவுநீர் போன்றவற்றைச் சுத்திகரிக்கும் 'ஸீவேஜ் ட்ரீட்மெண்ட்' (Sewage Treatment Plant) இயந்திரத்தையும் இவர்கள் பழுது பார்க்கிறார்கள். அதனால் தரை வாழ்க்கையில் கூச்சம், கௌரவக் குறைச்சல் காரணமாக பிறர் பார்க்கத் தயங்கும் எந்த வேலையையும் மெரைன் இஞ்ஜினீயர்கள் செய்வதற்குக் கூச்சப்படுவதில்லை.

ஆட்டோமொபைல் வொர்க் ஷாப்பில் வேலை முடிந்து திரும்பும் மெக்கானிக்குகளை விட பலமடங்கு எண்ணெய்க் கறையுடன் எப்போதும் காட்சியளிப்பார்கள்.

ஒருவருட பயிற்சியில் இதெல்லாம் கொஞ்சம் கேள்விப்பட்டு இருந்தேன். எனவே எனக்கு கொடுக்கப்பட்ட அந்த வேலையைச் செய்வதில் எந்தவிதத் தயக்கமும் இல்லை. கையில் ஒரு 'பக்கெட்', பழைய துணிகள் சில, சுத்தம் செய்யப் பயன்படும் கெமிக்கல் கொஞ்சத்துடன் எனது வேலையை செய்ய ஆரம்பித்தேன்.

எவ்வளவு நேரம் அதைச் செய்து கொண்டிருந்தேனோ..

"வேலை பார்த்தது போதும்.. மதியச் சாப்பாட்டிற்கு நேரமாகி விட்டது. மேலே வா.." என்று அருண் கூப்பிட்டபின் தான் மணி பனிரெண்டு ஆகிவிட்டது தெரிந்தது.

மெதுவாக தலையை நிமிர்த்தி குழாய்களை விட்டு மேலேறி வந்தேன்.  காலையிலும் சாப்பிடாததால் மிகவும் சோர்ந்து போய்விட்டேன்.

கைகழுவி விட்டு சாப்பிடப் போனேன். 'மெனு'வில் ஏதேதோ புரியாத பெயர்களாக இருந்தது.. ஒரு தட்டில் சாதமும், தக்காளி 'கெட்ச்-அப்' பாட்டிலையும் எடுத்துக் கொண்டு வந்து அமர்ந்தேன். சாப்பாடு விஷயமும் என்னை இப்படி சோதிப்பது பிடிக்கவில்லை.

"ஹேய்.. என்ன வெறும் சாதம் மட்டும் எடுத்திருக்கிறாய்.. 'பர்கர்' (Burger) எடுத்துக்கலை?.. 'பீட்ஸா' (pizza) கூட இருந்ததே.." -கேட்டுக் கொண்டே வந்த அருண் என்னை ஆச்சர்யத்துடன் பார்த்தான்.

"மெனுவில் இருந்த எந்தப் பெயருமே எனக்கு தெரிந்த பெயராக இல்லை.. 'ரைஸ்' என்பது மட்டும் புரிந்தது.."

"வெஜிடேரியனா நீ.."

"இல்லையில்லை.. ஆனால், பீஃப், போர்க் இதெல்லாம் சாப்பிட்டு பழக்கமில்லை.."

"ம்.. நீ பரவாயில்லை.. நான் சுத்த வெஜிடேரியன் குடும்பத்திலிருந்து வந்தவன். இப்போது பார், எதையும் விட்டு வைப்பதில்லை. இந்த உலகத்தில் நகர்ந்து செல்லும் எல்லா உயிர்களையும் தின்பேன்"- பலமாக சிரித்தான்.

நானும் அவனுடன் சேர்ந்து சிரித்தேன்.

"பீட்ஸா எடுத்துக் கொள்.. அது வெஜிடெரியன் பீட்ஸா"- என்று முக்கோண வடிவில் வெட்டப் பட்டிருந்த துண்டை என் தட்டில் வைத்தான். தயக்கத்துடன் கடித்தேன்..

ஏதோ பழகியிராத சுவை.. சமாளித்து சாப்பிட்டு முடித்தேன்.

"ஸோ.. உன்னைப் பற்றிச் சொல்.." என்றான்.

நான் என்ன சொல்வது என்று யோசித்தேன்.

"என்ன யோசிக்கிறாய்.. என்னைப் பற்றி முதலில் சொல்கிறேன்.. அப்பா டெல்லி அரசாங்கத்தில் உயர் அதிகாரி. ஒரே பையன். கல்யாணம் இரண்டு மாசத்துக்கு முன்னால் ஆனது. ரோஹிணி ஒரு மாடல்.. இரண்டு பேரும் ஒரு பார்ட்டியிலே மீட் பண்ணினோம்.. பிடிச்சுப் போச்சு..அடிக்கடி மீட் பண்ணினோம்.. ஒருநாள் முழுக்க நாங்க ரெண்டு பேரும் சுத்தினோம்.. அடுத்த முறை லீவில் போனபோது கல்யாணம் செய்து கொண்டோம்.."

முன்பின் அறிமுகம் இல்லாத என்னிடம் வெளிப்படையாக எல்லாவற்றையும் சொன்னது எனக்கு பிடித்திருந்தது..

"இரண்டு மாதத்துக்கு முன்னால்தானே கல்யாணம் ஆனது.. விட்டுவிட்டு உடனேயே வந்துவிட்டாயே?"

"அதுதான் இந்த தொழிலின் தலைவிதி.. என்னோட லீவு முடிஞ்சு போச்சு.. ஒருமாசம் கல்யாணமாகி அவளுடன் இருந்தேன்.. இப்போ கப்பல்ல சேர்ந்து ஒருமாசமாச்சு.."

"கஷ்டமாக இல்லையா.. பிரிஞ்சு இருக்கறது அவளுக்கும் சிரமமாக இருக்குமில்லையா.."

"சிரமம்தான்.. வேற வழியில்லை.. ஆனால் நம் கம்பெனியில், நான்காவது எஞ்ஜினீயர் கூட தன் மனைவியை கப்பலுக்கு தன்னுடன் அழைத்து வரலாம்.. மற்ற கம்பெனிகளில் சீனியர் பதவியில் இருப்பவர்கள் மட்டுமே கூட்டி வரமுடியும்.. இப்போ அவள் இங்கே வருவதற்கு எல்லா ஏற்பாடும் நடந்துகிட்டிருக்கு. ஒருமாசத்திலே நம்ம கூட அவளும் வந்து சேர்ந்து விடுவாள். நாம் தென்னாப்பிரிக்கா வழியாக போகும் போது 'கேப்-டவுனில்' நம் கப்பலில் வந்து சேர்ந்து கொள்வாள்"- மிகவும் சந்தோஷத்துடன் சொன்னான்.

என்னைப் பற்றி சொன்னேன்..

"பத்திரிக்கையாளனா நீ.. இங்கே எப்படி வந்தாய்.." என்று ஆச்சர்யப்பட்டான்..

நான் கப்பலில் சேர்ந்தால் எல்லா நாடுகளுக்கும் போய் அதைப்பற்றி எழுதலாம் என்ற ஆர்வத்தில் கப்பல் பணியைத் தேர்ந்தெடுத்ததைப் பற்றிச் சொன்னேன்..

அவன் சிரித்தான்.. "உலகம் சுற்றிப் பார்த்து எழுதலாம் என்று வந்தாயா?.. அதுவும் இஞ்ஜினீயர் வேலை பார்த்துக்கிட்டா.. நீயே போகப்போக புரிஞ்சுக்குவே.. இப்போ எதையும் சொல்லி உன் ஆர்வத்தை குறைக்க விரும்பலை" என்று நிறுத்திக் கொண்டான்.
---------------

கப்பலில் வேலை செய்வது என்றால் எப்போதும் கடலையும் வானத்தையும் பார்த்துக் கொண்டேயிருக்கலாம், என்றெல்லாம் கற்பனை செய்து வைத்திருந்தேன்.

ஆனால் கப்பலில் சேர்ந்த பின் உண்மை புரிந்தது. கப்பலில் இஞ்ஜின் டிபார்ட்மெண்டில் வேலை செய்பவர்களுக்கு கடலையும் வானத்தையும் பார்த்து ரசிப்பது எல்லாம் முடியாத காரியம்.

'நேவிகேஷன் டிபார்ட்மெண்ட்'டில் இருப்பவர்கள் தான் எப்போதும் 'White collar Job'-ல் இருப்பவர்கள். இரண்டு டிபார்ட்மெண்ட்டிலும் சமமான அதிகாரம் உடைய பதவிகள் இருக்கின்றன.

சீஃப் இஞ்ஜினீயர், இரண்டாவது இஞ்ஜீனீயர், மூன்றாவது இஞ்ஜினீயர், நான்காவது இஞ்ஜினீயர்.. இது இஞ்ஜின் அறையின் ஆபிஸர்கள்... சில கப்பல்களில் கூடுதலாக ஜூனியர் இஞ்ஜினீயரும் இருப்பதுண்டு.. நான் ஜூனியர் இஞ்ஜினீயராகச் சேர்ந்திருந்தேன். (இதை ஐந்தாவது இஞ்ஜினீயர் பதவி என்றும் அழைப்பார்கள்.)

அதேபோல் நேவிகேஷன் டிபார்ட்மெண்ட்டில் கேப்டன், சீஃப் ஆபிஸர், இரண்டாவது ஆபிஸர் மற்றும் மூன்றாவது ஆபீஸர்.. இவர்களைத் தவிர ரேடியோ ஆபிஸர் ஒருவரும், எலக்ட்ரிக்கல் இஞ்ஜினீயர் ஆபிஸர் ஒருவரும் மட்டுமே கப்பலில் ஆபிஸர் பதவி உடையவர்கள்.

இஞ்ஜின் அறையிலும், கப்பலின் தளத்திலும் ('டெக் டிபார்ட்மெண்ட்' அல்லது 'நேவிகேஷன் டிபார்ட்மெண்ட்' என்று இந்தத் துறை அழைக்கப் படுகிறது.) பணிபுரியும் மற்றவர்கள் ஆபிஸர் ரேங்க் உடையவர்கள் கிடையாது.

சீஃப் இஞ்ஜினீயரின் பதவியும், கேப்டனின் பதவியும் சமமான அந்தஸ்து உள்ளவை என்றாலும் கப்பலின் மொத்த பொறுப்பும் கேப்டனிடம் தான் இருக்கிறது.. அதனால் அவர் எடுக்கும் முடிவே எதிலும் 'இறுதி வார்த்தை'யாக ஏற்றுக் கொள்ளப்படும்.

கப்பலில் ஆபிஸராக சேர இரண்டு வழிமுறைகள் உண்டு. கப்பல் வேலை என்றதும் பெரும்பாலானவர்களின் கனவு கப்பலின் கேப்டன் ஆவதாகவே இருக்கும்..

நேவிகேஷன் டிபார்ட்மெண்ட்டில் ஆபிஸர்கள் அழுக்குப்படாமல் வெள்ளைச்சீருடை அணிந்து காலையில் நான்கு மணி நேரம் கையில் பைனாகுலர் சகிதம் 'பிரிட்ஜ் ரூம்' (Bridge Room) என்று அழைக்கப்படும் ஏ.ஸி. செய்யப்பட்ட ரூமில் நின்று கொண்டு வானத்தையும், கடலின் அழகையும் ரசிக்கும் வேலை.

இரவானால் அதே நான்கு மணி நேரமும் இருளில் தெரியும் கடல்பரப்பையும், வானத்தில் தெரியும் நிலவையும் நட்சத்திரங்களையும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.. கப்பல் போகத் தீர்மானித்துள்ள பாதையில் போகிறதா என்பதை மணிக்கொரு முறை சரிபார்க்க வேண்டும்..

வேறு ஏதாவது கப்பல் எதிரே வருகிறதா என்று கண்ணாலும், ரேடார் மூலமாகவும் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும்.. துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தவுடன், கொண்டு வந்த சரக்கை கரையில் இறக்குவதை மேற்பார்வை பார்க்க வேண்டும்.. இதுதான் அவர்களின் பணி..

இவர்களும் தங்கள் வேலை கடினமானது என்றுதான் சொல்லிக் கொள்கிறார்கள்.

பிளஸ்-டூ முடித்துவிட்டு, கப்பல் கம்பெனியில் 'கேடட்' (Cadet) என்று அழைக்கப்படும் டிரெயினிங் வேலையில் சேர்ந்து, பின் பரீட்சை எழுதி மூன்றாவது ஆபிஸர் ஆகவேண்டும். (ஒரு பத்து லட்சம் ரூபாய் செலவாகும்.. அதை இரண்டே ஆண்டுகளில் சம்பாதித்து விட முடியும்).

இஞ்ஜினீயராக கப்பலில் சேர பொதுவாக மெக்கானிக்கல் (அல்லது மெரைன்) இஞ்ஜினீயரிங் டிகிரி முடித்து இருக்க வேண்டும்.. அதன்பின் ஒருவருட பயிற்சியுடன் நேரடியாக ஐந்தாவது இஞ்ஜினீயராக சேர்வது அதிகமாக வழக்கத்தில் இருந்து வருகிறது.. (இதைத் தவிர பிளஸ்-டூ முடித்துவிட்டு கப்பலில் சேர தனியாக கோர்ஸ் உள்ளது).

இஞ்ஜினீயர் வேலைக்கு கொஞ்சம் கடுமையான உடல் உழைப்பு தேவை.. எப்போதும் வெப்பமான அறையில் வேலை செய்ய வேண்டியிருக்கும். மெரைன் இஞ்ஜினீயர்கள் என்றாலே அழுக்கான எண்ணெய்க்கறை படிந்த உடைகள் நினைவுக்கு வரும்.

கடல் வாழ்க்கையில் இந்த இரண்டு பிரிவுகளுக்குள்ளும் யார் உயர்ந்தவர் என்ற போட்டி இருந்து கொண்டே இருக்கும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் எப்போதும் வாக்குவாதத்தில் இருப்பார்கள்.

சமமான இரு பதவிகளுக்கும் கிடைக்கும் சம்பளம் ஒன்று என்றாலும் இஞ்ஜினீயர்கள், தாங்கள் அதிகம் உழைப்பதாகவும், 'டெக்' (நேவிகேட்டிங்) ஆபிஸர்கள் ஒரே இடத்தில் ஏ.ஸி.யில் இருந்து கொண்டு, அதே சம்பளம் வாங்குவதாகவும் எப்போதும் பொறாமைப் படுவார்கள்.

அதையெல்லாம் பற்றி அதிகம் தெரியாமல், டிரெயினிங்கில் சேரும்முன் கப்பல் வாழ்க்கை என்றால் தலையில் தொப்பியுடன், அழுக்குப்படாத சீருடை அணிந்து கையில் பைனாகுலர் பார்க்கும் வேலைதான் எல்லோருக்கும் என்று கனவு கண்டிருந்தேன்.

மேலும் கப்பலில் சேர்ந்தால் உலகம் முழுதும் சுற்றிப் பார்க்கலாம், அதைப் பற்றியெல்லாம் எழுதலாம் என்ற ஆர்வத்தில் நான் சேர்ந்திருந்தேன்.

ஆனால் கடலைப் பார்த்து ரசிப்பதெல்லாம் முடியாது.. சொல்லப்போனால் சூரியனைப் பார்க்கக் கூட வெளியில் வர வேண்டியிருக்காது என்பது போன்ற ஒரு இடத்தில் வேலை என்று தெரிய வந்தபோது கொஞ்சம் ஏமாந்து போனேன்.

வேலை செய்வது பற்றிய பயமோ, கவலையோ எனக்கு அப்போது இல்லை. ஆனால் சண்முகம் போன்றவர்களுடன் காலம் கழிப்பதுதான் மிகவும் சிரமமாக இருக்கும் என்று தோன்றியது.


சண்முகம் என்னை இரவில் கூப்பிட்டு அடித்தது பற்றி அருணிடம் சொன்னேன்.

"உனக்கு வேண்டுமானால் இதெல்லாம் புதியதாக இருக்கலாம். இந்த ஃபீல்டில் வரும் எல்லா ஜூனியர் எஞ்ஜினீயர்களும் இதை அனுபவிச்சு ஆகணும். இப்போ பரவாயில்லை.. முன்னாலே இதைவிட மோசம்.. நான் சீனியரோட 'பாய்லெர் சூட்'டெல்லாம் துவைச்சிருக்கேன்.. கொஞ்ச காலத்துக்கு இதை சகிச்சுக்கிட்டு இரு. போகப்போக சரியாயிடும்.." என்றான்.

நான் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தேன்.

சாப்பிட்டு முடித்துவிட்டு என் அறைக்குப் போனதும் மீண்டும் தலைசுற்றல் ஏற்பட்டு, சாப்பிட்டதையெல்லாம் வாந்தியெடுத்தேன்..

வேறு எதுவும் சாப்பிடப் பிடிக்கவில்லை..

மதியம் ஒரு மணிக்கு முன்பாகவே இஞ்ஜின் அறைக்குப் போய் நான் என் வேலையை தொடர்ந்து செய்ய ஆரம்பித்தேன்.. தொடர்ந்து கசிவு இருக்கும் அந்த இடத்தை சுத்தம் செய்து முடிப்பது முடியாத காரியம் என்பது அவர்களுக்கும் தெரிந்த விஷயமே..

ஆனாலும் என்னை வெறுப்படையச் செய்வதற்காகவே அதைச் செய்யச் சொன்னார்கள் என்பது எனக்கு புரிந்து போனது..இப்போது எனக்கு வெறுப்பு தீர்ந்து போய் இருந்தது.. தண்டனை என்று நினைக்கும் போதுதானே மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.. இதையே கடமை என்று நினைக்க ஆரம்பித்து விட்டால்.. அதன்பின் அந்த வேலையை சுவாரஸ்யத்துடன் செய்ய ஆரம்பித்தேன்.

ஆனால் உடல்முழுதும் வலித்தது.. கால்கள் நடக்கத் தெம்பில்லாமல் சோர்ந்து விட்டன. ஓய்வு எடுக்க வேண்டும் போல் தோன்றியது.

ஆனால் இந்த வாழ்க்கையில் ஓய்வா?.. கனவில் கூட கிடைக்காது.. இங்கே தரை வாழ்க்கை போல் இல்லை.. தினமும் வேலை நாள். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என்றால் என்னவென்றே தெரியாது.. விடுமுறை என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது.

கப்பலில் சேர்ந்த நாள் முதல் பணிக்காலம் முடியும் வரை, சிலசமயம் ஆறுமாதம், சில கம்பெனிகளில் பனிரெண்டு மாதம் வரை தொடர்ந்து வேலை.. எனக்கு எட்டு மாத காண்ட்ராக்ட்.. வீடு போய் சேரும் நாளில் தான் ஓய்வு என்பதெல்லாம்..

வேலை செய்து நான் சுத்தமாக தளர்ந்து போய் இருந்தேன்.. சுற்றிலும் யாருமில்லை.. பனிரெண்டு மணியிலிருந்து நான்கு மணிவரை வாட்ச் கீப்பிங் இஞ்ஜினீயர் மூன்றாவது இஞ்ஜினீயரான சண்முகம்.. அவன் வேறு ஒரு தளத்தில் இருக்கக் கூடும்.

மெதுவாக மறுபடியும் சுத்தம் செய்யும் வேலையை ஆரம்பித்தேன்.. சிறிது நேரத்திலேயே கண்கள் சுழற்றிக் கொண்டு வந்தது.. யாரிடமாவது கூப்பிட்டுச் சொல்லலாம் என்று நினைத்து, பில்ஜிலிருந்து மேலே வந்து தளத்தில் காலடி எடுத்து வைத்தேன்.

அவ்வளவுதான்.. அப்படியே மயங்கி கீழே சரிந்தேன்..



-----------------


கண் விழித்துப் பார்த்தபோது என்னைச் சுற்றி வெறும் மாத்திரை மருந்து சமாச்சாரங்களாகத் தெரிந்தது. பக்கத்தில் கவலையோடு என் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான் இரண்டாவது ஆபிஸர் மோஹித்.

“ஆர் யு ஆல்ரைட்..?”- நான் கண் விழித்தவுடன் படபடப்போடு கேட்டான்.

அப்போது நான் கப்பலின் ஹாஸ்பிடல் ரூமில் படுத்திருப்பதை உணர்ந்தேன். எழுந்திருக்க முயற்சித்தேன். ம்ஹூம்.. கைகால்களை அசைக்கவே முடியவில்லை. ஏதோ ஸ்லோ மோஷனில் காண்பிப்பது போல் மெதுவாக கையை உயர்த்த முடிந்தது. உடம்பில் சக்தியே இல்லை.

“நல்லவேளை.. கண்விழித்து விட்டாய்.. நாங்கள் எல்லோரும் பயந்து போனோம்.” என்றான் மோஹித். ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தது.

அவனிடம் மணி என்ன என்று கேட்டேன்.மாலை ஐந்து மணி என்றான்.. அப்படியானால் மதியம் ஒன்றரை மணியிலிருந்து இப்போது வரை நினைவில்லாமலேயே இருந்திருக்கிறேன்.

மோஹித் நடந்ததைச் சொன்னான்.. மயங்கி விழுந்து கிடந்த என்னை, எதேச்சையாக அந்தப் பக்கம் வந்த பிலிப்பினோ ஃபிட்டர் பார்த்து, சத்தம் போட்டு ஆட்களைக் கூப்பிட்டு, பின் ஹாஸ்பிடலில் சேர்த்திருக்கிறார்கள்..

இடையில் மயக்கம் தெளிவதும், பின் மறுபடியும் மயங்குவதுமாக இருந்திருக்கிறேன்.

“நீ ஒன்றுமே சாப்பிடாமல் இருந்தது தவறு.. உனக்கு உடல்நிலை சரியில்லையென்றால் காலையிலேயே என்னிடம் சொல்லியிருக்கலாமே.. நான் ‘ஸீ ஸிக்னெஸை’ சமாளிக்க மாத்திரை கொடுத்திருப்பேன். இப்படி மயக்கம் போட்டு எல்லோரையும் பயமுறுத்தி விட்டாயே” என்றான் மோஹித்.

(சிலருக்கு ஸீ-ஸிக்னெஸ் வந்ததே இல்லை என்றும் கேள்விப் பட்டிருக்கிறேன். சிலரின் உடல்நிலை இதனால் பாதிக்கப் படுவதேயில்லை.. கப்பலின் ஆட்டத்தால் உடலின் சில பகுதியில் சமநிலை பாதிக்கப் படுவதால் உண்டாகும் தொந்தரவே இந்த நோய் என எடுத்துக் கொள்ளலாம்.)

அருகிலேயே இருந்து எனது நிலையை கவனித்து வந்திருக்கிறான் மோஹித்.

சரக்குக் கப்பல்களில் டாக்டர்கள் இருப்பதில்லை. இரண்டாவது(நேவிகேட்டிங்) ஆபிஸரே ‘மெடிக்கல் ஆபிஸர்’. ஓரளவுக்கு அவசர நிலையை சமாளிப்பதற்கும், முதல் உதவிகள் செய்வதற்கும் இவர்கள் பயிற்சி பெற்றவர்கள்.

நிலைமை மோசமாகப் போகுமானால், ரேடியோ மூலம் தரையில் உள்ள மருத்துவ உதவியைப் பெறலாம்.. இப்பொதுதான் தொலைத் தொடர்பு எங்கேயோ போய்விட்டதே..

தரையில் இதற்கென்றே குறிப்பிட்ட மருத்துவ மையங்களும் சில நாடுகளில் உள்ளன. அவர்களைத் தொடர்பு கொண்டால், கப்பலில் உள்ள மருந்துகளில் எதைக்கொடுக்கலாம் என்று அட்வைஸ் செய்வார்கள்.. அவ்வப்போது நோயாளியின் முன்னேற்றம் பற்றித் தகவல் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்.. அதற்கேற்ப அவர்கள் சிகிச்சைக்கு தரையிலிருந்தே உதவி செய்வார்கள்..

நிலைமை கட்டுமீறிப் போனால், கப்பலை அருகிலுள்ள ஏதாவது துறைமுகத்துக்கு திருப்பிச் செல்லவும் முயற்சிப்பதுண்டு. சில சமயங்களில் கப்பலில் இருந்து அனுப்பபடும் செய்திகளைக் கேட்டு அதன் அருகில் ஏதாவது கடற்படை அல்லது பிரயாணிகள் கப்பல் இருந்தால் அதில் உள்ள டாக்டர்கள் உதவிக்கு வருவதும் சாத்தியமே. பக்கத்தில் துறைமுகங்கள் எதுவுமே இல்லாமல் நடுக்கடலில் இருந்தால்..

வேறென்ன.. திரை கடலோடியும் திரவியம் தேட வந்தாயிற்று.. மரணம் என்பது எப்போதாவது வந்து தானே ஆகவேண்டும். தரையில் வந்தால் என்ன.. அல்லது தண்ணீரில் வந்தாலென்ன. தடுக்கவா முடியும்..?

மெதுவாக எழுந்து உட்கார்ந்தேன். இப்போது கப்பலின் ‘ரோலிங்’ குறைந்திருந்தது.

“பே ஆஃப் பிஸ்கேயைத் தாண்டி விட்டோமா”

“இன்று இரவுக்குள் தாண்டி விடுவோம்.. கடல் ஓரளவு அமைதியாக இருக்கிறது” என்றான் மோஹித்.

மறுநாள் காலை மறுபடியும் ‘பில்ஜ்’ சுத்தம் செய்யும் வேலை.. எப்போது கப்பலின் மெஷின்களைப் பற்றித் தெரிந்து கொள்ள அனுமதிப்பார்கள் என்று தெரியவில்லை.

அருண் சொன்னான். “நீ பார்ட்டியில் சீஃப் இஞ்ஜினீயரை மதிக்காமல் குடிக்க மறுத்தது அவருக்குப் பிடிக்கவில்லை. உன்னை எப்போதும் சுத்தம் செய்யும் வேலையிலேயே வைத்திருக்கும்படி அவர் கட்டளையிட்டிருக்கிறார். மேலும் சண்முகமும் உன்னைப் பற்றி தவறாக சொல்லியிருக்கலாம்.”


தொடர்ந்து ஒருவாரம் அதே வேலை பார்த்தபின், ஒருநாள் மாலை ஐந்தரை மணிக்கு என்னை சீஃப் இஞ்ஜினீயர் தன் அறைக்கு அழைப்பதாக சொன்னார்கள். அங்கே எனக்கு இன்னொரு புதிய அதிர்ச்சி காத்திருந்தது.

---------------

சீஃப் இஞ்ஜினீயர் கூப்பிட்டதும் பயந்து கொண்டே போனேன்.

குளித்துவிட்டு, கருப்பு பேண்ட் வெள்ளைச் சட்டை அணிந்து அவரது அறைக்கதவை மெல்லத் தட்டினேன்.

“யெஸ் கமின் மை ஸன்”- குரலில் அன்பொழுக அழைத்தது எனது சீஃப் இஞ்ஜினீயரே தான்.

“உட்கார்”- எதிரே இருந்த இருக்கையை நோக்கி கைநீட்ட நான் மனதுக்குள், ‘இந்த ஆளுக்கு இன்னைக்கு மட்டும் புதுசா பாசம் பொத்துடுச்சாக்கும்’ என்று நினைத்துக் கொண்டேன்.

“ஸோ.. கப்பல் வாழ்க்கை பற்றி என்ன நினைக்கிறாய்?”- கேட்டுவிட்டு சீரியஸாக என் முகத்தைப் பார்த்தார்.

வினாடிக்குள் எனது கோபமும், இயலாமையும் கலந்து என் கண்களில் அந்த கணத்தில் கண்ணீராக வெளிப்பட்டு, கன்னங்களில் உருண்டு ஓடியதை என்னால் தடுக்க முடியவில்லை.

எதுவும் பேசாமல், கலங்கிய கண்களூடன் அவரையே பார்த்தேன்.

“ஆல்ரைட்.. ஆல்ரைட். எனக்கு உன் மனநிலை புரிகிறது. வெரி ஸாரி. உன்னைக் கொடுமைப்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல.. கப்பல் வாழ்க்கையில் ஆனந்தம் காணலாம் என்று வந்திருப்பாய். ஆனால் இதிலும் கஷ்டங்கள் உண்டு என்பதைப் புரிய வைக்கவே அந்த வேலை தரச் சொன்னேன்.

உன்னை தண்டிப்பது என் நோக்கமல்ல. உன்னை எந்த விதத்திலாவது மனதில் காயப்படுத்தியிருந்தால் என்னை மன்னித்துவிடு. என் மனதில் உனக்கெதிராக எந்த எண்ணமும் இல்லை… புரிகிறதா?”

எனக்கு அது புரியவில்லை.. கஷ்டங்கள் எந்த வாழ்க்கையில் இல்லை.. அதைத் தெரிந்து கொள்ள என்னை அந்த வேலையை தொடர்ந்து ஒருவாரம் செய்யச் சொல்ல அவசியமில்லை என்பது அவருக்கும் தெரிந்து இருக்கும். இருந்தாலும் அவ்வளவு சீக்கிரம் அவர் மனம் மாறியது ஆச்சர்யமாக இருந்தது.

“கமான்.. உனக்குப் பிடித்தமான ஆரஞ்ச் டிரிங்க் வைத்திருக்கிறேன். என்ஜாய் யுவர்செல்ஃப்.”- என்று தனது ஃபிரிட்ஜிலிருந்து ஆரஞ்ச் கேன் ஒன்றை எடுத்து என்னருகே வந்து என் கையில் திணித்தார்.

நான் அதைத் திறக்காமல் கையில் வைத்திருந்தேன்.

“உன் கோபம் இன்னும் தணியவில்லை என்று இது நிரூபிக்கிறது. உனக்கொரு விஷயம் தெரியுமா.. நீ ஆல்கஹால் குடிக்காதவன் என்பதால் தான் ஒருவாரமாக இந்த கோபம் உனக்கும் எனக்கும் இடையே நீடித்து இருக்கிறது..
ஆல்கஹாலில் அதுதான் பெரிய நன்மை.. இரண்டு பேருக்குள் என்ன பகை வந்தாலும், குடிப்பவர்களாக இருந்தால், விரைவில் சேர்ந்து குடித்து சமாதானமாகி விடுவார்கள். இந்த கடல் வாழ்க்கையில் ஒருவர் மீது மற்றவருக்கு உள்ள உறவு மிகவும் முக்கியம்.. அது குடிப்பதால் சரிப்படுத்தப்படுவதை நீ போகப் போக புரிந்து கொள்வாய்..”

அவர் சொன்னது விநோதமாகத் தோன்றினாலும், அது நூறு சதவீதம் உண்மை என்பதை பின்னாளில் புரிந்து கொண்டேன்.. கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டும், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் அளவுக்கு பகலில் சண்டை போட்டவர்கள், அதே இரவில் ‘பாரில்’ சேர்ந்து சண்டை போட்டுக்கொண்டே குடித்து, தூங்கபோகும் முன் அன்புடன் கட்டித் தழுவிக் கொண்ட காட்சிகள் ஏராளமாகக் கண்டிருக்கிறேன்.

அன்றிலிருந்து சீஃப் இஞ்ஜினீயர் என்னுடன் அன்பாக நடந்து கொண்டார். சண்முகம் கூட மாறியிருந்தான்.. என்ன மாயமோ.. இது ‘தேறாத கேஸ்’ என்றுகூட அவர்கள் என்னைப் பற்றி நினைத்திருக்கலாம்.


பத்து நாட்களில் கப்பல் வாழ்க்கை பற்றி ஓரளவு நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது.

இங்குள்ள இந்தியர்கள், எப்போது சேர்ந்து பேசினாலும் மார்க்கெட்டில் புதிதாக வந்திருக்கும் கார் வாங்குவது பற்றியும், மும்பையில் புதிதாக வாங்க இருக்கும் ஃபிளாட்டின் விலை பற்றியதாகவே இருந்தது.

இதைத் தவிர, இந்தக் கடல்வாசிகள் எல்லோருமே கட்டாயமாக பேசிக்கொள்ளும் பொதுவான விஷயம் ஒன்று உண்டு..

தாய்லாந்து பாங்காக் நகர அழகிகளின் ‘செக்ஸ்’ சாகசங்களை புகழ்ந்து வியப்பதும், ஆம்ஸ்டர்டாம் ‘கனால் ஸ்ட்ரீட்’ மற்றும் ஜெர்மெனியின் ஹாம்பர்க் நகர ‘செயிண்ட் பவுலி’ பகுதியின் ‘க்ளாஸ் ஹவுஸ்’ பெண்கள் வரை எல்லா நாட்டுப் பெண்களைப் பற்றியும் ஆராய்ச்சி செய்து, புள்ளி விவரங்கள் கொடுப்பதில் இவர்களுக்கு நிகர் இவர்களே..

மாலை நேரமாகி விட்டால் பாரில் மதுக்கோப்பைகளுடன் மறுபடியும் இதேபேச்சு.. முதல் நான்கு நாட்கள் இவர்களின் பேச்சு ஆச்சர்யமாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்தது.

திரும்பவும் பேச வேறு விஷயம் எதுவுமில்லாமல் மீண்டும் கார் விலை பற்றி ஆரம்பித்த போது, வாழ்க்கை போரடிக்க ஆரம்பித்தது.

இங்கே ‘ஆல்கஹால்’ ஒரு அத்தியாவசியமான விஷயம். குடித்தால் சமூகத்தில் விமர்சிக்கப்பட்ட காலங்கள் கடந்து போய், இன்று குடிக்காதவர்களை எல்லாம் கேலிப் பொருளாக பார்க்கும் அளவுக்கு கரையிலேயே சமூக சூழ்நிலை மாறிவிட்ட போது, கப்பலில் வாழும் இவர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.

தினமும் குடிக்க வேண்டும்.. ஆனால் குடித்து விட்டு இங்கே யாரும் தள்ளாடுவதில்லை.. எவ்வளவு குடித்தாலும் நிதானமாக இருக்கும் அளவுக்கு ஆல்கஹால் ஏற்கும் சக்தி உடலில் அதிகமாகி விட்டிருக்கிறது.

அந்த விஷயத்தில் இந்தியர்கள் பாராட்டப் பட வேண்டியவர்கள். பிரிட்டிஷ்காரர்களையும், பிலிப்பைன்ஸ் நாட்டவரையும் ஒப்பிடும்போது நம்மவர்கள் குடிப்பது மிகக் குறைவு.
இந்தக் கூட்டத்தில் நான்காவது இஞ்ஜினீயர் அருணிடமும், ரேடியோ ஆபிஸர் ஜோவிடமும் என்னால் ஓரளவுக்கு நெருங்கிப் பழக முடிந்தது..

அருண், திருமணமான ஒரு மாதத்திலேயே மனைவியை விட்டுவிட்டு கப்பலுக்கு வந்து விட்டான். தினமும் அவளை நினைத்தே சோகமாக இருப்பான். கப்பல் பிரேஸில் போய்விட்டு, தென்னாப்பிரிக்கா செல்லும்போது, அவன் மனைவி கப்பலில் வந்து சேர்ந்து கொள்வதாக இருந்தாள். அவளின் விசா இன்னும் தயாராகவில்லை.. அவளின் வருகைக்காக அருண் காத்திருந்தான்.

ஜோ மும்பைக்காரன். முப்பத்திமூன்று வயதான ஜோ பார்ப்பதற்கு இருபத்தி மூன்று வயது இளமையோடு இருப்பான். திருமணமாகவில்லை. பனிரெண்டு வருடங்களாக கப்பல் வாழ்க்கையில் இருப்பவன்.. வாழ்க்கை பற்றிய இவனது பார்வைகள் வித்தியாசமானவை.

“ஜோ.. நீ எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறாய்?” என்று கேட்டேன்.

உடனே பதில் சொல்லாமல் சிகரெட் புகையை ஆழமாக உள்ளிழுத்தான்.

"கப்பல் வாழ்க்கையை விட்டு எப்போது நிரந்தரமாக நிற்கிறேனோ, அப்போது..”

“எனக்குப் புரியவில்லை..”

“நீ ஏன் திருமணம் செய்ய நினைக்கிறாய்?”

“இதென்ன கேள்வி.. வாழ்க்கைக்கு ஒரு துணை வேண்டாமா?”

அவன் என்னை கேலியாகப் பார்த்துவிட்டு சிரித்தான்.

“இங்கே வருகிற எல்லோரும் இதே தவறை செய்கிறார்கள். கப்பலில் இருந்து லீவில் வீட்டுக்குப் போகும்போது, கல்யாணம் என்ற சிறைக்குள் ஒரு பெண்ணைக் கட்டிப்போட்டு விட்டு, இரண்டு மாதம் அவளோடு இருந்து விட்டு இங்கே ஓடி வந்து விடுகிறோம்.. அந்தப் பெண்ணின் மனநிலை என்ன பாடுபடும்.. இவர்களும் இங்கே நிம்மதியாக இருக்க முடிவதில்லை.. வருஷத்தில் இரண்டு மாதம் கூடவே இருந்து விட்டு பத்து மாதங்கள் காணாமல் போய்விடுவதற்குப் பெயர் தான் வாழ்க்கைத் துணையா?” -கேலியாகக் கேட்டான்.

“அதுசரி.. ஆனால் எல்லாவற்றையும் எல்லா நேரத்திலும் அனுபவிக்க முடியாதே..அது தானே வாழ்க்கை”

அவன் திடீரென்று கோபப்பட்டான். “லுக்.. உனக்கு ஒரு பெண் துணை ஸெக்ஸிற்குத் தேவை என்றால் அதற்கு கல்யாணம் செய்தாக வேண்டுமென்பதில்லை.. அதற்காக ஒரு பெண்ணின் வாழ்க்கையை ஏன் பாழடிக்க வேண்டும்?”

“ஆனால் இந்தக் கம்பெனிக் கப்பல்களில் ஆபிஸர்கள் மனைவியை கூட அழைத்து வரலாமே. வீட்டில் தவிக்க விட்டு வர வேண்டியதில்லையே”

“உனக்குத் தெரியுமா.. இங்கே இருப்பவர்களில் உன்னையும், என்னையும், ‘கேடட்’ பிரேம்குமாரையும் தவிர இருபத்தியொரு பேரும் கல்யாணமானவர்கள். ஆனால் ஆபிஸர்களைத் தவிர பிலிப்பைன்ஸ் பணியாளர்கள் மனைவியை இங்கே கூட்டி வர முடியாது.. அவர்களெல்லாம் மனிதர்களாகத் தோன்றவில்லையா..

சிலசமயம் இரண்டு மாதம் கூட கரையைப் பார்க்காமல் பயணம் இருக்கும்.. நாம் மட்டும் மனைவியோடு சந்தோஷமாக இருக்கும்போது அவர்களின் மனம் என்ன பாடுபடும். ஏற்கனவே இது சிறை வாழ்க்கை.. என்னால் நான் மட்டும் மற்றவர்களை விட்டுவிட்டு சந்தோஷமான இருப்பதை நினைக்க முடியவில்லை..

உனக்குத் தெரியாது.. பள்ளிக் கூடத்தில் படிக்கிறபோது நான் ஓர் ஏழைப் பையன். நான் மட்டும் நிறைய நாட்கள் பட்டினி கிடக்கும்போது, என் கூட படிப்பவர்களுக்கு மதிய சாப்பாடு விதவிதமான உணவோடு காரில் வரும்.. அந்த வயதில் ஐஸ்க்ரீம் என்னால் நினைத்துப் பார்க்க முடியாத பொருள். அப்போது என் மனநிலை பட்டபாடு எனக்குத் தான் தெரியும்.. உனக்கு புரிய வைப்பது கஷ்டம்.

இதற்கும் அதற்கும் எந்த வித்தியாசமும் இருப்பதாகத் தெரியவில்லை.. அது மட்டுமல்ல.. இந்த வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தை நீ இன்னும் நேரில் பார்க்கவில்லை” என்று நீண்ட பெருமூச்சு விட்டான்.

பின் சிரித்து விட்டு, “என்ன ரொம்ப சீரியஸா பேசுகிறேன் என்று பார்க்கிறாயா?.. இந்த ஒரு விஷயத்தில் மட்டும் நான் சீரியஸ்.. மற்றபடி நான் ரொம்ப ஜாலியான ஆள். உனக்கொன்று தெரியுமா.. கல்யாணம் ஆனவனுக்குத் தான் ஒரு மனைவி.. கல்யாணம் ஆகாத என்னைப் போன்ற ஒரு சில கப்பல்வாசிகளுக்கு போகும் நாட்டிலெல்லாம் மனைவிகள் தான்.
நான் இரண்டாம் வகை. நான் எந்தப் பெண்ணின் மனதையும் ஏங்க வைத்ததில்லை..

சொன்னால் சிரிப்பாய்.. என்னைப் போலவே ஒரு ஐந்து வயதுப் பையனை மெக்ஸிகோவில் ஒரு இடத்தில் பார்த்ததாக என் நண்பன் ஒருவன் சொன்னான்.. நிஜமாகவே இருக்கக் கூடும். ஆறு வருஷத்துக்கு முன்னால் கப்பலில் நான் மெக்ஸிகோ போனது உண்மை.. உனக்கு புரிந்து விட்டதா?” - சொல்லிவிட்டு விஷமத்தனமாக சிரித்தான்.

கப்பல் பிரேஸில் போய்ச் சேர்ந்தவுடன் அவன் சொன்னதில் இருந்த உண்மையை நேரில் பார்க்க வாய்ப்பும் கிடைத்தது..


----------------



கப்பல் பிரேஸிலை நெருங்க ஒரு நாள் இருந்தபோது பிரேஸில் பெண்களின் அழகு பற்றியும், பார்கள் பற்றியும் பேச்சு எழுந்தது. கப்பல் முழுவதும் ஒருவித உற்சாகம் பற்றிக் கொண்டுவிட்டது போல் தோன்றியது.

திருமணமாவதற்கு முன்பே கடலுக்கு 'வாழ்க்கைப்பட்டு விட்ட' இந்த கப்பல்வாசிகளுக்கு கரைதான் சொர்க்கம். அதிலும் இவர்களுக்காகவே காத்திருக்கும் பார்கள், டிஸ்கோ க்ளப்கள், காஸினோக்கள், பெண்கள்...... இவையே இவர்களுக்கு வடிகால்கள்.

கப்பல் நேராக துறைமுகத்துக்குள் போகப் போவதில்லை என்றும், நான்கு நாட்கள் வெளியே நங்கூரமிட்டு காத்திருக்கப் போகிறது என்ற செய்தி கேள்விப்பட்ட நேரத்திலிருந்து கப்பலில் உற்சாகம் கரை புரண்டோடியது. எல்லோரிடமும் ஒருவித பரபரப்பான சந்தோஷ உணர்வு.

எனக்கு அதுதான் புரியவில்லை. இத்தனை நாள் தண்ணீரையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு, இன்னும் நான்கு நாட்கள் கரையில் கால் வைக்கப் போவதில்லை என்பது வருத்தம் தரும் செய்தியில்லையா.. இதென்ன விநோதம்.. எதற்காக எல்லோரும் சந்தோஷப்பட வேண்டும்.?

அருணிடம் கேட்டேன்.

"உனக்கு பிரேஸில் பெண்களைப் பற்றித் தெரியாது. நாம் இங்கே காத்திருக்கும் நான்கு நாட்களும், படகு மூலம் பெண்கள் கப்பலுக்கே வந்துவிடுவர்கள். இங்கேயே தங்கியும் விடுவார்கள். கப்பல் நங்கூரமிடாமல் நேராக துறைமுகத்துக்குள் சென்றால், இரண்டு நாளைக்குள் சரக்கு ஏற்றிக்கொண்டு புறப்பட்டுவிடும். ஆனால் இப்போது நான்கு நாட்களும் பெண்கள் கப்பலில் தங்கப் போகிறார்களே. இப்போது புரிகிறதா, எது சந்தோஷம் என்று" - சிரித்துக் கொண்டே அருண் சொன்னான்.

அவன் சொன்னது நிஜம். மாலை நான்கு மணிக்கு கப்பல் துறைமுகத்துக்கு வெளியே நங்கூரம் பாய்ச்சியது. நங்கூரமிட்ட அரைமணி நேரத்தில் மூன்று படகுகள் மூலம், சுமார் இருபது இளம் பெண்கள் கும்பல் ஒன்று கப்பலை முற்றுகையிட்டது.

அடுத்த சில நிமிடங்களில் கப்பலின் ஏணி அவர்களுக்காக இறக்கப்பட, வண்ணத்துப் பூச்சிகளின் கூட்டம் ஒன்று கப்பலில் நுழைந்த மாதிரியான பிரமை. கப்பலே பரவசமடைந்து போனது. உற்சாகத்திற்கு தடை சொல்ல யார் இருக்கிறார்கள் அங்கே..


கப்பல் நங்கூரம் பாய்ச்சியதும், நான் மேலே தளத்துக்கு வந்தேன். வெப்பமான இஞ்ஜின் அறையிலிருந்து வெளியே வந்து கப்பலின் தளத்தில் நின்றபோது சுகமான கடல்காற்று வருடியது..

தூரத்தில் இரண்டு மைல் தொலைவில் துறைமுகத்தின் கரை கண்ணில் பட்டதும், ஏதோ புதையல் கண்ட மகிழ்ச்சியில் மனம் துள்ளியது. அலை ஒன்றும் அதிகமில்லை.

எல்லோரும் குதூகலத்துடன் எதிர்பார்த்திருந்த பெண்கள் ஏமாற்றி விடவில்லை.

'வாவ்.. அப்ஸரஸ் கூட்டம்.' - என்று கமெண்ட் அடித்தபடியே என்னருகே வந்த ஜோ கப்பலின் ஏணி வழியே வந்து கொண்டிருந்த பெண்களை எண்ண ஆரம்பித்தான்..

"..ஸிக்ஸ்ட்டீன், ஸெவெண்ட்டீன், எய்ட்டீன்.. இதுபோதும்.. பதினைந்து நாட்களாக பெண்களையே பார்க்காததால், சாதாரண அழகுள்ள பெண்கள் கூட இப்போது என் கண்களுக்கு உலக அழகி மாதிரி தான் தெரிகிறார்கள்.. இருநூறு பேர் படிக்கும் 'கோ-எஜுகேசன்' கல்லூரியில் நான்கு பெண்கள் மட்டும் இருந்தால், அவர்கள் நான்கு பேருமே மிக அழகாக இருப்பதாகத் தோன்றும்.. அதுமாதிரி தான் இதுவும்.." என்றான்.


அங்கிருந்தபடியே எந்தப் பெண்ணிடம் பேச்சுக் கொடுக்கலாம் என்று செலக்ட் செய்தான்.

"ஐ லைக் தட் ரெட் கலர் கவுன். ஓ.கே. உன்னை அப்புறம் பார்க்கிறேன். எனக்கு பாரில் வேலை இருக்கிறது"- என்று என் முதுகில் தட்டிவிட்டு, சிரித்துக் கொண்டே போய்விட்டான்.

நான் ஆறுமணிக்கு பாருக்குப் போனபோது ஜோவைச் சுற்றி மூன்று பெண்கள் மட்டும் இருந்தனர். மீதிப் பேர் எங்கே மறைந்தார்கள் என்று தெரியவில்லை.

என்னைப் பார்த்ததும், "கமான். மீட் மை ஃபிரண்ட்ஸ்.. தாரியா, ஸில்வியா அண்ட்.." மூன்றாவது பெண்ணிடம் திரும்பி, "வாட்ஸ் யுவர் நேம்" என்று கேட்க, அவள் "வலேரியா" என்றாள்.

அந்த மூன்றாவது பெண் எழுந்து என்னருகே வந்தாள். விரல்களுக்கிடையே புகையும் சிகரெட்.. இன்னொரு கையில் மதுக்கோப்பை.. விஸ்கியின் நெடி.

அவள் ஜோவின் பக்கம் திரும்பி, என்னை கைகாட்டி, "ஜோ. ஐ லைக் ஹிம் வெரிமச்.."- என்றாள்.

ஜோ என் பக்கம் திரும்பி, "இவளுக்கு உன்மேல் காதல் வந்து விட்டது. உனக்குப் பிடிக்கிறதா.. ஒரேயொரு பிரச்னை. இவள் ஏழு மாத கர்ப்பம்.. பரவாயில்லையா?"- கேட்டுவிட்டு பலமாக சிரித்தான்.

அப்போது தான் அவள் வயிற்றைக் கவனித்தேன். ஜோ சொல்வது உண்மைதான். அடப்பாவமே.. இந்த நிலையிலும் துணிந்து படகில் ஏறி வந்திருக்கிறாள்.

"ஜோ. நான் குளிக்கப் போகிறேன்.. உன் தோழியை நீயே கவனித்துக் கொள்." சொல்லிவிட்டு ரூமை நோக்கிப் புறப்பட்டேன்.


அன்றிரவு ஆபிஸர் பாரிலும், பணியாட்கள் பகுதியிலும் ஒரே கொண்டாட்டமாக இருந்தது. ம்யூஸிக்கை அலற விட்டுக் கொண்டு அந்த பெண்களோடு சேர்ந்து பலர் நடனமாடினர்.

பத்து மணிக்கு அந்த ஸில்வியாவை மட்டும் கூட்டிக் கொண்டு காணாமல் போய்விட்டான் ஜோ. எனக்கு அங்கே நடப்பதெல்லாம் புதுமையான அனுபவமாகத் தெரிந்தது. இது போன்று பெண்கள் இசைக்குத் தகுந்தபடி ஆடுவதைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன். நேரில் பார்ப்பது இதுவே முதல் முறை.

சிலர் உற்சாகம் குறையாமல் தொடர்ந்து ஆடிக் கொண்டிருந்தனர். சில பெண்கள் போதை அதிகமாகி அந்த பார் ஹாலிலேயே தரையில் தூங்கிப் போய் இருந்தனர். வேறு சிலர் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை. சீஃப் இஞ்ஜினீயர் கீழேயே வரவில்லை. கூடவே மாலை ஐந்தரை மணிக்கு அவர் ரூமிற்குப் போன பெண்ணையும் காணவில்லை.

பாவம், அந்த ஏழு மாத கர்ப்பிணி வலேரியாவை யாரும் கண்டு கொள்ளவேயில்லை போலும். பார் ஹாலில் இருந்த நீண்ட சோபாவில் காலை நீட்டி அங்கேயே தூங்க ஆரம்பித்திருந்தாள். அவளருகே கண்ணாடி மதுக்கோப்பை உருண்டு கிடந்தது. எவ்வளவு குடித்தாளோ தெரியவில்லை.

ஏ.ஸி.யின் குளிர் இரவில் அதிகமக உறுத்தியது. பதினாறு டிகிரி சென்ட்டிகிரேட் இருக்கும். அவள் குளிரில் உடல் சுருக்கி கைகால்களை கட்டிக் கொண்டு அந்த சோபாவுக்குள் புதைய முயற்சித்திருந்தாள்.

போர்வை இல்லாமல் அந்தக் குளிரில் தூங்குவது கடினம்.. அவளைப் பார்த்தால் பாவமாக இருந்தது.

அடுத்த கீழ்த்தளத்தில் இரண்டு எக்ஸ்ட்ரா அறைகள் இருந்தன. பூட்டப்படவில்லை. இப்போது அதில் யாரும் தங்கியிருக்கவில்லை. அவளை அங்கே போய் தூங்கச் சொல்லலாம் என்று நினைத்து அவளைத் தொட்டு எழுப்ப முயற்சித்தேன்.

அவள் கண்னைத் திறக்காமலேயே உளறினாள். இப்போதைக்கு எழுந்திருப்பாள் என்று தோன்றவில்லை. கீழ் அறையில் இருந்த கம்பளிப் போர்வை ஒன்றை எடுத்து வந்து, அவளை முழுவதுமாகப் போர்த்தி விட்டேன்..

தன்னிச்சையாக அவள் கை போர்வையை நன்றாக இழுத்து காலிலிருந்து முகம் வரை மறைத்துக் கொண்டு விட்டது. மெதுவாக எனது அறைக்குத் திரும்பினேன்.

ஒரு புதிய உலகத்தில் மாலைப் பொழுதைக் கழித்த பிரமிப்பு மனதில் இருந்தது. அது ஒரு தொடக்கமே.. கடல் அதைவிட பிரமிப்புகளை எனக்கு மேலும் மேலும் தரத் தயாராயிருந்தது.


கப்பலில் பெண்கள் இருந்த அந்த நான்கு நாட்களும் கப்பலின் சூழ்நிலையே மாறிப்போய் எல்லோருமே சந்தோஷமாக இருப்பதாகப் பட்டது. பதினைந்து நாட்களில் அவர்களிடம் காணப்படாத உற்சாகம் அந்த நான்கு நாட்களில் இருந்தது.
கப்பல் வாழ்க்கை ஒருவிதத்தில் இந்த உலகத்திலிருந்து தனிமைப்பட்டுப் போன சிறை வாழ்க்கை என்றாலும் இன்னொரு விதத்தில் சிலருக்கு சுகவாழ்க்கை தான். கட்டுப்பாடுகள் குறைந்த, எதற்குள்ளும் சிக்கிக் கொள்ளாத சுதந்திரமான வாழ்க்கையும் கூட- ஜோ போன்றவர்களுக்கு.

நான்காவது இஞ்ஜினீயர் அருணிடம் மட்டுமே சோகத்தின் இழை.

எனது நான்கு நாள் ஓய்வு நேரப் பொழுதும் அருணின் ரூமில் தான் கழிந்தது.

அவனுடைய அறைக்கு எந்தப் பெண்ணையும் அழைத்து வரவில்லை. அவனுடைய மனைவி கப்பலுக்கு வந்து சேரும் நாளுக்காகக் காத்திருந்தான்.

நான்காவது நாள் மாலையில் அவன் எதிர்பார்த்திருந்த செய்தி வந்தது.. அவன் மனைவிக்கு விசா ஏற்பாடு ஆகிவிட்டது. அடுத்த துறைமுகத்தில் வந்து சேருவாள் என்று கப்பலுக்கு தகவல் வந்திருந்தது.

அதன்பின் அருண் மிகவும் சந்தோஷமாகி விட்டான். மறுநாள் காலையில் கப்பல் துறைமுகத்துக்குள் போவதாகத் திட்டம். இன்னும் பெண்கள் எல்லோரும் கப்பலில் தான் இருந்தார்கள்.

அருண் என்னைப் பார்த்து, "உனக்கு பெண்கள் மீது விருப்பம் இல்லையா.. நீ யாரையும் உன் அறைக்குக் கூட்டிப் போய் நான் பார்க்கவில்லையே"- சிரித்துக் கொண்டே கேட்டான்.

"இந்த நான்கு நாட்களில் நீ ஏன் எந்தப் பெண்ணையும் உன் அறைக்கு அழைத்து வரவில்லை." என்று அருணைத் திருப்பிக் கேட்டேன்.

"வெரி ஸிம்பிள். நான் என் மனைவிக்கு துரோகம் செய்ய நினைக்கவில்லை. ரோஹிணியைச் சந்திப்பதற்கு முன் நிறைய கேர்ள் ஃபிரண்ட்ஸ் இருந்திருக்கிறார்கள். ஆனால், எனக்கென்று ஒருத்தி வந்தபின் அவளுக்கு மட்டுமே சொந்தம் என்று நினைப்பவன் நான். அவளைத்தவிர வேறு யாரையும் என்னால் நினைக்க முடியாது." என்று உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னான்.

"ஆனால் உனக்குள்ள உணர்வு மற்றவர்களுக்கு இருந்திருந்தால், இந்தப் பெண்கள் எல்லோரும் கப்பலுக்கு வந்திருப்பார்களா?"

"இந்த ஒரு கப்பலை வைத்து எல்லோரும் இப்படியே இருப்பார்கள் என்று எடைபோட்டு விடாதே. பழைய கப்பல் வாசிகள் தான் இன்னும் அப்படியே இருக்கிறார்கள்.. இப்போதைய தலைமுறை இளைஞர்களிடம் இந்தப் பழக்கம் குறைந்து விட்டது.

இந்தக் கப்பலில் பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் இருப்பதால் இவ்வளவு கூட்டம். இந்தியர்கள் இந்த விஷயத்தில் ஓரளவுக்கு கட்டுப்பாடு உள்ளவர்கள். அதிலும் இப்போது கப்பலுக்கு வரும் இளைஞர்கள் பெண்ணைத் தேடி அலைவதில்லை. இன்னொரு முக்கிய காரணம் 'எயிட்ஸ்' பற்றிய பயம். இதோ உன்னையே எடுத்துக் கொள்ளேன். ஆமாம், என்ன காரணம் என்று நீயே சொல்லேன்."

"பெரிதாக ஒன்றுமில்லை. நீ திருமணம் செய்தபின் வைத்திருக்கும் கட்டுப்பாட்டை நான் இப்போதிருந்தே கடைபிடிக்கிறேன்.. நமக்கு வரும் மனைவி மட்டும் கற்புடையவளாக இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிற மாதிரி, அவர்களும் எதிர்பார்ப்பதில் தவறு இல்லையே.."

அருண் வியப்போடு பார்த்தான்.

"நான் அப்படியெல்லாம் எதிர்பார்த்ததில்லை. திருமணத்திற்கு முன்பு எப்படி இருந்தாலும், அதற்குப் பின் ஒரு ஒழுக்கம் இருக்க வேண்டும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. அதுசரி, கடைசி வரை நீ இப்படியே இருந்து விடமுடியும் என்று நம்புகிறாயா?.. இந்த வாழ்க்கையில் வாய்ப்புகள் அதிகம்"

"இருக்கலாம். இது என்னுடைய இன்றைய மனநிலை. ஆனால், நான் மாறவே மாட்டேன் என்றெல்லாம் சத்தியம் செய்ய முடியாது. என்னிடம் உறுதி இருக்கிறது. கூடிய வரை அதைக் காப்பாற்ற முயற்சிப்பேன். அவ்வளவு தான் சொல்ல முடியும்" என்றேன்.

கப்பல்வாசிகள் என்றாலே, ஒரு காலத்தில் அவர்களைப் பற்றி இருந்த தவறான அபிப்ராயம் இன்றும் பலரிடம் தொடர்வதைக் கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் நிஜமாகவே இப்போதைய தலைமுறையினரிடம் ஒரு பிரமிக்கத் தக்க மாறுதல் ஏற்பட்டிருப்பது நிஜம்.

பழைய காலத்தில் எந்த வேலைக்கும் லாயக்கு இல்லாதவர்களைத் தான் கப்பலில் சேர்த்துக் கொண்டார்களாம். ஆனால் இப்போதைய போட்டி உலகில், பெரிய அளவில பணம் சம்பாதிக்கும் இந்தத் தொழிலில் நன்றாகப் படித்தவர்கள் போட்டி போட்டுக் கொண்டு சேர்கிறார்கள்.

இவர்கள் புதிய தலைமுறையினர். ஆனால்  முன்பு கப்பல் வாழ்க்கை இந்த அளவுக்கு முழுவதும் புனிதமானதாக இருந்ததென்று பொய் சொல்ல முடியாது. நான் அதை கண்ணெதிரே கண்டவன்.

இதிலும் இந்தியர்கள் மட்டுமே முழுக்க முழுக்க இருக்கும் கப்பல்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதில்லை. ஆனால் வெளிநாட்டு கப்பல்வாசிகளுடன் பணிபுரியும் என்னைப் போன்றவர்கள் இதுமாதிரி நிகழ்ச்சிகளை ஏராளமாகப் பார்த்து இருக்கிறோம்.

ஐந்தாவது நாள் காலையில் பெண்கள் அனைவரும் எங்கள் கப்பலை விட்டுவிட்டு, புதிதாக அங்கே நங்கூரமிட்டிருந்த இன்னொரு கப்பலைத் தேடிப் போய் விட்டனர்..

மறுநாள் பிரேஸில் நாட்டில் காலடி எடுத்து வைத்த எனக்கு, அந்த மண் வேறொரு பிரமிப்பைத் தரக் காத்துக் கொண்டிருந்தது..

இன்னொரு அனுபவத்தை, வாழ்க்கையில் இன்றுவரை மறக்க முடியாத ஒருசிலரை அன்று அந்த ஊர் அறிமுகப்படுத்த தயாராக இருந்தது.. அது ஒரு வித்தியாசமான இரவு அனுபவம்..

----------------------

ஐந்தாவது நாள் காலையில் பெண்கள் அனைவரும் எங்கள் கப்பலை விட்டுவிட்டு புதிதாக அங்கே நங்கூரமிட்டிருந்த இன்னொரு கப்பலுக்குப் போய்விட்டனர்.

எங்கள் கப்பலை துறைமுகத்துக்குள் கொண்டு செல்ல மாலை நான்கு மணிக்கு 'பைலட்' வருவார் என்று துறை முகத்திலிருந்து செய்தி வந்திருந்தது.

கப்பலின் தலைமைப் பொறுப்பேற்று கப்பலை வழி நடத்துவது கேப்டன். ஆனால், பொதுவாக சொல்வதானால் அவரது கடமை கப்பல் துறைமுகத்தை விட்டு வெளியே ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தாண்டியதும் ஆரம்பிக்கிறது.

கப்பலை துறைமுகத்துக்குள் கொண்டு செல்லவும், சரக்குகள் ஏற்றி (அல்லது இறக்கி) முடித்தபின், வெளியே கொண்டுபோய் விடுவதற்கும் 'பைலட்' என்ற பதவியில் இருப்பவர்கள் தேவைப்படுகிறார்கள். இவர்களும் ஏற்கனவே கப்பல்களில் கேப்டனாக பணியாற்றி அனுபவமுள்ளவர்கள்.

இவர்கள் துறைமுகக் கழகத்தில் (Port Trust) 'பைலட்' பணியில் சேர்வார்கள். அந்த குறிப்பிட்ட துறைமுகத்தைப் பற்றி முழு விவரங்களையும் நன்றாகத் தெரிந்து வைத்திருப்பார்கள்.

எந்த இடத்தில் எவ்வளவு ஆழம், பாறைகள் உள்ளனவா என்ற சமாச்சாரங்கள் எல்லாம் இவர்களுக்கு அத்துப்படி. இவர்கள் கப்பலை துறைமுகத்துக்குள் கொண்டு செல்ல எஞ்ஜினை எந்த வேகத்தில் செலுத்த வேண்டும், கப்பலின் ஸ்டீயரிங் வீலை எந்தப் பக்கம் திருப்ப வேண்டும் என்பதற்கெல்லாம் ஆர்டர் கொடுப்பார்கள்.

நங்கூரமிட்டு காத்திருக்கும் கப்பலுக்கு துறைமுகத்தில் இருந்து தனிப்படகு மூலம் வரும் அவர்கள் கப்பலில் ஏற 'பைலட் ஏணி' என்ற தனி நூலேணியும் உண்டு. சில நாட்டின் துறைமுகங்களில், பைலட்டுகள் படகுக்குப் பதிலாக ஹெலிகாப்டர்கள் மூலமும் வந்து சேர்வதுண்டு.

மேலும் கப்பலை துறைமுகத்துக்குள் கரை சேர்க்கும் போது உதவி செய்ய 'Tugs' எனப்படும் பெரிய, அதிக சக்தியுள்ள படகுகளும் உண்டு.

இந்தப் படகுகள் கப்பலை கயிறுகள் மூலம் இழுத்துக் கொண்டு வந்து திருப்ப வேண்டிய இடத்தில் திருப்பி, கடைசியில் கரையில் கட்டப்படும் வரை உதவி செய்யும். கப்பலை கரையில் கட்டி முடித்தவுடன் பைலட்டுகளின் வேலை முடிந்துவிடும்.

அதுபோலவே சரக்கு ஏற்றி, இறக்கி முடித்த பின்பும் கப்பலை வெளியே கொண்டு போக இதே பைலட் மற்றும் Tug கூட்டணி உதவி செய்யும்.


அன்று மாலை பைலட் வந்து எங்கள் கப்பலை துறை முகத்துக்குள் கொண்டு போனார். கப்பல் கரை சேர்ந்தபோது மாலை மணி ஆறு ஆகிவிட்டது.

தென் அமெரிக்கக் கண்டத்தில் காலடி எடுத்து வைக்கப் போகிற புதிய மகிழ்ச்சி கலந்த எதிர்பார்ப்பு என்னிடம் இருந்தது.

"என்கூட வா.. உனக்கு ஒரு புதிய உலகத்தை அறிமுகப் படுத்துகிறேன்" என்று ஜோ என்னைக் கப்பலை விட்டு வெளியே போக அழைத்தான்.

ஏழுமணிக்கு கப்பலை விட்டு இறங்கி தரையில் கால் பதித்த போது கண்களில் நீர் கட்டி மறைத்தது நிஜம். இத்தனை நாள் தண்ணீரிலேயே மிதந்த போது, இதோ... இந்தத் தரையின் ஸ்பரிசத்துக்காகத் தானே மனம் ஏங்கியது.

"என்ன, அழுகிறாயா.. முதன்முதலாக கரையில் கால்வைக்கும் போது இப்படித்தான் இருக்கும்".

"இல்லை ஜோ.. ஏனோ எனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை.. தெரியாமல் நுழைந்து விட்டேனோ என்று தோன்றுகிறது. கண்டிப்பாக அடுத்த முறை கப்பலுக்கு வரமாட்டேன்."

ஜோ சிரித்தான்.

"ஆரம்ப காலத்தில் சந்திக்கும் அனுபவத்தை வைத்து எல்லோரும் இதே டயலாக்கைத் தான் சொல்கிறார்கள். நான்கூட சொன்னேன். இப்போது பார், பன்னிரெண்டு வருடங்களாக கடல் என்னை விடமாட்டேன் என்கிறது. எல்லாம் பணம் படுத்தும் பாடு.. இங்கே கிடைக்கும் பணம் வேறு எங்கே கிடைக்கிறது."

உண்மைதான். அன்று திரும்ப கப்பலுக்கே வரமாட்டேன் என்று கண்ணீர் விட்ட என்னால் கப்பல் வாழ்க்கையை உதற முடிந்ததா.. அதெல்லாம் ஆரம்ப கால வெறுப்பினால் தோன்றிய எண்ணம்.

இன்னொரு புதிய அனுபவத்தை, வாழ்வில் மறக்க முடியாத சிலரை, அன்றிரவு அறிமுகப் படுத்த அந்த ஊர் தயாராக இருப்பதை அறியாதவனாக நான் ஜோவுடன் டாக்ஸியில் ஏறினேன்.

---------
கப்பலில் இருந்து டாக்ஸி பிடித்து ஜோவும், நானும் ஊருக்குள் போனோம்.

"தண்ணீரையே பார்த்து வெறுத்துப் போயிருப்பாய்.. இன்று உலகத்தின் இன்னொரு பக்கத்தை உனக்கு அறிமுகப் படுத்துகிறேன்.. சும்மா வந்து வேடிக்கை பார். அதில் ஒன்றும் நீ உன் கற்பை இழந்து விடமாட்டாய்.." என்று டாக்ஸியிலேயே ஜோ என்னைக் கேலி செய்தான்.

மடீரா ஒன்றும் பெரிய ஊராகத் தெரியவில்லை. சொல்லப் போனால் ஒரு கிராமத்து சைஸ் தான் இருக்கும் போல் தெரிந்தது.

'காஸப்பிளாங்கா' என்று எழுதியிருந்த அந்த பாரின் முன், டாக்ஸியை நிறுத்தச் சொன்னான் ஜோ.. நியான் விளக்கில் அந்த பாரின் பெயர், அந்த இடத்திற்கு பொருத்தமான சிவப்புக் கலரில் ஒளிர்ந்தது.

அது ஒரு மூன்றாந்தர பார்.. அந்த ஊருக்கு அதுதான் 'நம்பர் ஒன்'னாம்.பாதி இருட்டாக இருந்த ஹாலில் அங்கங்கே நிறைய டேபிள், நாற்காலிகள்.. மது பாட்டில்கள், க்ளாஸ்கள் டேபிளிலும், தரையிலும் உருண்டு கிடந்தன.

காது வலிக்கும் இரைச்சலான சத்தத்தில் 'லம்பாடா' ம்யூஸிக். நடுவே மேடை போன்ற பகுதியில் அரைகுறை உடையில் இசைக்கு ஏற்ப உடலையும், கைகால்களையும் அசைத்து ஜோடியாகவும் தனியாகவும் ஆடிக்கொண்டிருந்த பிரேஸிலியப் பெண்கள். கூடவே சில ஆண்கள்.

ஏதோ ஏற்கனவே நன்றாக அறிமுகமானவன் போல் பார்க்கும் பெண்களையெல்லாம், 'ஹாய்' சொல்லிக் கொண்டிருந்தான் ஜோ. மங்கிய வெளிச்சத்தில் ஓரமாக இருந்த வட்டமான மேஜை ஒன்றில் ஜோவும் நானும் உட்கார்ந்தோம்.

அந்த டேபிளில் மூன்று நாற்காலிகள் காலியாக இருந்தன.

"ஹலோ ஃபிரண்ட்ஸ். ஐ'ம் பார்பரா"- எங்கிருந்தோ திடீரென தோன்றிய அந்தப் பெண், எங்கள் அருகே வந்து காலியாக கிடந்த நாற்காலியில் ஜோவிற்கும், எனக்கும் நடுவில் அமர்ந்தாள்.

இறுக்கமான கவுன் மாதிரி ஏதோ ஒன்றும், மேலே கை இல்லாத ரவிக்கையும் அணிந்திருந்தாள்.. அதை ரவிக்கை என்பதை விட 'பிரா' என்றுதான் அழைக்க வேண்டும். கரும்சிவப்பு நிற லிப்ஸ்டிக். அடர்த்தியான, கருமையான நிறத்தில் தலைமுடி சுருண்டு கழுத்து வரை இருந்தது.

"ஹாய்.. ஐ'ம் ஜோ.." - அறிமுகப்படுத்திக் கொண்ட உடனேயே அவளை நெருக்கமாக இழுத்து தோளில் கைபோட்டுக் கொண்டான். வந்து நின்ற சப்ளை செய்யும் பெண்ணுக்கு வயது பதினைந்துக்குள் இருக்கும். உடையில் இருவருக்கும் அதிக வித்தியாசம் இல்லை.

ஜோ இரண்டு பாட்டில் பீர், சிகரெட்டுடன் ஒரு கோகோ கோலா ஆர்டர் செய்தான்.

ஜோவின் அந்த புதிய தோழி 'கோக்' என்று விநோதமாகப் பார்க்க ஜோ "அது என் நண்பனுக்காக" என்று என்னைக் கைகாட்டினான்.

அவள் என் பக்கம் திரும்பி, "நீ பீர் குடிக்க மாட்டாயா என்ன?" என்று கேட்டாள்.

'இல்லை' யென்று தலையசைத்தேன்.

"நோ.. நான் நம்ப மாட்டேன்." என்று சொல்லிவிட்டு சந்தேகத்தோடு பார்த்தாள்.

"சின்னப் பையன்.. கப்பல் வாழ்க்கைக்குப் புதிது. இன்றுதான் பார் பக்கமே வந்திருக்கிறான்.. போகப் போக சரியாகிவிடுவான்." -சொல்லிவிட்டு ஜோ சிரிக்க அவளும் சிரித்தாள்.

திடீரென்று, "ஹாய், மை டியர் ஜோ.. வாட் எ ஸர்ப்ரைஸ்.. உன்னைப் பார்த்து எத்தனை நாட்களாகி விட்டன." - கருப்பு ஜீன்ஸ், கருப்பு டீ-சர்ட் சகிதம் கழுத்தில் சின்னதாக தங்கச் செயினில் சிலுவை தொங்க, புதிதாக முளைத்த இன்னொரு பெண், ஜோவை நெருங்கி, அவன் கழுத்தை இரு கைகளாலும் வளைத்துக் கொண்டு, உதட்டுடன் அழுத்தமாக முத்தம் கொடுத்துவிட்டுத் தான் ஜோவைப் பேசவிட்டாள்.

"ஹேய் ஹெலன்.. எப்படி இருக்கிறாய். ஏன் கப்பலுக்கு வரவில்லை. நீ வருவாய் என்று நான் எதிர்பார்த்தேன்".

எனக்கு எல்லாமே புதுமையாக இருந்தது. ஜோவுக்கு அந்தப் பெண் முன்பே அந்த இடத்தில் அறிமுகமானவள் என்று அவர்கள் பேச்சிலிருந்து தெரிந்தது.

முதலில் வந்த பெண்ணை விட்டுவிட்டு, ஹெலனோடு ஜோ பிஸியாகிவிட, அந்த பார்பரா என்பக்கம் திரும்பி, சிகரெட் ஒன்றை பற்ற வைத்துக் கொண்டு, என்னிடமும் ஒரு சிகரெட்டை நீட்டினாள்.

"நோ தாங்க்ஸ். ஐ டோண்ட் ஸ்மோக்"- என்று மறுக்கவும் அவள் ஒரு மாதிரியாகப் பார்த்தாள்.

"ஓ.கே. வா போகலாம். என்னோடு டான்ஸ் ஆடு.." என்று என் கையைப் பற்றி வலுக்கட்டாயமாக இழுத்து எழுப்ப முயல, நான் மறுத்து, "ஸாரி, எனக்கு டான்ஸ் ஆடத் தெரியாதே" என்றேன்.

"மை காட்.. டான்ஸ் ஆடக்கூட வரமாட்டாயா. பரவாயில்லை. நல்ல பையன்.. நேரத்தை வேஸ்ட் செய்ய வேண்டாம்.. வா என் ரூமுக்குப் போகலாம் " என்று கையைப் பிடித்தாள்.

'எதற்கு' என்று கேட்கவில்லை..

-அந்த இடத்தில் கேட்கக் கூடாத கேள்வி அது ஒன்றுதான்.

என் கைபிடித்து இழுத்த பார்பராவின் கையை மெதுவாக விலக்கி விட்டு, "என்னைக் கொஞ்சம் தனியாக விடுகிறாயா.. ப்ளீஸ்"- என்று அவளிடம் கெஞ்சினேன்.

எனது கைகளை விடாமல் பிடித்துக் கொண்டிருந்தவளை, "ஹேய் பார்பரா.. உன்னை 'மாமசாங்' கூப்பிடுகிறாள்"- என்று யாரோ கூப்பிடுவதாகச் சொல்லி அந்த சமயத்தில் அங்கே வந்து நின்ற பெண்ணுக்கு முப்பது வயது இருக்கலாம்.

('மாமசாங்' என்ற வார்த்தை எல்லா கப்பல்வாசிகளுக்கும் அறிமுகமான வார்த்தைதான். இந்த மாதிரியான இடங்களுக்கெல்லாம், 'மாமசாங்' என்பது தலைவிப் பொறுப்பில் உள்ளவளைக் குறிக்கும்.

நம்மூரில் பெரிய உடம்பு வைத்துக் கொண்டு, வரவேற்பறை சோபாவில் உட்கார்ந்து, பெரிய சைஸ் குங்குமப் பொட்டு, வெற்றிலை சிவப்புடன் சினிமாவில் காட்டும் 'பெரிய அக்கா' மாதிரி.)

புதிதாக வந்து நின்றவள் என்னைப் பார்த்து, "ஹாய்.. உன்னைப் பார்த்தால் இந்தியன் போல் தெரிகிறது" என்றாள்.

வேறு வழியில்லாமல் 'ஆம்' என்று தலையசைத்தேன்.

இதற்குள் என் கைகளை உதறிய பார்பரா, என்னைக் கைகாட்டி புதிதாக வந்தவளிடம் கோபமாக சொன்னாள்.

"வோஸே நோ ஃப்யுமா.. வோஸே நோ பேபே.. வோஸே நோ டன்ஸா.."- கோபத்துடன் என்னைப் பார்த்துக் கொண்டே, இன்னும் 'கொஞ்சம் ஏதோ' சொல்லிவிட்டு, அந்த இடத்தை விட்டுப் போனாள். (அதற்குப் பின் அவள் சொன்ன 'கொஞ்சம் ஏதோ' வார்த்தைகள் சென்ஸார் செய்யப்பட்டுள்ளது.. இங்கே தரப்படவில்லை)

எனக்கு அவள் சொன்னதின் அர்த்தம் எதுவும் புரியவில்லை. ஆனால் அது ஆங்கிலம் இல்லை என்பது மட்டும் தெரிந்தது.

புதிதாக வந்தவள், பார்பரா திட்டிவிட்டுப் போவதையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு, பின் என்னைப் பார்த்தாள். எனக்கு எதுவும் பேசத் தோன்றவில்லை.

அவள் மெதுவாக என்னருகே இருந்த சேரில் அமர்ந்தாள்.

"உனக்கு ஒரு விஷயம் தெரியுமா.. ஐ லைக் இண்டியன்ஸ் வெரி மச்" என்றாள்.

பதில் சொல்லாமல் அவளைப் பார்த்தேன். 'பிடித்தால் எனக்கென்ன' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

அந்த பார்பரா சில நிமிடங்களில் என்னை ஒரு வழி பண்ணியிருந்தாள். அதனால் இவளைப் பார்த்தபோது அதே எரிச்சல் இருந்தது.

"ஏனென்று கேட்க மாட்டாயா?"

"ஏன்" என்று கேட்டு வைத்தேன் வேறு வழியில்லாமல்.

"ஏனென்றால் என் மகள் ஒரு இந்தியனுக்குப் பிறந்தவள்.. உனக்கு VIZAG தெரியுமா..?"

"ம். தெரியும். நான் அங்கே தான் டிரெயினிங் செய்தேன்" என்றேன்.. (விசாகப்பட்டினத்தை Vizag என்று சுருக்கமாக அழைப்பது வழக்கம்.)

நான் சொல்லி முடிக்கவும் அவள் முகத்தில் பளீரென ஒரு பிரகாசம் தெரிந்தது.

"ஓ. நிஜமாகவா.. அப்படியானால் உனக்கு நட்ராஜைத் தெரியுமா?" -மிகவும் ஆர்வத்துடனும், நிஜமான எதிர்பார்ப்புடனும் கேட்ட அவளைப் பார்த்தால் பரிதாபமாகத் தோன்றியது.

விசாகப்பட்டினத்தில் உள்ள எத்தனையோ லட்சம் பேரில் இவள் குறிப்பிடும் 'நட்ராஜை' எப்படி எனக்கு தெரிந்திருக்கும் என்று எதிர்பார்க்கிறாள்.?. ஒருவேளை 'மடீரா' போல் சின்ன ஊராக நினைத்து இருக்க வேண்டும்.

"தெரியாது." என்றேன் நான்.

"நட்ராஜ் என் பெண்ணுக்கு அப்பா"

"ஓ.. உன் கணவனா?"

"இல்லையில்லை.." என்றாள் அவசரமாக.

"உன்னைப் போல் நட்ராஜும் கப்பலில் வேலை செய்பவர் தான். அவர் ஒரு மாலுமி. பதினைந்து வருஷம் முன்பு சந்தித்தேன். அவரைப் பார்த்தவுடன் எனக்கு அவருடன் ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமென்று தோன்றியது.

அப்போது அவருடைய கப்பல் துறைமுகத்துக்கு வெளியே பதினைந்து நாள் நங்கூரமிட்டு இருந்தது. பதினைந்து நாளும் நான் நட்ராஜோடு தான் இருந்தேன். அதற்குப் பின் நட்ராஜை நான் பார்க்கவேயில்லை.. அட்ரஸ் கூட இல்லை.." - சொல்லி முடித்து விட்டு திடீரென சோகமாகிப் போனாள்.

முதலில் 'இதெல்லாம் என்ன கதை' என்று தோன்றியது. ஆனால் அவள் சொல்வதைப் பார்த்தால் உண்மை என்றும் தோன்றியது.

நான் இந்தியன் என்றவுடன் யாரோ ஒரு நட்ராஜுக்குத் தான் குழந்தை பெற்றுக் கொண்டதை பெருமிதத்துடன் சொல்லும் அவளைப் பார்க்கும்போது வியப்பாகவும் இருந்தது. அவளிடம் மேலும் பேச வேண்டும் என்று ஏனோ தோன்றியது.

"உன் பெயரென்ன"- என்று கேட்டேன்.

"பட்ரீஷியா.. என்னை உனக்குப் பிடிக்கிறதா.."

எடுத்த எடுப்பிலேயே இப்படித்தானா கேட்பது?...

'பிடித்திருக்கிறது' என்று சொன்னால் 'உன்னிடமும் ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்' என்று கேட்டாலும் கேட்பாளோ என்று நினைத்தேன்..

என்னையும் மீறி சிரித்து விட்டேன்.

"ஏன் நீயாகவே சிரித்துக் கொள்கிறாய்?"

நான் சிறிது தயங்கிவிட்டு, நினைத்ததைச் சொன்னேன். அவள் இடதுபக்கம் தலையைச் சாய்த்து என் முகத்தை சில வினாடிகள் உற்றுப் பார்த்து விட்டு, பின் அவளும் சிரித்தாள்.

அந்த நிமிடத்தில் என்னை நினைத்து நான் ஆச்சர்யப்பட்டேன்.

'நான் தானா இது.. முன்பின் அறிமுகம் இல்லாத பெண்ணிடம் இவ்வளவு சுலபமாக எப்படிப் பேசினேன்.. அதுவும் மிகவும் நெருக்கமாக குழந்தை பெற்றுக் கொள்வதைப் பற்றிப் பேசும் அளவுக்கு..'

கடல் வாழ்க்கை என்னை மாற்றத் தொடங்கி விட்டதை நான் உனர்ந்து கொண்ட நிமிடம் அது.. இந்த பதினைந்து நாள் கடல் வாழ்க்கை என்னை நிறையவே மாற்றி விட்டது.
--------------

எனக்குள்ளே இத்தனை வருடங்களாக பூட்டியிருந்த ஏதோ ஒரு விலங்கு சட்டென்று உடைந்து போனது போல ஒரு உணர்வு..

'எப்படி இதையெல்லாம் நினைக்கவும் முடிகிறது' என்று ஆச்சர்யப்பட்டேன்.

அதைவிட, முன்பின் அறிமுகம் இல்லாத இவளிடம் எப்படி மனதில் நினைத்ததையெல்லாம் வெளிப்படையாக சொல்லிவிட முடிந்தது.? கப்பல் வாழ்க்கை செய்த மாற்றம் தானா?..

ஆனால் அதுமட்டுமே காரணம் இல்லையென்று தோன்றியது. அவளுக்கு முன் பேசிக் கொண்டிருந்த பார்பராவிடம் பேசுவதற்குக் கூட தயக்கம் இருந்தது. ஆனால் இவளிடம்தான் இத்தனை வெளிப்படையாக பேசினேன்.

ஏதோ ஒன்று அவளிடம் பேச வைத்து விட்டது. பட்ரீஷியா இன்னமும் சிரித்துக் கொண்டிருந்தாள்.

பின் என்னை உற்றுப் பார்த்துவிட்டு சொன்னாள்.

"உன்னைப் பார்த்து அப்படி கேட்க எனக்கு மனமே வரவில்லை.. ஆனால், பார்பரா திட்டிவிட்டுப் போவதைப் பார்த்தால் உன்னிடம் அது சாத்தியமும் இல்லை என்றல்லவா தோன்றுகிறது.."

சிந்தனையிலிருந்த என்னை அவளின் பேச்சு இழுத்தது.

"ம்.. என்ன கேட்டாய் இப்போது?."

அவள் திரும்பவும் சொன்னாள்.

அவள் சொல்லி முடிக்கவும், அந்த பார்பராவே திரும்ப அங்கே வந்துவிட்டாள்.

"ஹேய் பட்ரீஷியா.. இது கோக்கோ கோலா கேஸ்.. வேஸ்ட்.. வேறு ஆளை பிக்-அப் செய்து கொள்."- என்று சொல்லிவிட்டுப் போனாள்.

போகும்போது என்னை ஏளனமாகவும் ஒரு பார்வை பார்த்துவிட்டுப் போனாள்.

"அவள் என்ன சொல்லித் திட்டிவிட்டுப் போனாள்.. என்ன மொழி அது?"

"அது எங்கள் மொழி.. போர்த்துக்கீசு கலந்தது.. நான் வந்து நின்றபோது அவள் சொல்லிவிட்டுப் போனதெல்லாம் உண்மையா"

"அவள் என்ன சொன்னாள் என்று எனக்கு எப்படி புரியும்?"

"அவள் சொன்னதை அப்படியே ஆங்கிலத்தில் சொல்லவா.. நீ சிகரெட் புகைக்க மாட்டாய்.. குடிக்கவும் மாட்டாய்.. டான்ஸ் ஆடவும் வர மாட்டாய்.."- என்று சொல்லிவிட்டு, ஏதோ சொல்ல வந்து, பின் தயக்கத்துடன் நிறுத்தினாள்.

"அவ்வளவுதான் சொன்னாளா?"

"இல்லை. இன்னொன்றும் சொன்னாள்." என்று மறுபடியும் தயங்கி விட்டு, "வேறென்ன.. படுக்கைக்கும் வரமாட்டாய்.. பின் எதற்கு உன்னை மாதிரி ஆள் இந்த இடத்திற்கு வர வேண்டும் என்று கேட்டுவிட்டுப் போகிறாள்"- சொல்லிவிட்டு மறுபடியும் சிரித்தாள்.

எனக்கும் அந்த நேரத்தில் சிரிப்பு தான் வந்தது. இந்த இடத்தில் எனக்கென்ன வேலை.. இந்த மாதிரி இடத்துக்கு வந்துவிட்டு, எதிலுமே சேர்த்தி இல்லையென்றால் அவளுக்கு கோபம் வந்து திட்டிவிட்டுப் போனதில் தவறே இல்லை என்று தோன்றியது.. உண்மைதானே..


பட்ரீஷியா என்னை உற்றுப் பார்த்துவிட்டு, "அவள் சொல்வதெல்லாம் உண்மையா.. பின் ஏன் இந்த இடத்திற்கு வந்தாய்?"

நான் மனதுக்குள் கேட்டுக் கொண்டதையே அவளும் கேட்டாள். ஏனோ அவளிடம் சொல்லிவிட மனம் வந்தது.

"கப்பல் ஒரு ஜெயில் மாதிரி இருந்தது.. அதிலிருந்து கொஞ்ச நேரமாவது சுதந்திரமாக ஊர் சுற்றிப் பார்க்கலாம் என்று என் நண்பன் கூட்டி வந்தான்.."

அப்போது தான் கவனித்தேன்.. ஜோ அங்கே இல்லை.. அந்த ஹெலனோடு போயிருக்க வேண்டும்.

மேஜையில் முழங்கைகளை ஊன்றி கன்னத்தில் முகத்தைத் தாங்கிக் கொண்டு அவள் என்னையே மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தாள்..

ஒரு பையன் மேஜை அருகே வந்தான்.

"ஒரு பீர்.. ஒரு கோக்.."- என்று ஆர்டர் செய்தாள்..

நான் பணத்தை எடுத்துக் கொடுத்தேன். அவள் அந்தப் பையனிடமிருந்து வாங்கி திரும்ப என் சட்டைப் பையினுள் வைத்தாள்.

அவளது முயற்சியை தடுக்க விரும்பினேன்.. ஆனால், அவளுடைய கையைப் பிடித்துத் தான் அதைச் செய்ய வேண்டி வரும் என்ற தயக்கம் தோன்ற, சிறிது சங்கோஜப்பட்டேன்..

"இத்தனை வருடங்களாக எனக்கு மற்ற ஆணகள் டிரிங்க்ஸ் வாங்கித் தந்திருக்கிறார்கள்.. இன்று உன்னைப் பார்த்ததும் எனக்கு ஏதோ தோன்றியது.. ப்ளீஸ்.. என்னைப் பணம் கொடுக்க அனுமதி.. நான் ஒரு விலைமாது தான்.. ஆனால் எனக்கும் உணர்வுகள் உணடு.. இன்று ஒரு நாள் நீ என் விருந்தாளியாக இரு.. ப்ளீஸ்"- என்று என்னைப் பார்த்து சொன்னாள்.

அவள் குரலும் மாறியிருந்தது.. எனக்கு அவளின் திடீர் மாறுதல் ஆச்சர்யமாக இருந்தது..

"இங்கே வருபவர்கள் எல்லாம் குடித்துவிட்டு எங்கள் உடலைத் தொட்டு அனுபவிக்க வருவார்கள்.. ஆனால் பத்து நிமிடங்கள் உன்னுடன் இருக்கிறேன்.. என்னைத் தொடக்கூட நினைக்க்வில்லை.. நீ கப்பலில் என்னவாக இருக்கிறாய்.."

"ஜூனியர் இஞ்ஜினீயர்.. இதிலே ஆச்சர்யப்பட எதுவுமில்லை.. நான் இந்த வாழ்க்கைக்குப் புதிது.. இதுதான் முதல்முறை.. இன்னும் எதுவும் பழக ஆரம்பிக்கவில்லை.. அடுத்த முறை என்னை சந்தித்தால், கண்டிப்பாக நானும் நன்றாக குடிக்க ஆரம்பித்து இருப்பேன்.. மற்றவர்களைப் போல் உங்களின் உடம்புக்காகவே வருபவனாகி விடக்கூடும்."

நான் சொல்லவும் அவள் மறுத்தாள்..

"இல்லையில்லை.. உன்னைப் போல் கப்பலில் சேர்ந்த ஆரம்ப நாட்களில் இங்கே வந்த எத்தனையோ பேரை நான் பார்த்து இருக்கிறேன். அவர்களிடம் கூச்சம் இருக்கும். என்னைத் தொட்டால் நான் எதுவும் நினைத்துக் கொள்வேனோ என்ற பயத்தில் தொடாமல் இருப்பார்களே தவிர, கண்டிப்பாக உன்னைப் போல் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டு இருக்க மாட்டார்கள். நீ மாற மாட்டாய். என நினைக்கிறேன்"

என்னைவிட, அவள் என்மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பதாக அப்போது தோன்றியது. பீரும் கோக்கும் வந்தது.

அதன்பின் நிறைய பேசினாள். இடையே சிலர் வந்து அவளை டான்ஸ் ஆடுவதற்கு அழைத்தனர். சிலர் தனியே அறைக்கு அழைத்தனர். அவள் யாருடனும் போகவில்லை.

அவள் குடும்பத்தைப் பற்றி சொன்னாள். இந்த வாழ்க்கையில் நுழைந்த கதை சொன்னாள். பத்து வயது சிறுமியாக இருக்கும் போதே சண்டை போட்டு பிரிந்து விட்ட அவளின் பெற்றோர்...அவர்கள் இருவருமே வேறு வேறு திருமணம் செய்து கொண்டதை.. அவளை அன்போடு கவனிக்க ஆளில்லாமல் வாழ்க்கையில் திசைமாறி கடைசியில் இந்த வாழ்க்கையை தேர்ந்தெடுத்தது பற்றி எல்லாமே சொன்னாள்.

அவள் மகளைப் பற்றி நிறைய சொன்னாள்.

"உனக்குத் தெரியுமா.. என் மகள் நிஜமாகவே நல்ல புத்திசாலி.. என்னைப்போல் இல்லை.. நான் இந்த வாழ்க்கையில் இருப்பதே அவளுக்குப் பிடிக்கவில்லை.. எந்த காரணத்தைக் கொண்டும் அவளை இந்த பார் பக்கம் மட்டும் வரவிட மாட்டேன்."- உணர்ச்சி வசப்பட்டு பேசிய அந்தப் பெண்ணிற்குள் ஒரு அக்கறையுள்ள நல்ல தாய் இருப்பது புரிந்தது.

மணி பத்தாகி விட்டிருந்தது.. நேரம் போனதே தெரியவில்லை.. நிறைய குடித்தாள். எத்தனையோ முறை முயற்சித்தும் என்னை பணம் கொடுக்க அனுமதிக்கவில்லை..

"நோ.. இன்று நீ என் விருந்தாளி" என்று கண்டிப்பாக தடுத்து விட்டாள்.

ஜோவும் அந்தப் பெண்ணும் காணாமல் போய் நீண்ட நேரமாகி விட்டது.

"உன்னை ஒன்று கேட்பேன்.. மறுக்க மாட்டாயே.."

என்ன கேட்டு வைக்கப் போகிறாள் என்று யோசித்தேன்..

"பயப்படாதே.. குழந்தை வேண்டும் என்று கேட்க மாட்டேன்."-சிரித்து விட்டு, "என் வீடு இங்கே பக்கத்தில் தான்.. இரண்டு நிமிடம் நடந்தால் போதும்.. என் மகளை உனக்கு அறிமுகப் படுத்துகிறேன்.. நீ Vizag-ல் இருந்திருக்கிறாய் என்று தெரிந்தால் அவள் மிகவும் சந்தோஷப் படுவாள்.. அவளுக்கு நட்ராஜைப் பார்க்க நிறைய ஆசை.. என்னோடு வீட்டுக்கு வருகிறாயா"

இந்த சிலமணி நேரப் பழக்கத்தில் ஏதோ நீண்ட காலம் பழகிய தோழி போன்ற உணர்வு தோன்றியது. சிறிது தயக்கம் இருந்தது.. ஜோ தென்படுகிறானா என்று சுற்றிலும் பார்த்தேன்..

"கவலைப் படாதே.. உன் நண்பன் இப்போதைக்கு வரமாட்டான்.. நாம் அதற்குள் போய்விட்டு அரைமணி நேரத்தில் திரும்பி விடலாம்" என்று என் முகத்தை ஆர்வத்துடன் பார்த்தாள்.

ஏதோ ஒரு இனம்புரியாத அபிமானத்தில் எழுந்து அவளுடன் நடக்க ஆரம்பித்தேன்..


ஒருவேளை நான் போக மறுத்திருந்தால்.. சீறிப்பாயும் அலைகளையும், கடுமையான புயற்காற்றையும் சந்திக்கும் அந்தக் கடல் வாழ்க்கையில் 'ரோஸானா' என்ற தென்றலை நான் சந்திக்காமலேயே போயிருப்பேன்..


------------------

பாரிலிருந்து இரண்டு நிமிட நடையில் பட்ரீஷியாவின் வீடு இருந்தது.

அது ஒரு குடியிருப்புப் பகுதி. ரோட்டின் இரண்டு புறமும் வரிசையாக சின்னச் சின்ன வீடுகள். சின்னதாக இருந்தாலும் வெளித் தோற்றத்திலேயே நல்ல அழகுடன் இருந்தன.

அவள் வீட்டின் முன்புறத்தில் சின்னதாக தோட்டம் போன்று பூச்செடிகள் நிறைந்திருந்தது..

அழைப்பு மணியை அழுத்திய சிறிது நேரம் கழித்து கதவு திறந்தது. அந்தப் பெண் தூக்கத்திலிருந்து எழுந்து வந்திருக்க வேண்டும்..

வாசலில் நின்ற எங்கள் இருவரையும் ஆச்சர்யத்துடன் பார்த்தாள்.

"ரோஸி.. உனக்கு அறிமுகப் படுத்த வேண்டும் என்று இவரை வீட்டுக்குக் கூட்டி வந்தேன்." என்று என் பெயர் சொல்லி அறிமுகப்படுத்தி, "நட்ராஜின் ஊர்ப்பக்கம் தான் இவரின் ஊரும்.. உன் டாடியின் ஊரைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர்.."- அவளுக்கு அறிமுகப்படுத்தி விட்டு, என்பக்கம் திரும்பி, "நான் சொன்னேன் இல்லையா.. என் மகள் ரோஸானா" என்றாள்.

நான் "ஹலோ" என்றேன்.

அழகாக சிரித்து இரண்டு கைகளையும் ஒன்று சேர்த்து வணங்கி, "நமஸ்கார்" என்றாள். எனக்கு ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி. எதிர்பார்க்கவும் இல்லை.

"என்ன, ரோஸி உங்கள் நாட்டு மொழி பேசுகிறாளே என்று பார்க்கிறாயா.. நட்ராஜிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட வார்த்தை இது. அவள் சரியாக உச்சரித்தாளா?" என்று கேட்டாள் பட்ரீஷியா.

"அது மட்டுமில்லை.. இந்திய வாழ்க்கை முறை, இந்தியா சம்பந்தப்பட்ட நிறைய விஷயங்களைப் படித்து நிறையவே தெரிந்து வைத்துள்ளேன்" என்றாள் ரோஸானா.

எனக்கு அவள் பேசிய எதுவும் மனதில் நிற்கவில்லை. அவளைப் பார்த்ததிலிருந்து ஏனோ அந்த முகத்தில், அந்த கண்களில் தெரிந்த இனந்தெரியாத ஈர்ப்பில் அதற்கான காரணம் தேடி என்னை மறந்து யோசித்துக் கொண்டிருந்தேன். பார்த்த உடனேயே சிலரின் முகம் நமக்குப் பிடித்துப் போகும். காரணம் என்னவென்றே தெரியாது.. அது போலத்தான் இப்போதும்.

"என்ன ஆனது உங்களுக்கு.. ஏன், என் முகத்தையே அப்படிப் பார்க்கிறீர்கள்.."- அவளது ஆங்கில உச்சரிப்பு மிக மென்மையாக இருந்தது.

நல்ல உயரம்.. உருண்டையான அழகான முகத்தில், அளவெடுத்தது போன்ற பொருத்தமான கச்சிதமான மூக்கு.. சிரித்தபோது பளிச்சென்ற பல்வரிசை..

பொன்னிறத்தில் இருந்த தலைமுடியை பின்புறமாக வாரி, பின்னால் ஒற்றையாக சிவப்பு கலரில் ரிப்பன் போல ஏதோ ஒன்று வைத்துக் கட்டியிருந்தாள். கோதுமை நிறத்தில் இருந்த அவளின் கழுத்துக்குப் பின்னால் அந்த சிவப்பு நிற ரிப்பன் தெரிந்தது..

கழுத்தை ஒட்டிக் கொண்டு மெலிதான செயின் ஒன்று சிலுவையுடன் தொங்கியது.

காலர் வைத்த சிவப்பு நிற சட்டையும், பல வண்ணங்களில் கட்டங்களுடன் இருந்த கருப்பு கவுனும் அணிந்திருந்தாள்.. முழங்கால் தாண்டி கீழே வரை இருந்தது கவுன்.. சட்டையை கவுனுக்குள் 'இன்' செய்திருந்தாள்..

ஏனோ சூர்யகாந்திப்பூ அந்த நேரத்தில் நினைவில் வந்தது.. வானவில் ஒன்று தரையிறங்கி என் முன்னால் தரையில் நிற்பது போல ஒரு சந்தோஷம் அந்த வினாடியில்..

முகத்தோற்றத்தில் அவளுக்கும் பட்ரீஷியாவுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது.. ஒரு இந்தியப் பெண்ணின் சாயல் இருந்தது.

"என்ன.. என் முகத்தையே பார்த்துக் கொண்டு நிற்கிறீர்கள்.. உள்ளே வாருங்கள்."- மென்மையாக சிரித்தாள்.

ஏனோ தெரியவில்லை. 'ரோஸானா' என்ற பெயர் உடனேயே பிடித்துப் போனது.

பத்ரீஷியாவின் வீடு பளிச்சென்று இருந்தது. ஒவ்வொரு பொருளும் மிக நேர்த்தியாக சரியான இடத்தில்
இருப்பதாகத் தோன்றியது. அதுவே அந்த வீட்டின் அழகை அதிகப்படுத்திக் காட்டியது.

"வீட்டை மிகவும் அழகாக வைத்திருக்கிறீர்கள்" - நான் பட்ரீஷியாவைப் பார்த்து சொன்னேன்.

அவள் ரோஸானா பக்கம் திரும்பி புன்னகைத்தாள்.

"எனக்கெங்கே இதற்கெல்லாம் நேரம் கிடைக்கும். இரவு முழுதும் பாரில்.. பகல் முழுதும் தூங்கத்தான் முடியும்.. எல்லாம் ரோஸியின் திறமை.."

ரோஸானா வெட்கத்துடன் தலைகுனிந்து கொண்டாள். பதினைந்து வயது என்று நம்ப முடியாது.. பெரிய பெண்ணாகத் தெரிந்தாள்.

"இரண்டு பேரும் பேசிக் கொண்டிருங்கள். நான் சாப்பிட ஏதாவது கொண்டு வருகிறேன்.". எங்களை தனியாக விட்டுவிட்டு பட்ரீஷியா உள்ளே போனாள்.


நான் ரோஸானாவிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் அந்த ஹாலில் உள்ள ஒவ்வொரு பொருளாகப் பார்த்தேன்.

சுவரில் ஒரு ஓவியத்தில் சின்ன வயது ரோஸானா வயலட் நிற உடையணிந்து இருந்தாள்..
பெயிண்ட்டிங் அது..

"என்னை நானே படமாக வரைந்தேன்"- என் பார்வை அந்த ஓவியத்தில் படுவதைப் பார்த்து ரோஸானா சொன்னாள்.

"ரோஸி மிக அழகாக ஓவியம் வரைவாள்." - சொல்லிக் கொண்டே வந்த பட்ரீஷியா ஸாண்ட்விச் கொண்டு வந்து வைத்துவிட்டு மீண்டும் உள்ளே போனாள்.

"ஏன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறீர்கள்."- ரோஸானா தான் பேசினாள்.

நான் அவள் பக்கம் திரும்பி புன்னகைத்தேன். பட்ரீஷியா என்னை வீட்டுக்கு கூட்டி வந்தது இவளுக்குப் பிடித்ததா, இல்லையா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. அதை அவளின் முகத்திலிருந்து கண்டுபிடிக்க முடியவில்லை..

பேசுவதற்கு வேறு எதுவும் தோன்றாத சூழ்நிலையில் சிறிது தயக்கத்துடன் மெதுவாகக் கேட்டேன்.

"என்னை இங்கே கூட்டி வந்ததற்கு உன் மம்மி மேல் கோபம் வரவில்லையா.."

அவளிடமிருந்து தாமதமில்லாமல் பதில் வந்தது.

"நோ நோ.. மம்மி இதுவரை யாரையும் வீட்டுக்கு அழைத்து வந்ததில்லை.. நீங்கள்தான் முதல் ஆள்.. என்னை 'பார்' பக்கமே வரக்கூடாது என்று கட்டளையிட்டிருக்கிறாள். உங்களை வீட்டுக்கு கூட்டி வந்ததும் எனக்கும் கூட ஆச்சர்யம்.

மம்மி பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். இத்தனை வருடங்களில் மம்மி இவ்வளவு சீக்கிரம் வீட்டுக்கு வந்ததே இன்றுதான்.. அதுவும் கொஞ்சம் நிதானமாகவே இருக்கிறாள்.. காரணத்தை நீங்களே சொல்லிவிடுங்களேன்.."

இவள் சொல்வது உண்மையென்றால் பத்ரீஷியா நிச்சயமாய் என்னை மதித்து இருக்க வேண்டும்.அவள் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்லவேண்டும் என்று தெரியவில்லை.

சிறிது நேரம் கழித்துக் கேட்டேன். "ரோஸானா.. உனக்கு உன் மம்மி வாழ்க்கை மேல் கோபமே இல்லையா..?"

முட்டாள் நான்.. அவளிடம் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்க வேண்டாமோ என்று அதன்பின் தான் நினைத்தேன்.

அவள், 'இல்லை'யென்று தலையசைத்தாள்.

"உங்களுக்கு என் மம்மி பற்றி சரியாகத் தெரியாது.. அவள் என்மேல் உயிரையே வைத்திருக்கிறாள்.. அவளுக்குப் பிடித்து இந்தத் தொழில் செய்யவில்லை.. என்னை டாக்டராக்க வேண்டுமென்பது அவள் ஆசை.. என் ஆசையும் கூட.. அதற்காகப் பணம் சேர்க்கிறாள்.. எனக்காகத் தான் அவள் இன்னும் இந்தத் தொழிலிலேயே இருக்கிறாள்..

அது போகட்டும்.. என் டாடியை நீங்கள் பார்ப்பீர்களா?.. பார்த்தால் கண்டிப்பாக நான் விசாரித்ததாகச் சொல்லுங்கள்.. எனக்கும் இந்தியாவைப் பார்க்க ஆசையாக உள்ளது. டாடியையும் தான்.. நான் டாக்டர் ஆனவுடன் கண்டிப்பாக என்னை இந்தியா அனுப்புவதாக மம்மி ப்ராமிஸ் செய்திருக்கிறாள்."

அவள் கண்களில் தெரிந்த கனவை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

"என்ன சொல்கிறாள் ரோஸி.. இந்தியா வரவேண்டும் என்று தானே.." கேட்டுக் கொண்டே வந்தாள் பட்ரீஷியா.

நட்ராஜுக்கு இப்படி ஒரு பெண் இருப்பது தெரியக் கூட செய்யாது. இப்போது இந்தப் பெண் இந்தியா போய் 'டாடி' என்றால் எப்படியிருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன்.

"என் மகளோடு பேசினாயா.. ஒருமுறை அவளை உன் ஊருக்குக் கூட்டிப்போய், நட்ராஜைக் கண்டுபிடித்துக் காட்டிவிடு.. அவளுக்கு நிம்மதியாக இருக்கும்"

நான் ரோஸானாவைப் பார்த்து புன்னகைத்தேன்..

"இப்போதே ரெடி.. நான் ஊருக்குப் போனதும் முதல் வேளையாக உன் டாடியைக் கண்டுபிடித்து உன்னைக் கூட்டிப் போய் காட்டுகிறேன்.. சந்தோஷமா.."

அது சாத்தியமா என்றெல்லாம் அந்த நேரத்தில் யோசிக்கவே இல்லை.. அவளை சந்தோஷப்படுத்த அது உதவும் என்ற எண்ணத்தில் அப்படிச் சொல்லிவிட்டேன். அவள் மென்மையாக சிரித்தாள்.

அவளது இடது கையில் ராக்கி மாதிரி கயிறு கட்டியிருந்தாள்... ஆனால் அது நூல் போல் இல்லாமல் மெல்லிய துணி போல் இருந்தது. ஏதோ எழுத்துக்களும் அதில் பிரிண்ட் செய்யப்பட்டிருந்தன.

"என்ன இது கையில்.. " என்று கேட்டேன்.

"Fita de Sorte என்று இதற்குப் பெயர்.."

"எங்கள் நாட்டில் இதை 'ராக்கி' என்பார்கள். தனக்குப் பின்னால் சுற்றும் இளைஞனைப்
பிடிக்கவில்லை என்றால், அவன் கையில் கட்டிவிட்டு சகோதரனாக்கி விடுவார்கள் எங்கள் ஊர்ப் பெண்கள்.. எனக்கு நிறைய பேர் கட்டி விட்டார்கள்.. நீ யார் பின்னால் சுற்றினாய்.?"

அவள் சிரித்தாள்.

"இது யாரும் கட்டிவிட்டதில்லை.. நானே கட்டிக் கொண்டேன்..எங்கள் நாட்டு வழக்கம்..ஒருவிதத்தில் அதிர்ஷ்டக் கயிறு மாதிரி.."

"நீ எதற்காக இதைக் கட்டியிருக்கிறாய்.."

"இந்தக் கயிறைக் கட்டிக் கொள்ளும் போது மனதில் மூன்று ஆசைகளை நினைத்துக் கொள்ள வேண்டும்.. இதை அவிழ்க்கவே கூடாது.. இது தானாக நம் கையிலிருந்து விழுவதற்குள் நம்முடைய மூன்று ஆசைகளும் நிறைவேறிவிடும்.. இது எங்களின் நம்பிக்கை.." என்றாள்.

"அப்படி என்ன மூன்று ஆசைகளை நீ நினைத்துள்ளாய்?"

"அதை வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என்பது முக்கியமான கட்டுப்பாடு.. சொன்னால் அது பலிக்காது.." என்று சிரித்தபடியே சொன்னவள், "எல்லாம் நிறைவேறிய பின் உங்களைச் சந்தித்தால் கண்டிப்பாக சொல்கிறேன் "- சொல்லிவிட்டு வெட்கத்துடன் தலைகுனிந்தாள்.

இடது கையிலிருந்த அந்தக் கயிற்றை வலது கை விரல்களால் லேசாக தொட்டுப் பார்த்துக் கொண்டாள்.

எனக்கு நினைத்துப் பார்க்கையில் எல்லாமே ஆச்சர்யமாக இருந்தது. ஏதோ நீண்ட நாள் பழகியவர்களோடு இருப்பது போல் ஒரு உணர்வு தோன்றியது.. நீண்ட நாட்களுக்குப் பின் மனதில் எந்தவித கவலையின்றி சந்தோஷமாக இருப்பதாகவும் உணர்ந்தேன்..

திரும்பும்போது ரோஸானா தெருமுனை வரை வந்து வழி அனுப்பி வைத்தாள்.

விடைபெறும் முன் "நாளைக்கும் வருவீர்களா.. கப்பல் இருக்குமில்லையா" என்று கேட்டாள்.

"கப்பல் நாளை மறுநாள்தான் புறப்படும்" என்றேன்.

"அப்படியானால் கண்டிப்பாக நாளை மறுபடியும் வாருங்கள்.. "

நேரமிருந்தால் கண்டிப்பாக வருவதாகச் சொல்லிவிட்டு அவளிடம் விடைபெற்றேன்..




----------------


ரோஸானாவிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு திரும்பவும் பார் நோக்கி நடக்க ஆரம்பித்தோம். நானும் பட்ரீஷியாவும் மட்டுமே அந்த நீண்ட இருளடைந்த வீதியில்.

தூரத்தில் 'காஸப்பிளாங்கா' பாரின் நியான் எழுத்துக்கள் தெரிந்தது.. மனதில் ஒரே ஒரு கேள்வி மட்டும் அழுத்திக் கொண்டேயிருந்தது. கேட்டுவிட்டேன்.

"பட்ரீஷியா.. நீ வாழும் வாழ்க்கை தப்பென்று உனக்கு தோன்றவில்லையா.."

சிறிது நேரம் மௌனமாக நடந்து வந்தாள். பின்பு எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னாள்.

"சரி, தப்பெல்லாம் அவரவர் மனதைப் பொறுத்தது.. உனக்கு சரியென்று படும் விஷயம் எனக்கு தவறாகப் படலாம்."

"ஆனால் நாம் பேசிக்கொண்டிருக்கும் விஷயம் உலகம் முழுதும் ஒரே மாதிரியாகத்தானே பார்க்கப் படுகிறது."

"இருக்கலாம்.. என்னைப் பொறுத்தவரையில் அடுத்தவரை பாதிக்காத எதுவும் தவறில்லை. இது ஒரு விதத்தில் வியாபாரம். எனக்கு பணம் தேவைப்படுகிறது. அவர்களுக்கு என் உடம்பு. இதில் நான் செய்வது மட்டும் எப்படி தவறாகும்?..

இங்கே வந்து போகும் ஆண்களில் எத்தனை பேர் மனைவியிடம் இது பற்றி ஒப்புக் கொள்வார்கள்?. அவர்கள் மனைவி மட்டும் இவர்களுக்காக வாழ்நாள் முழுதும் காத்திருக்க வேண்டும். ஆனால் இவர்களுக்கு போகும் இடங்களில் கிடைத்த பெண்கள் எல்லாம் சொந்தம்.

அவர்களின் வாழ்க்கை உனக்கு ஏன் தப்பாகத் தெரியவில்லை.. அவர்கள் பணம் கொடுக்கிறார்கள் என்றால் நான் உடல் கொடுக்கிறேன்.. இதில் யார் உயர்ந்தவர்கள் என்பதை நீ எப்படி தீர்மானிக்கிறாய்.?"

அவள் குரலில் சிறிது கூட கோபம் இல்லை.. ஆனால் வார்த்தைகளில் அழுத்தம் இருந்தது.

நான் இடைமறித்தேன். "நான் அவர்களைப் பற்றி பேசவில்லை.. அவர்கள் செய்தது சரி என்று சொன்னேனா.. நீ செய்வது சரியா என்பது மட்டுமே என் கேள்வி."

சிறிது நேரம் மீண்டும் மௌனமாக இருந்தாள். ஏதோ தீவிரமாக சிந்திப்பது போல் இருந்தது.. பின் மெதுவாகச் சொன்னாள்.

"நீ கேட்பது சரிதான்.. நிஜத்தைச் சொன்னால் எனக்கு நிறைய பணம் தேவைப்படுகிறது.. என் மனதுக்கும் இந்தத் தொழில் பிடிக்கவில்லை தான். ஆனால் பிரேஸிலில் என்னுடைய தகுதிக்குக் கிடைக்கும் வேலையில் மாத சம்பளம் வாங்கி என்னால் வாழ்க்கை நடத்த முடியும் என்று தோன்றவில்லை.. ஒருவேளை சாப்பாடு கூட கிடைக்காது..

எல்லாவற்றிற்கும் மேல் நான் ரோஸி மேல் உயிரை வைத்திருக்கிறேன்.. அவளுடைய எதிர்கால வாழ்க்கை எனக்கு முக்கியம்.. அதற்கு நிறைய பணம் தேவை."

"அவளை டாக்டராக்க வேண்டும்.. அதுதானே"

அவள் என் முகத்தைப் பார்த்தாள்.

"ரோஸி உன்னிடம் சொன்னாளா.."

'ஆம்' என்று தலையசைத்தேன்.

நீண்ட சோக பெருமூச்சு அவளிடமிருந்து வெளிப்பட்டது.. அதற்குள் பார் வந்துவிட்டது.

ஜோ என்னைக் காணாமல் குழம்பிப் போய் நின்று, நாங்கள் வருவதைப் பார்த்து நிம்மதியானான். நான் பத்ரீஷியாவோடு வருவதை ஆச்சர்யமாகப் பார்த்தான் அவன்.

பாரைவிட்டு டாக்ஸியில் புறப்பட்ட போது, "நாளைக்கும் கப்பல் இருக்கும் இல்லையா.. அப்படியானால் கண்டிப்பாக நாளைக்கு மீண்டும் வா.. நான் காத்திருக்கிறேன்.." என்றாள்.

'சரி'யென்று தலையசைத்தேன். ஜோ என்ன நடக்கிறது என்பது புரியாமல் என்னையும் பத்ரீஷியாவையும் ஆச்சர்யமாகப் பார்த்தான்.


-------------

அன்றைய மாலைப் பொழுதில் கிடைத்த புதுமையான அனுபவங்கள் தந்த பிரமிப்பு, இன்னும் என் மனதை விட்டு நீங்கவில்லை.

டாக்ஸி துறைமுக எல்லைக்குள் நுழைந்து எனது கப்பல் கட்டப்பட்டிருந்த 'ஜெட்டி' நோக்கிச் சென்றது..

(கடலோடு ஒட்டிக் கட்டப்பட்டுள்ள துறைமுகத்தின் தரைப்பகுதி 'ஜெட்டி' எனப்படுகிறது.. இதில் அமைக்கப் பட்டுள்ள சின்ன தூண் போன்றவற்றுடன் தான் கயிறுகள் மூலம் கப்பலைக் கட்டுவார்கள்)

சுதந்திரமாக அலைந்து திரிந்துவிட்டு, கப்பலிலிருந்து கரைக்கு இறக்கப் பட்டிருந்த இரும்பு ஏணிப்படியில் ஏறும் போது, மீண்டும் சிறைக்குள் செல்வது போல் மனதில் தோன்றி மறைந்ததை ஏனோ என்னால் தவிர்க்கவே முடியவில்லை..

கப்பலின் தளத்தில் நின்று நாங்கள் வருவதைக் கவனித்துக் கொண்டிருந்தான் அப்போது டியூட்டியில் இருந்த பிலிப்பினோ மாலுமி.

வழக்கமாக கப்பல் கடலில் செல்லும்போது நான்கு மணி நேர 'வாட்ச் கீப்பிங்' முறையில் பணியில் இருக்கும் 'நேவிகேட்டிங்' ஆபிஸர்கள் கப்பல் துறைமுகத்துக்கு வந்ததும் வேறு மாதிரி ஷிஃப்ட் முறைக்கு மாற்றிக் கொள்கிறார்கள்.

துறைமுகத்தில் சரக்குகளை கையாளும் பணி நடைபெறுவதால் சீஃப் (நேவிகேட்டிங்) ஆபீஸர் ஷிஃப்ட் பணி பார்ப்பதில்லை.. அதற்குப் பதிலாக இரண்டாவது மற்றும் மூன்றாவது ஆபிஸர்கள் பனிரெண்டு மணியிலிருந்து ஆறு மணி வரை ஒருவர், ஆறு மணியிலிருந்து பனிரெண்டு மணி வரை இன்னொருவர் என்று தங்கள் இருவருக்குள் டியூட்டியை பகிர்ந்து கொள்கின்றனர்.

நான் கப்பலுக்குப் போன சமயம் இரண்டாவது ஆபிஸர் மோஹித் பணியில் இருந்தான். அவனுக்கு உதவியாக ஒரு மாலுமியும் பணியில் இருந்தான்.

துறைமுகத்தில் கடல்நீர் மட்டம் எப்போதும் ஒரே அளவாக இருப்பதில்லை. ஒரு நாளில் மாறுபடும் நீர்மட்டத்தால், கப்பலின் உயரமும் அதற்கேற்றாற் போல், துறைமுக ஜெட்டியின் தளத்தைவிட வேறுபடும்.

கப்பலைக் கரையோடு கட்டப் பயன்படும் கயிறுகளின் இறுக்கமும் அடிக்கடி அதற்கேற்றாற் போல் மாறுபடுவதால், கயிறு அறுந்து போகாமல் கப்பலில் உள்ள 'வின்ச்'(Winch) என்ற சாதனங்களின் மூலம் அந்தக் கயிறுகளின் இறுக்கத்தை அவ்வப்போது சரிப்படுத்துவது அந்த மாலுமியின் வேலை. அவன் தான் ஏணியையும் அடிக்கடி ஏற்றி இறக்கி வைக்கும் வேலையையும் செய்பவன்.

தளத்தில் நின்றிருந்த அவன், "என்ன.. பிரேஸிலைப் பார்த்தாயா.. பெண்கள் எல்லாம் எப்படி இருந்தார்கள்?" என்று கேட்டான்..

கேள்வியில் கேலியுடன் ஏக்கமும் தெரிந்தது.. காரணம் இல்லாமல் இல்லை. கப்பல் கட்டப்பட்டதிலிருந்து அவன் இன்னும் கரைக்குப் போகவில்லை..

அவனின் டியூட்டி நேரம் அப்படி.. நாளைக் காலையில் தான் அவன் கரைக்குப் போக முடியும். அந்த ஏக்கம் கண்களில் தெரிந்தது.

நான் சிரித்துக் கொண்டே என் அறை நோக்கிச் சென்றேன்.

நிறைய பேருக்கு கப்பலில் வேலை பார்பவர்களைப் பற்றி ஏராளமான கற்பனைகள் உள்ளன..

"உனக்கென்னடா.. நாங்கள் எல்லாம் கொட்டிக் கொட்டிக் கொடுத்தாலும் பார்க்க முடியாத இடங்களையெல்லாம் , உனக்கு கைநிறைய கொட்டிக் கொடுத்து, 'போ.. உலகத்தைச் சுற்றிப் பார்' என்று பார்க்க வைக்கிறார்கள்.."- என்று என் நண்பர்கள் சொல்வார்கள்..

ஆனால் அதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்பது எனக்குத்தான் தெரியும்.

இங்கே நாங்கள் உல்லாசப் பயணிகள் இல்லை.. வேலை செய்ய வந்திருப்பவர்கள். இப்போதைய நவீன உலகத்தில் எல்லாமே அவசரம்.. அதனால் சரக்குக் கப்பல்கள் துறைமுகங்களில் தங்கும் நாட்களும் குறைவு.. சில இடங்களில் வெறும் ஏழு மணி நேரம் மட்டும் தங்கும்.

நாங்கள் உலகம் முழுதும் சுற்றிப் பார்க்கலாம் என்பது உண்மையே.. ஆனால் எல்லாத் துறைமுகங்களிலும் அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை.

'கப்பலில் வேலை பார்ப்பவர்கள், ஏதாவது ஒரு துறைமுகத்துக்குப் போனவுடன், கப்பலை விட்டுவிட்டு, ஹோட்டலில் போய் தங்கிக் கொள்வீர்களா' என்று நிறைய பேர் கேட்கிறார்கள்.

அப்படியெதுவும் இல்லை. கப்பலில் தான் தங்கவேண்டும். அதிலும் துறைமுகத்தில் இருக்கும் நாட்களிலும் வேலை இருக்கும்..

சொல்லப்போனால் கப்பல் கடலில் பயணம் செய்யும்போது செய்யும் வேலையை விட பல மடங்கு அதிக வேலை துறைமுகத்தில் இருக்கும் போது செய்ய வேண்டியிருக்கும்.. அதனால் பகல் முழுதும் வேலை செய்தே ஆக வேண்டும்..

சிலசமயம் கப்பல் அந்தத் துறைமுகத்தில் குறைந்த மணி நேரங்களே தங்க நேரிடும் போது, அந்த சிலமணி நேரத்துக்குள் பெரிய ரிப்பேர் வேலைகளைச் செய்ய வேண்டியிருந்தால் இரவும், பகலும் தொடர்ந்து வேலை செய்து கொண்டேயிருக்க வேண்டும்.

எனவே நாம் ஆசைப்பட்டதற்காக, கப்பல் துறைமுகம் போய்ச் சேர்ந்ததும் கப்பலை விட்டுவிட்டு ஊர் சுற்றப் போய்விட முடியாது.. அதிலும் ஆபிஸர் ரேங்கில் உள்ளவர்களுக்கு பொறுப்பு அதிகம் என்பதால், எல்லா துறைமுகங்களிலும் வெளியே போவது சிரமம்.

கப்பல் கடலில் செல்லும் போது இயங்கும் இயந்திரங்களுக்குச் செய்ய வேண்டிய ரிப்பேர் வேலைகள், பழுது ஆகாமல் தடுக்க முன்கூட்டியே செய்ய வேண்டிய 'Preventive Maintanence' வேலைகளையும் துறைமுகத்தில் இருக்கும் போது தான் செய்யமுடியும்.

அதனால் இஞ்ஜினீயர்கள் பகலில் வெளியே செல்வது மிகவும் அரிது. ஒருவேளை எல்லா ரிப்பேர் பணிகளும் முடிந்து, சரக்கு ஏற்றி இறக்குவது காரணமாக கப்பல் அதிக நாட்கள் கரையில் தங்கும் வாய்ப்பு ஏற்பட்டால், பகலில் வெளியே செல்ல முடியும்.

இல்லையேல் மாலையில் தான் முடியும். இரவில் என்ன சுற்றி பார்க்க முடியும்?. கடல் மாலுமிகளின் சொர்க்க பூமியான 'நைட் க்ளப்'பிற்கும், பார்களுக்கும் செல்லத்தான் நேரம் கிடைக்கும்.

சென்னைத் துறைமுகத்துக்கு வரும் வெளிநாட்டைச் சேர்ந்த கப்பல் பணியாளர்கள் இரவில் துறைமுகத்தை விட்டு வெளியே வந்து, பாரிமுனை பர்மா பஜாரையும், மிஞ்சிப் போனால் ஏதாவது ஒரு ஹோட்டல் பாரில் நுழைந்து பொழுதைக் கழித்து விட்டு, 'இந்தியாவையே பார்த்து விட்டேன்' என்று அவர்கள் ஊரில் போய் சொல்லிக் கொண்டால் எப்படியோ அப்படித்தான் எனக்கும்.

இதோ, நானும் இன்று பிரேஸிலின் ஒரு சின்ன துறைமுகத்திலுள்ள ஒரு பாருக்குச் சென்று, சில மணி நேரம் செலவழித்து விட்டு, எல்லோரிடமும் தென் அமெரிக்கக் கண்டத்திற்குப் போய் காலடி பதித்து விட்டேன் என்றும், பிரேஸிலுக்குப் போய் சுற்றிப் பார்த்து விட்டதாகவும் பெருமையடித்துக் கொள்ளப் போகிறேன்..

நான் பிரேஸிலில் என்ன சுற்றிப் பார்த்தேன் என்பது எனக்கு மட்டும் தானே தெரியும்!.

ஆனாலும், மற்றவர்களுக்கு கிடைக்காத அந்த அனுபவம் எனக்குக் கிடைத்தது என்ற சந்தோஷம் இருந்ததை மறுப்பதற்கில்லை. அந்த புதிய அனுபவம் தந்த மகிழ்ச்சி ஒருகணம் கப்பல் வாழ்வின் கசப்பை மறக்கடித்திருந்தது.

அதை நினைத்துக் கொண்டே தூங்கிப் போனேன். அன்றிரவு தூக்கத்தில் குழப்பமாய் நிறைய கனவுகள் வந்தன.. ஒரு கனவில் நான் பார்பராவுடன் டான்ஸ் ஆடினேன்.. ஆடிக் கொண்டிருக்கும் போதே அவளின் முகம் திடீரென பட்ரீஷியாவாக மாறிப் போனது.

நான் அதெப்படி என்று ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருக்கும் போதே, பட்ரீஷியாவின் வயிறு பெரிதாக ஆரம்பித்தது.. அவள் நிறைமாத கர்ப்பிணி போல ஆகிவிட்டாள்.

"பட்ரீஷியா.. என்ன இது?" குழப்பத்துடன் நான் கேட்டேன்.

"நானா பட்ரீஷியா.. நான் வலேரியா.. நீ தான் இந்தக் குழந்தைக்கு அப்பா.. விட்டுவிட்டு இந்தியாவுக்கு ஓடிவிடாதே.. என்னையும் கூட்டிப்போ..." என்றாள் வலேரியா.

சீஃப் இஞ்ஜினீயர் திடீரென்று தோன்றி, "ஆமாம் . அவளைத் திருமணம் செய்து கொள்.. அவளைத் திருமணம் செய்ய மறுத்தால், உன்னை மறுபடியும் 'பில்ஜ் க்ளீனிங்' வேலையில் போட்டு விடுவேன்" என்றார்.

'அய்யோ.. 'பில்ஜ் க்ளீனிங்' வேலையா.. வேண்டாம், நான் இவளையே திருமணம் செய்து கொள்கிறேன்..'- என்று கத்தினேன்..

பதறிப்போய் கண்விழித்த போது ஏழு மணி ஆகியிருந்தது.. நான் கனவு தான் கண்டேன் என்ற நிம்மதியுடன் எழுந்தேன்.

அன்று மாலை கப்பலை விட்டு மீண்டும் பாருக்குப் புறப்பட்டேன்..

கப்பலில் இரும்புத்தாது ஏற்றும் பணி நடந்து கொண்டு இருந்தது.. அநேகமாக விடிவதற்குள் முடிந்து விடும் என்று சொன்னார்கள்.. இந்தத் துறைமுகத்தில் இருந்து கப்பல் கண்டிப்பாக நாளை புறப்பட்டுவிடும்..

அன்று மாலை கப்பலை விட்டு மீண்டும் 'காஸப்ளாங்கா' பாரை நோக்கி புறப்பட்டேன்.

என்னுடன் வந்தவர்கள், "என்ன, எல்லோரையும் முந்திக் கொண்டு புறப்படுகிறாய்.. பிரேஸில் பெண்களுக்கு மயங்கி விட்டாயா?" என்றனர்.

"என்னிடம் மட்டும் சொல்.. நான் வேறு யாரிடமும் சொல்ல மாட்டேன்.. எதற்காக அந்தப் பெண்ணின் வீட்டுக்கே போனாய்.. பாரில் என்றால் எல்லோருக்கும் தெரிந்து விடும் என்று பயமா?"- என்று கேட்டான் ஜோ..

நான் சிரித்தேன்.."நீயும் கூட அப்படித்தான் நினைக்கிறாயா.. நான் யாருக்கும் பயந்து எதுவும் செய்ய வேண்டியதில்லையே.." என்றேன்.

"சும்மா உன்னை சீண்டிப் பார்த்தேன்.." என்று என் தோளில் கைவைத்து அழுத்தினான்.

டாக்ஸி பாருக்குப் போய்ச் சேர்ந்தது. பட்ரீஷியா வித்தியாசமான உடையில் இருந்தாள். நேற்று அவள் இந்த பாரில் உள்ள பெண்கள் எல்லோரையும் போல், ஆண்களைக் கவர்ந்திழுக்கும் உடையில் இருந்தாள்.. இன்றோ மிக நாகரீகமாக உடையணிந்திருந்தாள்..

எங்களின் டாக்ஸி பாருக்குப் போய்ச் சேர்ந்ததுமே அவள் ஓடிவந்து என் கைகளைப் பற்றிக் கொண்டாள்.

"இங்கே தங்க வேண்டாம்.. வீட்டுக்குப் போய்விடலாம் இல்லையா.." என்றாள்.

மீண்டும் வீட்டுக்கே போனோம். ரோஸானாவும் மிகவும் சந்தோஷமாக இருந்தாள்.நிறைய உணவு வகைகளை தயார் செய்திருந்தனர்.. நீண்ட நேரம் மூவரும் பேசிக் கொண்டிருந்தோம்.

அதன்பின், "ரோஸி ஏதோ உன்னிடம் பேச வேண்டுமென்றாள்.. நீங்கள் பேசிக் கொண்டிருங்கள்.. நான் அடுத்த வீடு வரை போய் வருகிறேன்.." என்று சொல்லிவிட்டு, பட்ரீஷியா வெளியே போய்விட்டாள்.

என்ன சொல்லப் போகிறாள் ரோஸானா?.. ரோஸி அறைக்குள் சென்று திரும்பி வந்தாள்..

அவள் கையில் ஒரு புகைப்படம்.. அதில் ரோஸியுடன் இருபது வயது வாலிபன்.. நீண்ட தலைமுடி கழுத்து வரை இரண்டு பக்கமும் சுருண்டு தொங்கிக் கொண்டிருந்தது.. மிகவும் அழகாக இருந்தான்.

"யார் இது.. உன் பாய் ஃபிரெண்டா?"

அவள் வெட்கத்துடன் "ஆம் " என்று தலையசைத்தாள்.

ரோஸிக்கு மிகவும் பொருத்தமானவன் என்று தோன்றியது..

அவள் சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு, பின் தயக்கத்துடன், "இது ராபர்ட்.. பக்கத்து டவுனில் இருக்கிறான்.. நல்ல ஃபுட்பால் ப்ளேயர்.. நான் அவனை திருமணம் செய்ய வேண்டுமென்று என்னை வற்புறுத்துகிறான்..

ஆனால் எனக்கு டாக்டராகி எல்லோருக்கும் சேவை செய்ய ஆசை.. அதன் பின்தான் திருமணம் செய்யலாம் என்று எண்ணம்.. அவனோ இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் திருமணம் செய்துவிட வேண்டும் என்கிறான்"- என்றாள்.

"உன் மம்மியிடம் சொன்னாயா?.."

"எனது பாய் ஃபிரெண்ட் என்று மட்டும் தெரியும்.. திருமணம் பற்றியெல்லாம் சொல்லவில்லை.."

"நீ என்ன முடிவு செய்துள்ளாய்..?"

"அதுதான் எனக்கும் புரியவில்லை.."

"உனக்கு அவனைப் பிடித்துள்ளதல்லவா..?"

"ஆமாம்.. ஆனால் கண்மூடித்தனமான காதல் அல்ல.. அவனைப் பிடித்திருக்கிறது. வாழ்க்கை துணையாக வந்தால் நல்லது.. அதற்காக எனது லட்சியங்களை, அம்மாவின் ஆசையை விட்டுவிட முடியுமா.. நான் நிஜமாகவே இந்த விஷயத்தில் குழப்பத்துடன் உள்ளேன்"

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை..

"உன் தோழிகளோடு பேசிப் பார்த்தாயா.. ஏன், உன் அம்மாவிடமே இதைச் சொல்லி தீர்வு கேட்கலாமே"

"அம்மாவிடம் இப்போது சொல்லி அவளையும் குழப்ப வேண்டாம் என்று அது பற்றிச் சொல்லவில்லை.. நீங்கள் என் நிலையில் இருந்தால் என்ன செய்வீர்கள்?"


திடீரென்று என்பக்கம் கேள்வியைத் திருப்பி விட்டாள்.. நான் இந்தச் சிக்கலை எதிர்பார்க்கவில்லை..

"சரி.. நான் நேற்று தான் உன்னைச் சந்தித்தேன்.. என்னிடம் ஏன் இதைக் கேட்கிறாய்.."

"எனக்கு நண்பர்கள் என்று யாருமில்லை.. அம்மாவே உங்களையும் மதித்து அழைத்து வந்திருக்கிறாள்.. அவளை போலவே உங்களையும் மதிக்கிறேன்.. அதனால் தான்"

சிறிது யோசித்தேன்.. என்னையும் ஒரு ஆளாக மதித்து கேட்கிறாள்.. சந்தோஷமாக இருந்தது. எனக்குத் தெரிந்தவரை ஒரே ஒருவழிதான் தோன்றியது.. நான் நினைத்ததைச் சொன்னேன்.

"நீ கேட்டதால் சொல்கிறேன்.. நான் உன் நிலையிலிருந்தால், ராபர்ட் சொல்வதை ஏற்றுக் கொள்வேன்.. மூன்று வருடத்திற்குள் திருமணம் செய்து கொள்ளுங்கள்.. அதன்பின் டாக்டர் படிப்பையும் நீ விட்டுவிடத் தேவையில்லை..

உன் லட்சியமும் நிறைவேறும்.. நீ விரும்பிய வாழ்க்கைத் துணையும் கிடைக்கும்.. உன் லட்சியத்துக்குத் திருமணம் கண்டிப்பாகத் தடையாக இருக்காது என்று நான் நினைக்கிறேன்.. திருமணம் செய்த பின்னும் படிக்கலாம் அல்லவா?"

அது அவளுக்கு நல்லது என்று நினைத்தேன்.. அவளது அம்மாவைப் போல வேறு வழியில் வாழ்க்கை திசைமாற இங்கே வாய்ப்புகள் அதிகம். அது நடந்து விடக்கூடாது.. அவளுக்கும் ராபர்ட்டைப் பிடித்திருப்பதால் அவனையும் இழக்க வேண்டியதில்லை.. அவனுடைய சம்மதத்துடனேயே டாக்டருக்குப் படிக்கலாம் என்பதையும் எடுத்துச் சொன்னேன்.

அவளுக்கு அந்த யோசனை பிடித்திருக்க வேண்டும்.. முகத்தில் சந்தோஷம் தெரிந்தது..

"அப்படியே செய்ய முயற்சிக்கிறேன்.." என்றாள்..

பட்ரீஷியாவும் அதன்பின் வந்துவிட்டாள்.

ரோஸி என்னிடம் நிறைய பேசினாள். அவளின் கலகலப்பான பேச்சும், சிரிப்பும் எனக்கு அவள் மீது இன்னும் அதிக அன்பை ஏற்படுத்தின.. அந்த சில மணி நேரத்திலேயே அவளின் அறிவுக்கூர்மையும், மன முதிர்ச்சியும் என்னை ஆச்சர்யப்பட வைத்திருந்தன..

கண்டிப்பாக இந்தியா வந்து அவளின் அப்பாவை ஒருமுறையாவது சந்தித்து விடவேண்டும் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாள். அவளின் கண்களில் ஏதோ ஒரு எதிர்பார்ப்பு இருப்பதை மட்டும் உணர முடிந்தது.

பிரியும்போது, கண்டிப்பாக அடுத்தமுறை கப்பல் வந்தால் வீட்டுக்கு வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தாள். எனக்கும், வாழ்க்கையில் இன்னொரு தேசத்தில் ஒரு நல்ல நட்பு கிடைத்த சந்தோஷம் நிறையவே இருந்தது..

ரோஸியிடம் விடைபெற்றுக் கொண்டு பாரை நோக்கி நடந்தோம் நானும் பட்ரீஷியாவும்..

ஆனால் பட்ரீஷியாவின் வாழ்க்கை மட்டும் ஏனோ உறுத்தலாக இருந்தது. அப்படி நினைக்கக் கூடாது என்று தோன்றினாலும், அது மனதுக்குள் தோன்றுவதை தடுக்க முடியாமல் தவித்தேன்.

வீட்டிலிருந்து திரும்பும்போது பட்ரீஷியாவிடம் கேட்டேன்.. மறுபடியும் அதே கேள்வி.. நேற்றே கேட்டது தான்..

"ஏன் பட்ரீஷியா.. நீ இவ்வளவு நல்ல மனம் படைத்தவளாக இருக்கிறாய்.. ஏன் இந்தத் தொழிலை விட்டுவிடக் கூடாது" என்றேன்.

"அதைவிடு.. நான் உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன். நேற்று பாரில் உன்னை முதலில் பார்த்தபோது ஏதோ விரக்தியடைந்தது போல் இருந்தாயே.. ஏன்?" - அவள் என்னைத் திருப்பிக் கேட்டாள்.

"எனக்கு கப்பல் வாழ்க்கை பிடிக்கவில்லை.. ஏனோ தெரியாமல் இந்தத் தொழிலைத் தேர்வு செய்துவிட்டேனோ என்று தினமும் கவலைப் பட்டுக் கொண்டேயிருக்கிறேன்"

"அப்படியானால் கப்பல் வாழக்கையை விட்டு விடப்போகிறாயா?"

நீண்ட பெருமூச்சு என்னிடமிருந்து வெளிப்பட்டது.

"இல்லை.. இன்னும் கொஞ்ச நாட்களாவது இதில் இருந்துதான் ஆகவேண்டும்.."

"ஏன்.. வீட்டை விட்டு, நல்ல நண்பர்களை விட்டு, கண்காணாத தூரத்தில் வாழும் இந்த வாழ்க்கையில் ஏன் இருக்க விரும்புகிறாய்.. உங்கள் ஊரில் உனது தகுதிக்கு வேலை கிடைக்காதா?"

"கண்டிப்பா கிடைக்கும்..நான் படித்த மெக்கானிக்கல் இஞ்ஜினீயரிங் டிகிரிக்கு எப்படியாவது ஒரு வேலை கிடைக்கும்.. ஆனால் ஏற்கனவே இந்த வேலைக்கான 'டிரெயினிங்'கில் ஒரு வருடம் போய்விட்டது.. இனிமேல் புதிதாக வேலை தேட வேண்டும்.. அதைவிட முக்கியமான விஷயம், இந்த வேலையில் நிறைய பணம் கிடைக்கிறது..

இந்தியாவில், என்னுடைய இஞ்ஜினீயரிங் டிகிரிக்கு கிடைக்கும் சம்பளத்தை விட எத்தைனையோ மடங்கு இதில் கிடைக்கிறது. பதவி உயர்வு வரும்போது இன்னும் அதிகமாகும்.. அதனால் இன்னும் சிலவருடம் இதில் இருந்துவிட்டு, பணம் சேர்த்துக் கொண்டு பின் விலகி விடுவேன்.. நானே புதிதாக ஒரு தொழில் ஆரம்பிப்பேன்.."

அவள் திரும்பி என்னைப் பார்த்து சிரித்தாள்.

"நீ இப்போது ஒப்புக் கொள்கிறாய் இல்லையா..."

"எதை..?"

"நீதானே சொன்னாய்.. இந்த வேலையை பிடிக்கவில்லையென்று.. ஆனாலும் விடாமல் அதில் தானே இருக்கிறாய்.. மனதுக்குப் பிடிக்காத வேலையை பணத்துக்காக செய்கிறாய்.. என்னைக் கேட்டால் நீயும் என்னைப் போல்தான்.

உனக்கும் எனக்கும் எந்த வித்தியாசமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.. நான் உடலை விற்கிறேன்.. நீ மனதை விற்கிறாய்.. அதுதான் வித்தியாசம்..பிடிக்கவில்லையென்றால் விட்டுவிட்டு ஓடாமல், பணம் கிடைக்கிறது என்பதற்காகத் தானே இருக்கிறாய்.அதுபோலத் தான் நானும்..

ஒருவிதத்தில் இரண்டு பேரும் ஒரே வாழ்க்கை தான் நடத்துகிறோம்.. உன்னுடைய கடல்
பாஷையில் சொல்லப் போனால், 'வி போத் ஆர் ஸெய்லிங் இன் த ஸேம் போட்'(We both are sailing in the same boat).. இல்லையா"

'சுளீர்' என்று சவுக்கால் அடித்த உணர்வு.. எவ்வளவு பெரிய வார்த்தைகள்..

'பணத்துக்காக மானத்தை மட்டுமல்ல.. மனதை விற்பதும் விபசாரம் தான்..'

மிகத் தெளிவாகச் சொல்லி அவள் அதை புரியவைத்து விட்டாள். எனக்கு பதில் சொல்ல முடியவில்லை..

அவள் கேட்ட கேள்வி அன்று மட்டுமில்லாமல் அதன்பின் தொடர்ந்த நாட்களிலும் என்னைத் துளைத்துக் கொண்டேயிருந்தது.. அதன்பின் எதுவும் பேசாமல் நடந்து கொண்டிருந்தேன்.

"என்ன பேசாமல இருக்கிறாய்.. நான் கேட்டதில் கோபமா?"

"இல்லையில்லை.. நீ கேட்டபின் தான் எனக்கே அது புரிகிறது.. நீ கேட்டதில் தவறில்லை.." -புன்னகையில் என் தோல்வியை மறைக்க முயன்றேன்.

"உன்னை என் வாழ்க்கையில் மறக்க மாட்டேன்.. இனியொருமுறை நாம் சந்திப்போமா என்று தெரியவில்லை.. நட்ராஜைக் கண்டுபிடித்தால் நான் கேட்டதாகச் சொல்.." என்றாள்.

பட்ரீஷியா அதன்பின் மிகவும் சோகமாகவே இருந்தாள்.

கடைசியாக நான் அந்த இடத்தை விட்டுப் புறப்படும் போது என் இரு கன்னத்திலும் நட்புடன் முத்தமிட்டாள்..

டாக்ஸி தூரத்தில் திரும்பும்வரை அவள் கையசைத்துக் கொண்டே நின்றிருந்தது எனக்குத் தெரிந்தது.. எனக்குள்ளும் மிகவும் சோகமாக உணர்ந்தேன்.. ஏனோ கண்களில் நீர் திரையிட்டது.. ஜோ என்னை வித்தியாசமாகப் பார்ப்பதை உணர்ந்து கண்களைத் துடைத்துக் கொண்டேன்.

அதன்பின் எத்தனையோ நாடுகளையும், மக்களையும் சந்தித்து விட்டாலும், என் மனதில் 'மடீரா' துறைமுகத்தின் நினைவுகள் மட்டும் மறக்காமலேயே இருந்தன..

'மனதை விற்று நீ வாழும் வாழ்க்கையும் ஒரு வகையில் விபசாரம் தான்' என்ற பட்ரீஷியாவின் வார்த்தைகள் மட்டும் மனதைத் தொடர்ந்து துளைத்துக் கொண்டு இருந்தது..

ஆனாலும் இந்த உப்பு நீருக்குத் தான் எத்தனை சக்தி.. மனதைத் தொலைத்து விட்டு, வெட்கமில்லாமல் நானும் அதே கடலை விடாமல் தேடிப் போய்க் கொண்டேயிருந்தேன்.

பட்ரீஷியாவும் ரோஸானாவும் அவ்வப்போது என் நினைவில் வந்து போய்க் கொண்டு இருந்தனர். ஆனால் நான்கு ஆண்டுக்ளுக்குப் பின், மீண்டும் அந்த மடீரா துறைமுகத்துக்குப் போனபோது, எனக்கு ஒரு மாபெரும் அதிர்ச்சி காத்திருந்தது..

ரோஸானாவுக்கு அப்படி ஒரு நிலைமை ஏற்படும் என்று நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.. அந்த சந்திப்பு பற்றி பின்பு  சொல்கிறேன்..



---------------------

கப்பல் பிரேஸிலில் இருந்து தென் ஆப்பிரிக்காவிலுள்ள 'கேப் டவுன்' துறைமுகத்துக்குப் புறப்பட்டது.

ஆனால் கேப் டவுனில் துறைமுகத்துக்குள்ளே கப்பல் செல்ல வேண்டிய அவசியமிருக்கவில்லை. ஹெலிகாப்டர் மூலம் நான்காவது இஞ்ஜினீயர் அருணின் மனைவி ரோஹினியும், புதிய சீஃப் இஞ்ஜினீயரும் வந்து சேர்வதாக இருந்தது.

ஆப்பிரிக்க கண்டத்தின் தென்மேற்குக் கோடியான 'கேப் ஆஃப் குட் ஹோப்' (Cape of Good Hope) எனப்படும் 'நன்னம்பிக்கை முனை'க்கு அருகே கேப் டவுன் உள்ளது. இந்தப்பகுதிக்கு வந்தபின் தான் 'வாஸ்கோடகாமா' இந்தியாவிற்கான கடல் வழியைக் கண்டிபிடித்தார்.

எங்கள் கப்பல் போனபோது அந்தப் பகுதியில் கடல் சிறிது கடுமையாக மாற ஆரம்பித்தது. எப்போதும் இங்கே இப்படித்தான் கடல் ஆக்ரோஷமாக இருக்கும் என்றார்கள்.

கேப்டவுன் துறைமுகத்துக்கு வெளியே கப்பல் வேகத்தைக் குறைத்து புதிய சீஃப் இஞ்ஜினீயரையும், ரோஹினியையும் ஏற்றிக் கொண்டு சிங்கப்பூர் புறப்பட்டது.. பழைய சீஃப் அதே ஹெலிகாப்டரில் திரும்பிவிட்டார்.

முதன்முதலில் கப்பலில் சேர்வதால் அருணின் மனைவி மிகவும் பயந்துபோய் இருந்தாள். கடலில் அனுபவம் இல்லாதவர்களை, கப்பலில் சேர்ந்த ஆரம்ப காலத்தில் நிறையவே ஏமாற்றுவார்கள்.

நான் சேர்ந்த புதிதில் கப்பலில் சாப்பிட்டதற்கும், தண்ணீர், கரண்ட், ஏ.ஸி மற்றும் வாஷிங் மெஷின் உபயோகித்ததற்காக, விடியோ மற்றும் டிவி உபயோகித்தது என்று எல்லாவற்றையும் பட்டியலிட்டு முதல் மாத இறுதியில் கேப்டன், சீஃப் இஞ்ஜினீயர் கையெழுத்திட்டு, சுமார் நானூறு அமெரிக்க டாலர் பில் எனக்கு தந்தார்கள்.

என்னுடைய ஜூனியர் எஞ்ஜினீயருக்கான அப்போதைய சம்பளத்தில் கிட்டத்தட்ட பாதித்தொகை. அதை எனது சம்பளத்தில் இருந்து பிடித்துக் கொள்வதாகவும், மாதாமாதம் இதேபோல் பிடித்துக் கொள்வார்கள் என்றும் சொன்னார்கள்..

கப்பலில் சேரும்போது இதற்கெல்லாம் பணம் கட்ட வேண்டும் என்று நான் நினைத்ததில்லை. அன்று மாலையில் எல்லோரும் என்னைக் கிண்டலடித்து கேலிசெய்து, அதெல்லாம் பொய் என்றும் என்னை ஏமாற்றவே அப்படி திட்டம் போட்டு பில் தயார் செய்ததாகச் சொல்லவும் எனக்கு நிம்மதி வந்தது.

பொதுவாக கப்பலில் வேலை செய்பவர்கள் எதற்கும் செலவு செய்ய வேண்டியிருக்காது. சம்பாதிக்கும் பணத்தை முழுதும் சேமிக்கலாம். துறைமுகத்தில் வெளியே போகும்போது நாமாகவே வாங்கும் பொருட்களுக்கான விலை, மற்றும் அப்போது வெளியே சுற்றிய போக்குவரத்து மற்றும் வெளியே சாப்பிட்ட உணவுக்கான செலவுதான் மொத்த செலவு.

துறைமுகத்தில் வெளியே எங்கும் தங்குவதெல்லாம் முடியாது.. திரும்பக் கப்பலுக்கு வந்துவிட வேண்டும்..

(கப்பலில் வேலை செய்பவர்கள் ஊர் திரும்பும் போது வாங்கி வரும் பொருட்களை 'சுங்கவரி' எதுவும் கட்டாமல் கொண்டு வந்து விடுவார்களா என்று நிறைய பேர் கேட்கிறார்கள்.. அப்படி எதுவும் இல்லை.. அவர்களும் இந்தியக் குடிமக்களுக்கு உள்ள வரிகளை கட்டித்தான் பொருட்களை கொண்டு வரமுடியும்.)

கப்பலில் தங்கியிருக்கும் போது செலவு என்றால் அது நாம் குடிக்கும் குளிர் பானத்துக்கும், மதுபானத்திற்கும் செலவழிக்கும் பணம் மட்டுமே..

'உங்களுக்கெல்லாம் கப்பலில் 'டிரிங்க்ஸ்' ஃபிரீ தானே.. நன்றாக அனுபவிக்கலாம் இல்லையா' என்று ஏராளமானோர் கேட்கிறார்கள்.. வணிகக் கப்பலில் மது இலவசம் இல்லை.. ஆனால் 'டியூட்டி ஃப்ரீ' அடிப்படையில் கிடைப்பதால் கொஞ்சம் விலை குறைவு. ஆனால் அதற்காக இஷ்டப்படி குடிக்கமுடியாது..

ஒரு அளவுக்கு மேல் யாராவது குடிப்பதாகத் தெரிந்தால், அதன்பின் மதுவே குடிக்கக் கூடாது என்று கேப்டன் தடை செய்து விடமுடியும். இப்போது கட்டுப்பாடுகள் மிக அதிகம். 'Drug and Alcohol Policy' கடுமையாக இப்போதைய கப்பல்களில் கடைபிடிக்கப் படுகிறது. குடிப்பதை கட்டுப்படுத்தும் முயற்சி இது.


கப்பலில் சேர்ந்த புதிதில் என்னை ஏமாற்றியது போலவே ரோஹினியையும் ஏமாற்றத் திட்டமிட்டனர். சேர்ந்த மறுநாளே விளையாட்டு ஆரம்பித்து விட்டது.

அவள் கப்பலில் சேர்ந்தபோது அந்த மாதத்துக்கான பில்லைத் தயார் செய்து அருணுக்கு வழங்கி விட்டனர். எவ்வளவு தெரியுமா.. சுமார் ஐநூறு டாலர்கள்.

அடுத்த நாள் காலை இஞ்ஜின் அறையில், பில் பற்றி ரோஹினி என்ன சொன்னாள் என்று எல்லோரும் அருணைக் கேட்டனர். அந்தத் தொகையைப் பார்த்து மிகவும் 'ஷாக்' ஆகி விட்டாளாம். அவனுடைய மொத்த சம்பளம் ஆயிரத்து அறுநூறு டாலர்கள்.. அதைத்தான் ஊரில் இருக்கும்போது அவளிடமும் சொல்லியிருக்கிறான்.

இப்போது அதில் ஐநூறு டாலர்கள் கப்பல் செலவுகளுக்கே கட்ட வேண்டியதை நினைத்து மலைத்துப் போய் விட்டாளாம்.. அன்று மதியம் சாப்பாட்டுக்கு அவள் டைனிங் ஹாலுக்கும் வரவில்லை. அருண் மட்டும் தலையில் அடித்துக் கொண்டே வந்தான்.

"என்ன நடந்தது." என்று கேட்டேன்.

"எல்லாம் நேற்று நடந்த விஷயத்தின் விளைவுதான்.. அந்த பில் செய்யும் வேலை" என்றான்.

பனிரெண்டு மணி டியூட்டி முடிந்து மதியம் அவன் அறைக்குத் திரும்பியபோது, ரூம் முழுவதும் இருட்டாக இருந்ததாம். பாத்ரூமில் உள்ள ஒரே ஒரு விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருக்க, ரோஹிணி அவனது துணிகளை தானே சோப்புப் போட்டுத் துவைத்துக் கொண்டு இருந்திருக்கிறாள்.

அருண் போய், அறைவிளக்கை போட்டதுதான் தாமதம்.. 'அதுதான் கண்ணாடி ஜன்னல் வழியே வெளிச்சம் வருகிறதே.. எல்லா விளக்கையும் போட்டு எலக்ட்ரிக் பில்லை ஏன் வீணாக கட்ட வேண்டும்' என்று கோபப்பட்டிருக்கிறாள்.

கூடவே, "இனிமேல் உங்கள் துணிகளை வாஷிங் மெஷினில் துவைக்க வேண்டாம்.. நானே ரூமில் வைத்து கையால் துவைத்துக் கொள்கிறேன்.. பணத்தை எதற்கு வேஸ்ட் செய்ய வேண்டும்?" என்றாளாம்.

எல்லோரும் அதைக்கேட்டு விழுந்து விழுந்து சிரிக்க, அருண், "இதையெல்லாம் விட இன்னொரு ஜோக் கேளுங்க.. அவள் இனிமேல் இங்கே வந்து சாப்பிட மாட்டாளாம்.. வழக்கமாக அவள் வெஜிடேரியன் தான்..

இங்கே உள்ள ஐட்டம் எதையும் தொட மாட்டாள்.. அதனால், இங்கே வந்து சாப்பிடுவதற்குப் பதில் நான் ரூமுக்குப் போகும்போது வெறும் பிரெட், ஜாம் மட்டும் எடுத்து வரவாம்.. அதனால் மெஸ் பில் குறையுமாம்.." என்றான்.

"மெஸ் பில்லா.."

"ஆமாம்.. நேற்று நான் ரூமிற்குப் போனவுடன். 'என்ன, இங்கே சார்ஜ் எல்லாமே அதிகமா இருக்கே.. வேற எதுக்கெல்லாம் சார்ஜ்' என்று கேட்டாள். நானும் 'இங்கே வேலை பார்க்கிற எல்லோருக்கும் சாப்பாடு இலவசம்.. ஆனால் மனைவி இருந்தால் அவள் சாப்பாட்டிற்கு சார்ஜ் உண்டு' என்று பொய் சொன்னேன்..

வரபோகிற பில்லை நினைத்து இப்போதே சிக்கனமாக இருக்க ஆரம்பித்து விட்டாள்.. அடுத்த முறை அவள் என்னுடன் கப்பலுக்கு வரப்போவது இல்லையாம்.." என்ற அருண் சொல்லி முடிக்கவும் எல்லோரும் புரையேறும்படி மறுபடியும் சிரித்தோம்.

கப்பல் வாழ்க்கை பற்றி ஓரளவு தெரிந்த நானே ஏமாந்தபோது அவள் ஏமாந்ததில் ஆச்சர்யமில்லை. இது சரிப்பட்டு வராது என்று அன்று மாலையே அவளிடம் உண்மையைச் சொல்லச் சொல்லிவிட்டனர்.

அன்று மாலை சாப்பிட வரும்போது ரோஹிணி, தான் ஏமாற்றப் பட்டதை நினைத்து கோபத்தில் எங்கள் யாருடனும் பேசவேயில்லை.. கடைசியில் அவளை சமாதானப் படுத்தி சிரிக்க வைத்தோம்.

-------------

கப்பல் சிங்கப்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.. இன்னும் கடல் கொஞ்சம் சீற்றமாகவே இருந்தது.. ஒருவழியாக சமாளித்து கப்பல் இந்திய பெருங்கடலில் சென்று கொண்டிருந்தது..

ஒருவாரம் கழித்து, அன்று இரவு கப்பல் நிலநடுக்கோட்டை (Equator line) கடக்க இருந்தது.. புதிதாக கப்பலில் சேர்பவர்களுக்கு அதுவும் ஒரு வித்தியாசமான அனுபவம்..

அட்லாண்டிக் கடலிலேயே எங்கள் கப்பல் ஒருமுறை பூமத்தியரேகையைக் கடந்திருந்தது.. ஆனால் அன்று ஒரு ரிப்பேர் வேலை காரணமாக எல்லோரும் வேலை மும்முரத்தில் அன்று அதைக் கண்டுகொள்ளவில்லை.

எந்த கப்பலிலும் முதல் முதலில் யாராவது பூமத்திய ரேகையைக் கடப்பவர்கள் இருந்தால் அதை பெரிய விழாவாகக் கொண்டாடுவார்களாம். குறிப்பாக பிரிட்டிஷ் நாட்டவர்களும், பிலிப்பினோக்களும் இருக்கும் கப்பல்களில்..

(இந்தியக் கப்பல்களில் பெரும்பாலும் இந்த விழாவை அவ்வளவு சிறப்பாக கொண்டாடுவதில்லை என்று என் நண்பர்கள் பலர் சொல்லக் கேள்விப்பட்டுள்ளேன்..)

நான் அப்போது முதல்தடவை கடப்பதால் அன்று கொண்டாடியிருக்க வேண்டும்.. ஆனால் இந்தியப் பெருங்கடலில் அடுத்தமுறை கடக்கும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டனர்.

மேலும் அருணின் மனைவியும் வந்து சேர்ந்து விடுவாள் என்பதால் விழாவை இருவருக்கும் சேர்த்து நடத்திக் கொள்ள முடிவு செய்திருந்தனர்.

ஆனால் முதல்தடவை அட்லாண்டிக்கில் அந்தக் கோட்டை கடக்குமுன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியை கட்டாயம் என்னால் மறக்க முடியாது.. அன்று என்னை முட்டாளாக்கி ஏமாற்றவும் செய்தார்கள்..

----------------

கப்பலில் புதிதாக சேர்ந்தவர்களை ஏமாற்றுவதைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன் அல்லவா..

இங்கே எல்லாமே புதுமை என்பதால் இவர்கள் சொல்வதில் எது உண்மை, எது பொய் என்று கண்டுபிடிப்பது சிரமம். அதனால் நான் பூமத்தியரேகை விஷயத்திலும் ஏமாந்து போனேன்.

பிரேஸிலில் இருந்து புறப்பட்டு, அட்லாண்டிக் கடலில் செல்லும்போது அந்த ரேகையை இரவில் கடப்பதாக இருந்தது..

எலக்ட்ரிக்கல் இஞ்ஜினீயர் அன்று மாலையே என்னிடம், "ராத்திரி சீக்கிரம் தூங்கி விடாதே.. பூமத்திய ரேகையை வாழ்க்கையில் முதல்முறையாக பார்க்கும் வாய்ப்பை இழந்து விடுவாய்" என்றார்..

பூமத்திய ரேகையை பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது பூகோள 'மேப்'பில் பார்த்து இருக்கிறேன்.. அது ஒரு கற்பனைக் கோடு என்று மட்டுமே தெரியும். (மிகவும் பிடிக்காத பாடம் புவியியல் தான்.. கடைசியில் தண்டனை போல், உலகத்தை நேரில் சுற்றிப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டியதாகி விட்டது.)

கப்பலில் சூரியன், நட்சத்திரம், கோள்கள் எல்லாம் பார்த்து, கப்பல் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பதெல்லாம் 'நேவிகேஷன்' துறையைச் சேர்ந்தவர்களின் வேலை.. இன்ஜினீயர்களுக்கு அதில் சம்பந்தம் இல்லை.

அதிலும் நான் புதிதாக சேர்ந்திருந்ததால் அது பற்றி கொஞ்சம்கூட தெரியாது அப்போது.

"எப்படி சரியாக இந்த இடத்தில் தான் அந்த ரேகை இருக்கிறது என்று துல்லியமாக கண்டுபிடிக்க முடியும்?.." என்று கேட்டேன்.

நான் கேட்டவுடன் என்னை ஒரு புழுவைப் பார்ப்பது போல் பார்த்தார் அவர். பின் அவரே பதில் சொல்லிக்கொண்டார்.

"இந்தக்காலத்துப் பசங்களுக்கு எதுவுமே தெரிவதில்லை.. இது கூடவா தெரியாது".. என்று சொல்லிவிட்டு, "நிஜமாகவே உனக்குத் தெரியாதா" என்று கேட்டார்.

"தெரியாது" என்றேன்.

"பூமத்திய ரேகை என்பது ஒரு கற்பனைக் கோடு தான்.. ஆனால் அப்படி ஒரு கோடு இருப்பதாக நினைத்துக் கொள்வதால் தான் கப்பல் இருக்கும் இடத்தை சரியாக குறிப்பிட்டு சொல்ல முடியும்...

பூமத்திய ரேகை உள்ள கோட்டுப் பகுதி ஜீரோ டிகிரி.. அதற்கு மேல்பகுதி வடக்கு, கீழ்பகுதி தெற்கு. கப்பல் பூமத்தியரேகைக்கு எத்தனை டிகிரி தள்ளி வடக்கிலோ, தெற்கிலோ உள்ளது என்பதை உலக வரைபடத்தில் குறிக்கலாம்..

ஆனால் உலகத்தில் பூமத்தியரேகைப் பகுதியை அடையாளம் காண்பதற்காக, ஒவ்வொரு மைல் தொலைவிலும் அந்தப்பகுதியில் அமைந்துள்ள நாடுகள், கரையை ஒட்டிள்ள தங்களது கடல்பகுதியில் மட்டும், ஒளிரக்கூடிய ஒரு கெமிக்கல் பூசிய மிதவைகளை அந்த இடத்தில் வைத்திருக்கிறார்கள்.. இரவில் மட்டும் அவை ஒளிரும்.. இதுகூட கேள்விப் பட்டதில்லையா?"

சத்தியமாக நான் கேள்விப்பட்டதில்லை.. நீங்கள்?

"அது மட்டுமில்லை.. அந்த மிதவைகளில் எழுதப்பட்டிருக்கும் "WELCOME TO EQUATOR" என்ற வார்த்தைகளும் ராத்திரியில் ஒளிரும்.. இன்னிக்கு ராத்திரி நீ பார்க்க மறந்திடாதே.. நாம் பிரேஸில் கடற்கரை ஓரமாக போவதால் இந்தப் பகுதியில் பிரேஸில் நாட்டின் சார்பில் அமைக்கப் பட்ட மிதவைகள் இருக்கும்" என்று சொல்லிவிட்டு, "இந்தக் காலத்து இளைஞர்களுக்கு எல்லாமே சொல்லிக் கொடுக்க வேண்டியுள்ளது.." என்று அலுத்துக் கொண்டார்.

எங்கள் ஊருக்கு (ராமேஸ்வரம்) பக்கத்தில் உள்ள பாம்பன் பாலத்தருகே கடலில் வைக்கப் பட்டுள்ள மிதவைகளைப் பார்த்திருக்கிறேன்.. மற்ற துறைமுகங்களிலும் பாறை இருக்கும் இடம், ஆழமற்ற பகுதி இவற்றைத் தவிர்த்து கப்பல் துறைமுகத்துக்குள் செல்ல வேண்டிய சரியான வழியைக் குறிப்பதற்காக மிதவைகள் உண்டு என்பது தெரியும்.

ஆனால் நிலநடுக்கோடு பகுதியைப் பற்றி சரியாக தெரியாது.. ..

பூமத்திய ரேகை பூமியை வடக்கு தெற்காக இரண்டாகப் பிரிக்கும் ஒரு கற்பனைக் கோடு என்பது மட்டும் படித்திருக்கிறேன். அதற்காக இப்படியெல்லாம் அந்த இடத்தை அடையாளம் காண மிதக்கும் கருவிகள் எல்லாம் வைத்திருப்பார்கள் என்று கேள்விப்பட்டதில்லை.

அன்று இரவு இரண்டு மணியளவில் அந்தக் கோடு இருக்கும் பகுதியை கடக்க இருப்பதாகச் சொன்னார். நான் அதற்காக இரவு தூங்காமல் விழித்திருந்தேன்.

நல்ல இருட்டு.. இரண்டு மணிக்கு கூர்ந்து கவனித்தேன்.. தூரத்தில் வெளிச்சம் தெரிந்தது.. எனக்குள் மெலிதான பரபரப்பு.. ஆனால் மறுபடியும் பார்த்த போது அது எங்கோ தொலைதூரத்தில் இருந்தது.. பக்கத்தில் வேறு எந்த மிதவையும் தெரியவில்லை..

குழப்பத்துடன் மேலே 'பிரிட்ஜ் ஹவுஸ்' பகுதியான கப்பலின் கட்டுப்பாட்டு அறைக்குச் சென்றேன்.. இரண்டாவது நேவிகேட்டிங் ஆபிஸர் இருந்தான்.. கூடவே துணைக்கு 'ஸ்டீயரிங் வீல்' பிடிக்கும் 'சுக்கானி' என்ற மாலுமி.(ஆங்கிலத்தில் Helmsman என்று அழைக்கிறார்கள்..)

கப்பலை திருப்புவதற்குப் பயன்படும் 'RUDDER' என்ற பெரிய இரும்பாலான பலகை போன்ற அமைப்பு, கப்பலின் பின்புறம், PROPELLOR-க்கு பின்னால் இருக்கும்.. வீல் ஹவுஸ் பகுதியிலுள்ள 'ஸ்டீயரிங்' சக்கரத்தைச் சுற்றுவதன் மூலம் அந்தப் பலகையைத் திருப்பும் போது கப்பல் இடப்புறமோ, வலப்புறமோ திரும்பும்..

சின்னப் படகுகளில் கூட அதைப் பார்க்கலாம்.. ஹிந்தியில் அதை 'சுக்கான்' என்பார்கள்.. (எங்கள் ஊரில் தமிழிலும் அப்படித்தான் சொல்கிறார்கள்).

கப்பலின் (ஸ்டீயரிங் வீலைத் திருப்பி) சுக்கானை இயக்குபவருக்கு அதனால் 'சுக்கானி' என்று பெயர் வந்தது..


இன்னும் கொஞ்சம் டெக்னிக்கல் விஷயம்: கப்பலை இயக்குவதற்கு பெரிய சைஸில் ஒரே ஒரு மெயின் எஞ்ஜின் உண்டு.. (மிகச் சில கப்பல்களில், குறிப்பாக சிறிய கப்பல்களில், இரண்டு எஞ்ஜின்கள் உண்டு..)..

அந்த எஞ்ஜின் இயங்கும்போது அதனுடைய 'க்ராங்க் ஷாஃப்ட் (Crank Shaft)டுடன் இணைக்கப் பட்டுள்ள ஃபேன் போன்ற அமைப்பிலான 'ப்ரொப்பல்லர்' சுழலும்..

அதன் சுழற்சியால் -மின் விசிறியிலிருந்து காற்று தள்ளப்படுவது போல்- தண்ணீர் பின்னுக்குத் தள்ளப்படும் . ப்ரொப்பல்லருக்கு பின்னால் உள்ள Rudder திருப்பப் படாமல் இருந்தால் தண்ணீர் பின்னுக்குத் தள்ளப்பட்டு, அதன் காரணமாக கப்பல் முன்னுக்குப் போகும்..(நியூட்டன் விதி).

'ரட்டர்' பலகை ஏதாவது ஒரு பக்கம் திருப்பப்பட்டால் தண்ணீர் அதன்மீது மோதி, அதற்குத் தகுந்தாற்போல் கப்பல் இடமோ, வலமோ திரும்பும்.. இப்படித்தான் கப்பலைத் திருப்ப முடிகிறது.. கப்பலை கார் நிறுத்துவது போல் உடனே நிறுத்த முடியாது..

தரையில் உராய்வுத்தன்மை (Friction) இருப்பதால், காரை வேகமாக நிறுத்த முடிகிறது.. தண்ணீரில் அது மிகக் குறைவு.. கப்பலுக்கு 'பிரேக்'க்கும் கிடையாது.. கப்பலை நிறுத்த வேண்டுமானால் எஞ்ஜினை முதலில் நிறுத்தி, எஞ்ஜினின் சுழற்சியை எதிர்திசையில் சுழலுமாறு செய்தால் முன்னால் செல்லும் கப்பல் வேகம் குறையும்..

அதன்பின் பின்னால் செல்ல முயற்சிக்கும்.. அந்த நேரத்தில் எஞ்ஜினை நிறுத்தி விடுவதன் மூலம் கப்பலை நிறுத்த முடியும்.. முழுவதும் நிற்க நிறைய நேரம் பிடிக்கும்

கப்பல்கள் மோதிக் கொண்டதாக செய்திகள் வருவது கப்பலை உடனடியாக நிறுத்த வழி இல்லாததால் தான்..

----------------

நான் மேலே போனபோது வீல்ஹவுஸ் முழுதும் இருட்டாக இருந்தது..

பொதுவாக இரவு நேரத்தில் கப்பலின் வீல்ஹவுஸ் இருட்டாகவே இருக்கும்.. கப்பல் முழுதும் பார்த்தால் இருட்டாகவே தெரியும்.. (எஞ்ஜின் அறை முழுதும் விளக்குகள் உண்டு.. ஆனால் அந்த வெளிச்சம் வெளியே தெரிவதில்லை..).. அப்படி இருட்டாக இருந்தால் தான் வெளியே இருட்டில் வரும் வேறு கப்பல்களைப் பார்க்க முடியும்..

கப்பலின் முன் பக்கத்தில் ஒரு விளக்கும், பின்னால் ஒரு விளக்கும் இருக்கும்.. அதைத் தவிர கப்பலின் தங்கும் தளப்பகுதியின் இடதுபுறத்தில் சிவப்பு விளக்கும், வலது புறத்தில் பச்சை விளக்கும் பொருத்தப் பட்டிருக்கும்.. (விமானத்திலும் இதே போல உண்டு).

இந்த விளக்குகளின் ஒளியை வெகு தொலைவில் இருந்தும் பார்க்க முடியும்.. வேறு வெளிச்சம் தடையாக இருந்தால் இந்த விளக்குகளை அடுத்த கப்பலில் உள்ளவர் சரியாக பார்க்க முடியாது..

எனவே எதிரே தெரியும் கப்பல் அருகே வருகிறதா அல்லது விலகிச் செல்கிறதா என்பது தெரியாமல் குழப்பம் ஏற்படும்.

அதனால் தான் கப்பலில் இரவு நேரங்களில் வேறு எந்த வெளிச்சமும் தெரியாத அளவில் வைத்திருப்பார்கள்.. அறையில் எரியும் விளக்கின் வெளிச்சம் வெளியே தெரியாமல் இருக்க, திரைச்சீலைகள் உள்ளன.. பொதுவாக அறை விளக்கை அணைத்து விடுவதே வழக்கம்.

எனவே, நான் கப்பலின் 'வீல்ஹவுஸ்' பகுதிக்கு போனபோது வெளிச்சம் இல்லாததால் தடுமாறினேன்.. சிறிது நேரம் கழித்து கண்கள் இருட்டுக்குப் பழக்கப் பட, மெதுவாக இரண்டாவது ஆபிஸர் மோஹித்தைக் கண்டுபிடித்தேன்.

அவன் ஏற்கனவே இதுவரை இருட்டில் இருந்ததால் நான் வருவதை நன்றாகவே பார்த்திருக்கிறான்.. நான் தடுமாறுவதை சிரித்துக் கொண்டே பார்த்து இருந்திருக்கிறான். அவன் அருகே போனேன்..

"ஏன் இன்னும் தூங்காமல் இருக்கிறாய்?"- என்று கேட்டான் மோஹித்.

நான் பூமத்திய ரேகையைப் அடையாளம் காண்பதற்காக வைக்கப் பட்டிருக்கும் ஒளிரும் மிதவைகளை பார்ப்பதற்காக இருப்பதைச் சொன்னேன்..

அவன் சிறிது நேரம் கழித்து "பார்த்து விட்டாயா?" என்றான்.

நான் தொலைவில் தெரிந்த வெளிச்சத்தைப் பார்த்ததை மட்டும் சொன்னேன்.. அவன் தூரத்தில் தெரிந்த வெளிச்சத்தைக் காட்டி "அதுவா?" என்று கேட்டான்..

ஒரே ஒரு வெளிச்சம் தான் தெரிந்தது தூரத்தில்..

"ஆமாம்"-நான் அதைக் கை காட்டினேன்.

"நீ இப்போது பார்பபது வேறொரு கப்பலின் வெளிச்சம்.. ஒளிரும் மிதவை அல்ல.. " என்றான்..

"பூமத்திய ரேகையை அடையாளம் கண்டுபிடிக்க உனக்கு தெரியுமா.. எந்த இடத்தில் அந்த கோடு வரும் பகுதி உள்ளது என்று எப்படி அடையாளம் காண்பாய்?"- அவன் என்னைத் திருப்பிக் கேட்டான்.

மாலையில் எலக்ட்ரிக்கல் எஞ்ஜினீயர் சொல்லியிருந்த மிதவையும், 'வெல்கம் டு ஈக்குவேட்டர்' எழுத்துக்களையும் பற்றிச் சொன்னேன்..

நான் சொல்லி முடித்தவுடன் அவன் விழுந்து விழுந்து சிரித்தான்.. எனக்கு புரிந்து போனது.. நான் முட்டாளாக்கப் பட்டதை தெரிந்து கொண்டேன்.

அப்படி எதுவும் உலகின் எந்தக் கடல்பகுதியிலும் இல்லையென்றும் என்னை ஏமாற்ற அப்படி சொல்லியிருந்தார் என்றும் தெரிந்து கொண்டேன்..

பின் அவனே அங்கிருந்த நவீன எலக்ட்ரானிக் சாதனங்கள் மற்றும் வரைபடங்களைக் காட்டி கடலில் கப்பல் இருக்கும் இடத்தை எப்படி கண்டுபிடிப்பது என்று விவரித்தான். அந்த வரைபடத்தில் அருகே உள்ள பிரேஸில் கடற்கரைப் பகுதி மற்றும் அதையொட்டிய கடல் பகுதி காட்டப் பட்டிருந்தது..

பூமத்திய ரேகையும் வரைபடத்தில் காட்டப்பட்டிருந்தது. பூமத்தியரேகை பூமியை இரண்டாகப் பிரிக்கும் ஒரு கற்பனைக் கோடுதான் என்றாலும், அது உள்ள பகுதியை உண்மையில் இரண்டு மணிக்கு கப்பல் கடந்ததையும் தெரிவித்தான்.

கப்பலின் இருப்பிடத்தை அறிந்து கொள்ள உதவும் 'ஜி.பி.எஸ்' (G.P.S- Global Positioning System) என்னும் கருவியைக் காட்டினான்.. அதில் கப்பலின் தற்போதைய இடம், துள்ளியமாக டிஜிட்டல் எண்களாகத் தெரிந்தது..

"இந்த கருவியில் வடக்கு தெற்கு திசையைக் குறிப்பிடும் எண் இருக்கும் இடத்தில் சரியாக ஜீரோ வரும் இடம் தான் பூமத்திய ரேகை உள்ள இடம்.. சற்று முன் அதைக் கடந்தோம்.."

அப்போது அந்த சாதனத்தில், பூமத்திய ரேகைக்கு தெற்கே எத்தனை டிகிரியில் கப்பல் உள்ளது என்பதைக் காட்டவும், கிரீன்விச் கோட்டுக்கு மேற்கே எத்தனை டிகிரியில் உள்ளது என்பதைக் காட்டும் எண்களும் திரையில் தெரிந்தன..

மேஜை மீது இருந்த வரைபடத்தைக் காட்டி, கப்பல் அந்த வரைபடத்தில் எந்த இடத்தில் உள்ளது என்பதை புள்ளியிட்டுக் குறித்துக் காட்டினான்.

இப்போதைய நவீன கருவிகள் இல்லாத பழைய நாட்களில் சூரியன், நட்சத்திரங்கள் மற்றும் இதர கோள்களை அடையாளம் கண்டு அதன் உதவியுடன் கப்பல் இருக்கும் இடத்தை எப்படி கண்டுபிடித்தார்கள் என்பதை விளக்கினான். எனக்கு அப்போதுதான் புரிந்தது..

விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் இன்று அது எவ்வளவு சுலபமாகவும், துல்லியமாகவும் கண்டுபிடிக்கப் படுகிறது என்பதையும் சொன்னான்.. கேட்கக் கேட்க மிகவும் ஆச்சர்யமாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது..

விண்ணிலே தெரியும் நட்சத்திரக் கூட்டங்களை அடையாளம் கண்டுபிடித்து அவற்றின் பெயர்களைச் சொன்னான்.. பூமியும் மற்ற கோள்களும் உள்ள நமது சூரிய மண்டலத்தை உள்ளடக்கிய Milky Way என்ற நமது 'பால் வீதி'யை எனக்குக் காட்டினான்.

தினமும் இரவில அவனுடைய டியூட்டி நேரத்தில் வீல் ஹவுஸிற்கு வந்தால் இன்னும் நிறைய விஷயங்கள் பற்றி சொல்லிக் கொடுப்பதாகச் சொன்னான். எல்லாம் தெரிந்து கொண்டு தூங்கப் போகும் முன் மூன்று மணியாகி விட்டது..

அன்றைய தினத்தை வாழ்வில் மறக்கவே முடியாது.. அதன்பின் கப்பலில் யாராவது புதிய விஷயங்கள் சொன்னால் நான் உடனடியாக நம்புவதேயில்லை. (ஆனால் அதன்பின், நானும் புதிதாக சேர்பவர்களை வேடிக்கைக்காக இதேபோல் சொல்லி நிறைய ஏமாற்றியிருக்கிறேன்..)

மறுநாள் கப்பலில் எல்லோரும் என்னைக் கேலியாக பார்த்து சிரித்தனர். நான் இரண்டு மணி வரை விழித்திருந்து, பூமத்திய ரேகையின் ஒளிரும் எழுத்துக்களை 'பார்த்தது' எல்லோருக்கும்
தெரிந்து விட்டிருந்தது..

முதல்முறை அட்லாண்டிக் கடலில் அந்தக் கோட்டை கடந்தபோது என்னை இப்படித்தான் ஏமாற்றினார்கள்.. ஆனால் 'பூமத்திய ரேகையை' நான் அதிகாரப் பூர்வமாக கடந்ததாக ஏற்கப்பட்டு, அதற்கான சர்ட்டிபிகேட் வழங்கப்படும் முன் நடந்த விழா ஒரு வேடிக்கையான திருவிழா.. கப்பல் வாழ்வில் மறக்கவே முடியாத இன்னொரு முக்கிய நாள் அது..

நான் என்னுடைய தலைமுடியை முழுதும் மொட்டையடித்துக் கொள்ள வேண்டியதாகி விட்டது அன்று..


-----------------


கப்பல் இப்போது இந்தியப் பெருங்கடலில் சென்று கொண்டிருந்தது.

அன்று மாலை கப்பலில் வேலை பார்ப்பவர்கள் எல்லோரும் சேர்ந்து வெட்ட வெளியில் கரிஅடுப்பு வைத்து நெருப்பு ஏற்படுத்தி, 'பார்-பெ-க்யூ' பார்ட்டியை கொண்டாட இருந்தார்கள்.

அன்று நிலநடுக்கோட்டைத் தாண்டும் விழாவும் சேர்ந்து இருந்ததால், எல்லோரும் சந்தோஷத்தில் இருந்தார்கள்.

கேப்டன் உட்பட எல்லோரும் கப்பலின் தங்குமிடத்துக்கு வெளியே உள்ள ஒரு தளத்தில் விழாக் கொண்டாட எல்லா ஏற்பாடுகளும் செய்தார்கள். கப்பலின் சின்ன 'SWIMMING POOL'-ல் தண்ணீர் நிரப்பப் பட்டது.. கடல்நீர் தான்.

பாசஞ்சர் கப்பல் வாழ்க்கைக்கும், சரக்குக் கப்பல் வாழ்க்கைக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.. ஏராளமான ஆட்கள் இருப்பதால் பயணிகள் கப்பல்களில் எப்போதும் மக்கள் நடமாட்டம் இருக்கும்..

ஆனால் சரக்குக் கப்பல்களில் வேலை பார்ப்பவர்கள் மட்டுமே இருப்பதால், தனித்தீவில் மாட்டிக் கொண்ட உணர்வு எழுவது இயற்கை.

இதையெல்லாம் தணித்து வைப்பதற்கு, இப்படி எல்லோரும் ஒன்று சேர்ந்து, மியூசிக்கை அலறவிட்டுக் கொண்டும் இஷ்டத்துக்கு டான்ஸ் ஆடிக் கொண்டும், அவரவர்க்கு வேண்டியதை அவர்களே பாதி வெந்தும், மீதி வேகாமலும் சமைத்து, சாப்பிட்டுக் கொண்டே ஆல்கஹாலில் குளியல் நடத்தும் இந்த 'பார்-பெ-க்யூ' பார்ட்டிகள் உபயோகமாக இருக்கின்றன.

பிரிட்டிஷ் மற்றும் பிலிப்பினோ நாட்டவர்களுக்கு சொல்லவே வேண்டாம்.. மதியத்திற்கு மேல் யாரும் சரியாக வேலை செய்யவில்லை.

பார்ட்டியின் உற்சாகம், அதைக் கொண்டாடும் விதம் எல்லாம் அந்தக் கப்பலில் அப்போது இருக்கும் கும்பலைப் பொருத்தது.. அதிலும் கேப்டனின் குணத்தைப் பொருத்தது.

இந்தக் கப்பலில் கேப்டன் பிரிட்டிஷ்காரர்.

பொதுவாக பிலிப்பைன்ஸ் நாட்டு கடல் பணியாளர்களுக்கு இசையில் ஏகப்பிரியம்.. உற்சாகமாக  மைக்கைக் கையில் எடுத்தால் விடவே மாட்டார்கள்.

அந்தக் கப்பலில் இருந்த பெரிய 'மியூஸிக் ஸிஸ்டம்' வெளியே வந்திருந்தது. எலக்ட்ரிக் கிதார் வாசிக்கும் ஜெஸ்ஸி என்ற மாலுமி மாலையிலிருந்தே பயிற்சி செய்து கொண்டிருந்தான்.

காலி பெயிண்ட் டப்பாக்களாலும், கெமிக்கல் டிரம்களாலும் உருவாக்கப் பட்டிருந்த 'டிரம் ஸெட்' கம்பீரமாக நடுவில் இருந்தது. இஞ்ஜின் அறையில் இருந்து 'உபயோகமற்றது' என்று தூக்கி எறியப்பட்ட பழைய 'ஏர் கம்ப்ரஸர்' வால்வு பிளேட்டுகள் கூட இசைக் கருவிகளாய் மாறிப்போய் இருந்தன..

கப்பலில் உபயோகமில்லாமல் தூக்கி எறிந்திருந்த பொருட்கள் எல்லாம் அங்கே உருமாறி இசைக் கருவிகளாகி இருந்தன.

பெரிய இசைக்கச்சேரிக்கு தயார் செய்வதைப் போல் பிலிப்பினோ மாலுமிகள் உற்சாகமாக ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

ஆறு மணிக்கு எல்லோரும் அங்கே இருந்தார்கள்.. சிலர் மாறு வேஷம் போட்டிருந்தார்கள்.. அரசன் போல் வேஷமணிந்திருந்தவர் கடல் அரசன் 'நெப்டியூன்'. அவருக்கு அருகே அரசியின் வேடத்தில் கவுன் போட்டுக் கொண்டு இன்னொரு மாலுமியின் பெண் வேஷம்.


போலீஸ்காரர் போல் தோற்றமுடைய இருவர்.. 'டாக்டர்' என்று எழுதப்பட்ட பெட்டியைச் சுமந்து கொண்டு இன்னொருவர்.. இப்படி விதவிதமாய்..

நான் 'இதெல்லாம் என்ன வினோதம்' என்று வியந்து கொண்டிருந்தேன்.. ஆனால் அன்றைய முக்கிய விருந்தாளியே நானும் ரோஹினியும் தான்..

'என்ன அது நிலநடுகோட்டைத் தாண்டும் விழா' என்று முன்பே கேட்டேன் பலரிடம்.. ஆளுக்காள் பல கதைகள் சொன்னார்கள்.. வயதான மாலுமி ஒருவர் அவருக்குத் தெரிந்த கதையைச் சொன்னார்.


பழைய காலத்தில் கடலில் ஏற்படும் சீற்றங்கள் எல்லாம் கடல் அரசனான 'நெப்டியூனின்' கோபத்தின் காரணமாகவே ஏற்பட்டதாகக் கருதி, அவனைச் சமாதானப் படுத்தும் முயற்சியாக பலியிடும் வழக்கம்கூட இருந்ததாம்.

அந்தக் காலத்தில் கப்பல்களில் அடிமைகளையும், கைதிகளையும் ஏற்றிச் செல்லும் வழக்கம் இருந்ததால், அவர்களை நிலநடுக்கோட்டை கடக்கும்போது நெப்டியூனைத் திருப்தி படுத்த பலியிட்டார்களாம்.

வரலாற்றைப் பார்த்தால், இயல்பிலேயே கப்பல் மாலுமிகள் இதுபோன்ற மூட நம்பிக்கைக்களை (superstitious) அதிகம் நம்புபவர்கள் என்பது தெரியும். இந்த விழாவைக் கொண்டாடும் நோக்கமே, கடலுக்கு ராஜாவான நெப்டியூனின் ஆசிர்வாதத்தைப் பெறுவதற்காகத் தான்.

இந்த விழாவின் போது, மாலுமிகள் தங்களை வித்தியாசமான உடையணிந்து கொள்வார்கள். தங்கள் உடம்பை பழைய உணவுப் பொருட்களாலும், கடலில் கிடைக்கும் பல்வேறு பொருள்களாலும் அலங்காரம் செய்து கொள்வார்கள்..

நெப்டியூனின் மனதைக் குளிர்விக்கவே இந்த விழா. இப்படி செய்தால் தங்கள் பயணத்திற்கு கடல் அரசன் ஆசி வழங்குவார் என்றும் நம்பினார்கள்.

இந்தக் கதைகளில் எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை.. ஆனால் அந்தப் பழக்கங்களின் தொடர்ச்சியாக இப்போது புதிதாக கப்பலில் சேரும் எல்லோருக்கும் முதல்முதலில் கோட்டைக் கடக்கும்போது அவர்களை அலங்கோலமாக்கி சில சடங்குகள் செய்வார்களாம்.

அது என்ன சடங்கு என்பதை மட்டும் அந்த மாலுமி சொல்ல மறுத்து விட்டார். 'நீதான் நேரிலேயே அனுபவிக்கப் போகிறாயே' என்றார்.

எல்லாம் செய்து முடித்த பின் 'சர்ட்டிபிகேட்' ஒன்றும் தருவார்கள்.. அடுத்த கப்பலில் சேரும்போது, தனக்கு ஏற்கனவே விழா நடத்தி பூமத்திய ரேகையைக் கடந்த அனுபவம் இருப்பதை நிரூபிப்பதற்காக இந்த சர்ட்டிபிகேட்.. அது இல்லாவிட்டால் நம்பாமல் மறுபடியும் செய்ய வேண்டியிருக்கும்..

'அதென்ன சடங்குகள்' என்று ஜோவிடம் கேட்டுப் பார்த்தேன்.. 'ரத்தப்பலி' என்றான் அவன் காதுக்குள் மெதுவாக..

எனக்கு உள்ளுக்குள் உதறல் எடுக்க ஆரம்பித்தது.. என்ன செய்யப் போகிறார்களோ என்று பயமாகவும் இருந்தது.

ஆறரை மணிக்கு விழா ஆரம்பித்தது. என்னையும் ரோஹினியையும் வேறுவேறு இடத்தில் எங்காவது போய் ஒளிந்து கொள்ளச் சொன்னார்கள்.


கப்பலுக்கு கடல் அரசன் நெப்டியூன் தன் மனைவியுடன் வந்திருப்பதாக அறிவிப்பு செய்தார்கள். கேப்டன் கப்பலின் முன்பகுதிக்குச் சென்று சகல மரியாதையுடன் நெப்டியூனை வரவேற்கச் சென்றார்.

நான் இஞ்ஜின் அறையில் ஒரு இயந்திரத்தின் பின் ஒளிந்து கொண்டேன்.. ஐந்து நிமிடத்தில் என்னைக் கண்டுபிடித்து சங்கிலியால் பிணைத்து நெப்டியூனின் முன்னால் மண்டியிட வைத்தனர்.

ரோஹினியையும், ஒரு சங்கிலியால் கட்டி இழுத்து வந்து கைதியைப் போல் நெப்டியூனின் முன் நிறுத்தி விசாரணைக்கு உட்படுத்தினார்கள்.

முதலில் என்மீது குற்றப் பத்திரிக்கை வாசிக்கப்பட்டது. அதையெல்லாம் பார்க்கும்போது சிரிப்பாகவும் இருந்தது..


முதல் நாள் பார்ட்டியில் குடிக்க மறுத்ததிலிருந்து, இஞ்ஜின் அறையில் செய்த சின்னச் சின்ன தவறுகள் எல்லாம் லிஸ்ட்டில் இருந்தன. ரோஹினியின் மீது பெரிய லிஸ்ட்டே இருந்தது.. 'சார்ஜ் ஷீட்'டின் நகல் அவளிடம் வழங்கப் பட்டது.

'கடல் அரசன் நெப்டியூனின் முறையான அனுமதியில்லாமல் பூமத்தியரேகையைக் கடந்ததற்காக குற்றவாளியாக நிறுத்தப் பட்டுள்ளாய். மேலும் தன் மனைவியை என்னுடய அனுமதியில்லாமல் கப்பலில் கூட்டி வந்துள்ள உன் கணவன் அருணும் இதனால் குற்றவாளி ஆகிறான்..

அவனுக்கும் உன்னுடன் சேர்த்து தண்டனை வழங்கப் படுகிறது. நீ என்னுடைய மனைவியை விட அழகாக இருப்பதால் அதற்காகவும் தண்டனை உண்டு..(!?).

நீ ஒரு சுத்த வெஜிடேரியன். அதனால் கறி, மீன் எதுவும் சாப்பிடுவதில்லை என்று கேள்விப்பட்டேன்.. மீன்களுக்கெல்லாம் ராஜாவான என்னையும் என் ராஜ்ஜியத்தில் உள்ள அனைத்து மீன் இனத்தையும் அது அவமதித்த குற்றமாகிறது.

இதைத்தவிர உன் மேல் இன்னும் நிறைய குற்றச்சாட்டுகள் உள்ளன.. இதற்கெல்லாம் தண்டனையை ஏற்றுக் கொள்கிறாயா?' என்று கேட்டு அவள்மீது குற்றப் பத்திரிக்கை வாசிக்கப்பட்டது..

அவள் குற்றங்களை ஏற்றுக் கொள்வதாகச் சொன்னாள்.. பெரிய மீன் ஒன்றைத் தொங்கவிட்டு இருந்தார்கள்.. அவளை அதை முத்தமிடச் சொன்னார்கள்.

பின் எங்களை தனித்தனி நாற்காலியில் உட்கார வைத்து தலையில் என்னென்னவோ கலவையைக் கொண்டு வந்து ஊற்றினார்கள்..

அழுகிய முட்டை, மீன், தக்காளி, பீர், வினிகர் என்று எல்லாம் கலந்த கலவை.. முகத்தில் வழிந்து கண்கள் இரண்டும் அந்தக் கலவையில் மறைந்து போனது.

யாரோ இரண்டு முறை என் தலையில் முட்டையை உடைத்து விட்டுப் போனார்கள்.. எல்லோரும் விழுந்து விழுந்து சிரிப்பது காதில் கேட்டது.

"ஓ.கே தயாள் தாஸ்.. நீ உன் வேலையை ஆரம்பிக்கலாம்.." என்று யாரோ சொல்வது கேட்டது.. தயாள்தாஸ் ஒரு மாலுமி.. பிலிப்பினோ என்றாலும் தந்தை ஒரு இந்தியர்.. அதனால் இந்தியப் பெயர் அவருக்கு..

அவர் என்னை என்ன செய்யப் போகிறார்.. மெதுவாக சிரமப்பட்டு கண்களைத் திறந்து பார்த்த நான் அதிர்ந்து போனேன்..

தயாள்தாஸ் ஒரு கத்தியுடன் என்னை நோக்கி வருவது தெரிந்தது.. பயத்துடன் திமிறிக் கொண்டு எழ முயற்சி செய்தேன்..

பக்கத்தில் நின்ற இருவர் என்னை அப்படியே அழுத்திப் பிடித்தனர்.. கத்தியோடு தயாள் தாஸ் நெருங்க நான் நிஜமாகவே பயத்தின் உச்சகட்டத்தில் இருந்தேன்.. கற்பனையில் என்னன்னவோ தோன்றின..

"ஏய் பயப்படாதே... உன்னை எதுவும் செய்ய மாட்டார் தயாள்தாஸ்.. உன் தலைமுடியை வெட்டத்தான் அவர் வருகிறார்.." என்று ஜோ என் அருகே வந்து சொன்னான்..

அப்போதுதான் நன்றாகக் கவனித்தேன்.. தயாள்தாஸ் கையில் 'ஷேவிங்' செய்ய உபயோகிக்கும் கத்தி.. கூடவே கத்தரிக்கோல்.. அவர் பார்பர் வேஷத்தில் இருந்தார்..

"உனக்கு மொட்டை அடிக்கவா.. இல்லை பாதி தலைமுடியை மட்டும் வெட்டவா.."

'அடப்பாவிகளா.. என் தலைமுடியை வெட்டப் போகிறார்களா?.. இது என்ன அலங்கோலம்'.

எனக்கு தப்பிக்க வேண்டும் என்று தோன்றியது.. என்னைப் பிடித்து அழுத்தியிருந்தவர்களை விலக்கிக் கொண்டு திமிறினேன்.



---------------------

நில நடுக்கோட்டைத் தாண்டும் விழா பற்றி சொல்லியிருந்தேன்..

இப்படி செய்வதன் மூலம் நெப்டியூனின் மனதைக் குளிர்வித்து, எந்தவித பிரச்னையும் இன்றி தங்கள் பயணத்திற்கு கடல் அரசன் ஆசி வழங்குவார் என்ற நம்பிக்கையே இதற்குக் காரணம்.
-------------------------

நான் வாசித்த ஒரு நிலநடுகோட்டு விழா பற்றிய விளக்கம் இங்கே உள்ளது.. சில வார்த்தைகளை தமிழில் மொழி பெயர்ப்பது கடினம் என்பதால் ஆங்கிலத்தில் அப்படியே தருகிறேன்..

The tradition is indeed a ceremony in which the God Neptune's guard ( by tradition dressed as Moorish soldiers) appear.

It is preceded by a large sailor of mixed race and followed by a judge-writer, a hairdresser and his apprentice, a priest and his helper, four bailiffs, and the Devil with a large tail and dressed in sheep's skins.

These characters have task of making the aforementioned court. At the end of the parade appears the Neptune himself and his sons, all mounted in a car. Neptune then takes the captain's seat and starts givin silly orders, while one of his guards takes the elm, the other guards watching over the officers.

The priest's helper takes the donations and the judge and the priest take their clothes revealing women's clothes underneath and start dancing silly with the hairdresser and his apprentice to the sound of ridiculous music.

Members of Neptunus Rex's party usually include Davy Jones, Neptune's first assistant, Her Highness Amphitrite, the Royal Scribe, the Royal Doctor, the Royal Dentist, the Royal Baby, the Royal Navigator, the Royal Chaplain, the Royal Judge, Attorneys, Barbers and other names that suit the party.

"shellbacks" (those who have crossed the equator before) to ensure the "pollywogs" (those who are about to cross the equator for the first time) are properly indoctrinated. All pollywogs, even the Commanding Officer if he has not crossed before, must participate.

A Golden Shellback is one who has crossed the equator at the 180th meridian. (Date line in the pacific)
------------------

வழக்கமாக கப்பலில் முடிவெட்டிக் கொள்வதென்றால் தயாள்தாஸிடம் போவார்கள்..

நான் திமிற முற்பட்டபோது, "அப்படியே இரு.. கண்களைத் திறக்காதே.." என்றான் என்னை அழுத்திப் பிடித்து இருந்த மாலுமி. கைகளையும் உதற முடியவில்லை.

கொஞ்ச நேரத்தில் அவர்கள் விட்டுவிடவே எழுந்து நின்றேன்.. தயாள்தாஸ் கையில் கத்தியோடு சிரித்துக் கொண்டு இருந்தார். நான் என் தலையைத் தொட்டுப் பார்த்தேன்..

தலைமுடி அங்குமிங்குமாக பரவலாக வெட்டப்பட்டும், சில இடங்களில் மழிக்கப்பட்டும் ஒரு கேலிப் பொருளாக ஆகியிருந்தேன்.

பின் எதையோ கொடுத்து கட்டாயம் சாப்பிட்டே ஆக வேண்டும் என்று வற்புறுத்தி சாப்பிட வைத்தார்கள். குமட்டிக் கொண்டு வந்தது.. சமாளித்து சாப்பிட்டேன்.

ரோஹினியின் தலைமுடியில் கொஞ்சம் வெட்டினார்கள்.. அவள் பெண் என்பதால் அவளுக்குப் பதிலாக அருணை 'ஷேவ்' செய்து கொள்ளச் சொன்னார்கள்.

(பொதுவாக இந்தியப் பெண்களை அதிகம் கட்டாயப் படுத்துவதில்லை.. இந்தியர்கள் 'செண்ட்டிமெண்ட்' உணர்வு அதிகம் உடையவர்கள் என்பதால் அவர்களின் உணர்வுகளுக்கு மரியாதை கொடுப்பதை நான் பல கப்பல்களில் பார்த்து இருக்கிறேன்.)

எல்லோரும் ஆரவாரத்துடன் கைதட்டினார்கள். எங்களை நீச்சல் குளத்தில் தள்ளி விட்டார்கள்..

கப்பலின் நீச்சல் குளம் என்பது பத்துக்கு பத்து சைஸில் இருந்த ஒரு தொட்டி தான்.. அதில் கடல் நீர் நிரப்பப் பட்டிருந்தது.

அதன்பின் எங்களை யாரும் கண்டு கொள்ளவேயில்லை.. பார்ட்டி இசைவிருந்துடன் முழுவீச்சுடன் ஆரம்பித்தது. நள்ளிரவு இரண்டு மணிவரை குடித்துக் கொண்டும், பாடி ஆடிக் கொண்டும் பொழுதைப் போக்கினார்கள்.

அன்றிரவே நான் என் தலையை முழுவதுமாக மொட்டையடித்துக் கொள்ள வேண்டியிருந்தது.. கண்ணாடியில் பார்த்தபோது தலைமுடி மிகவும் கோரமாக காட்சியளித்தது.. சில இடங்களில் கத்திரிக்கப் பட்டும், சில இடங்களில் படாமலும்.
--------------------------

நிலநடுக்கோட்டைத் தாண்டிய பின் விழா நடத்தி அதற்காக சான்றிதழ் ஒன்றும் வழங்கப்படும்.. அந்த சர்ட்டிபிகேட்டை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு கப்பலிலும் அதை கையில் எடுத்துச் செல்ல வேண்டும்..

இல்லையென்றால், நிரூபணம் இல்லாததால் மீண்டும் நமக்கு எல்லா சடங்குகளும் நடக்கும்..


அந்த சான்றிதழில் கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டிருக்கும்...

I, Neptune,
being the true and rightful Monarch off all the oceans
and of all the creatures that dwell therin hereby bestow
THE FREEDOM of the SEVEN SEAS
upon that nobel and gallant mariner
.......(Name of the Sailor).........
who has crossed that line,
called the Equator,
which divides our hemispheres,
Let all who owe me allegiance
allow the above-named to pass
without let or hindrance
in pursuit of that which is truly pleasing.

இவ்வாறு எழுதப்பட்டுள்ள சான்றிதழில் கேப்டன் கையெழுத்தும், எந்தக் கப்பலில், எந்த நாளில் அந்த சர்ட்டிபிகேட் வழங்கப்பட்டது என்ற விபரமும் இருக்கும்..
-----------------------------------

எனக்கு அப்படியே இருப்பதை விட மொட்டை அடித்துக் கொள்வதே நல்லது என்று தோன்றியது. எல்லாக் கப்பலிலும் யாராவது ஒருவர் முடி வெட்டுவார்கள்.. (அதை பொழுது போக்காக எடுத்துக் கொண்டு செய்வார்கள்.. தொழிலாக அல்ல).

இதற்கென்று ஒரு ஆளையா வேலைக்கு சேர்க்கப் போகிறார்கள்?.. கப்பலில் அப்போது இருப்பவர்களில் யாராவது, அதையும் கூடுதலாகச் செய்வார்கள்.

வேறென்ன.. சலூனில் வெட்டிக் கொள்வது போன்று நேர்த்தியாகவா வெட்டப் போகிறார்கள்?. மிக சுலபம்.. வளர்ந்திருக்கும் முடியை எப்படியாவது சின்னதாக்கி விடுவார்கள்.. அது பிடிக்காவிட்டால் அடுத்த துறைமுகம் சேரும் வரை முடிவளர்க்க வேண்டியது தான்.

தயாள்தாஸ் கொஞ்சம் பரவாயில்லாமல் வெட்டுவார். பேட்டரியில் இயங்கும் மெஷின் ஒன்றையும் அதற்கென்றே வைத்திருந்தார். அவரையே கூப்பிட்டு முழுவதும் மொட்டையடித்து விடச் சொன்னேன்.. அதன்பின் முடிவளர நிறைய நாட்களானது.


கடல் வாழ்க்கை மிகவும் அமைதியாகச் சென்று கொண்டிருந்தது.. கடலும் அதிக ஆர்ப்பாட்டமில்லாமல் இருந்தது.

ஆரம்ப நாட்களில் என்னிடம் இருந்த கடல்வாழ்க்கை பற்றிய வெறுப்பு கலந்த சிந்தனைகள் முழுதும் மாறியிருந்தன. பழகிப் போய்விட்டது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

இன்னொரு விஷயம் பற்றிச் சொல்லியாக வேண்டும். இங்கே உள்ளவர்களின் மனநிலை பெரும்பாலும் கடலின் தன்மைக்கேற்ப மாறுபடுகிறது என்பதையும் நான் கவனித்து
இருக்கிறேன். நானே நிறைய முறை அதை அனுபவித்திருக்கிறேன்.

கடல் எந்தவொரு சலனமில்லாமல் அமைதியாக இருக்கும் காலங்களில், இங்கே இருப்பவர்களும் சந்தோஷமாகவே இருக்கிறார்கள்.. கடல் கோபத்துடன் சீறும் காலங்களில், இங்குள்ள மனித மனங்களில் ஏனோ பெரும்பாலும் கவலை வந்து விடுகிறது.

சில சமயங்களில் 'மூட் அவுட்' ஆகி யாருடனும் பேசவே மாட்டார்கள். இந்த நாட்களில் வீடு, குடும்பம் பற்றிய கவலையும், எப்போது வீடு போய்ச் சேர்வோம் என்ற நினைப்பும்
வந்துவிடுகிறது.. கப்பல் வேலையை விட்டுவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவது இம்மாதிரி வேளைகளில் தான்.

கடல் அமைதியாக ரசிக்கக் கூடியதாக இருக்கும் வேளைகளில், 'கப்பல் வேலை போல ஒரு நல்ல வேலை எங்கேயும் கிடைக்காது' என்ற எண்ணமும் வருவதை ஆச்சர்யத்துடன் கவனித்துள்ளேன்.


கப்பல் இந்தியப் பெருங்கடலில் பயணித்து இப்போது 'மலாக்கா ஜலசந்தி'யில் (Malacca Straits) நுழைந்திருந்தது.. இந்தோனேசியாவுக்கும் மலேசியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதிக்கும் இடையில் அமைந்துள்ள இந்தக் கடல்பகுதியில் ஏராளமான கப்பல் போக்குவரத்து நடந்து கொண்டே இருக்கும்..

மிகவும் குறுகிய நீர்வழியான இந்த இடத்தில் மிகவும் ஜாக்கிரதையாகவே கப்பலைச் செலுத்த வேண்டும்.. இல்லையேல் எதிரே வரும் கப்பலோடு மோத வேண்டிய நிலை ஏற்படும்..

(சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டைச் சேர்ந்த கம்பெனி ஒன்றின் கப்பலான 'ICL விக்ரமன்' மீது எதிரே வந்த இன்னொரு கப்பல் மோதி, 'விக்ரமன்' மூழ்கியதும், அதில் இருந்த நிறைய பேர் (அனைவரும் இந்தியர்கள்) இறந்ததும் இந்த 'மலாக்கா ஜலசந்தி'யில் தான்.. அதில் கருணாநிதி என்ற என் நண்பர் ஒருவரும் இறந்தார்..)

மலேசியாவில் உள்ள மலாக்கா என்ற துறைமுகத்தின் பெயராலேயே இந்த இடம் அழைக்கப்படுகிறது.. 'மலாக்கா' என்ற வார்த்தை கப்பல்வாசிகளுக்கு கொஞ்சம் பயமுறுத்தும் சொல். விபத்துகளுக்கு மட்டுமல்ல, கடல் கொள்ளையர்களுக்கும் பேர்போன இடம் இது..

எங்கள் கப்பல் அதில் நுழையும் முன், கடல் கொள்ளையர் கப்பலுக்கு வந்துவிடாமல் இருக்க முன்னேற்பாடுகள் செய்தோம்..

மாலை நேரத்துக்குப் பின் கப்பலின் தங்கும் தளத்துக்கு வெளியேயிருந்து உள்ளே வரும் எல்லாக் கதவுகளும் நன்றாக அடைக்கப்பட்டு, திறக்க முடியாதபடி இரும்புப் பைப்புகள் சொருகிப் பூட்டினார்கள்.

வீல் ஹவுஸ் பகுதியில் டியூட்டியில் இருக்கும் ஆட்களின் எண்ணிக்கையைப் அதிகப்படுத்தி வேறு படகோ, கப்பலோ எங்கள் கப்பலை நோக்கி வருகிறதா என்பதைக் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டது..

அப்படிக் கொள்ளையர்கள் வந்துவிட்டால் கப்பலின் தளத்தை நெருங்க விடாமல் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்க முன்னேற்பாடுகள் செய்தோம். இதெல்லாம் ஒரு முன்னெச்சரிக்கை.. ஆனால் எங்கள் கப்பலுக்கு எந்த ஆபத்தும் வரவில்லை..

கப்பல் எந்தப் பிரச்னையும் இன்றி சிங்கப்பூரைத் தாண்டியது.. சிங்கப்பூரிலிருந்து தென்சீனக் கடலில் நுழைந்து, ஜப்பானை அடைய எட்டு நாட்கள் ஆனது.

ஜப்பான் என்ற அந்தக் குட்டி தேசம் எனக்கு புதியதொரு நாட்டை மட்டும் அறிமுகப் படுத்தவில்லை.. 'காலம் தவறாமை' என்ற வார்த்தையின் அர்த்தம் அந்த மக்களின் ரத்தத்தில் ஊறிப் போயிருக்கும் அதிசயத்தைக் கண்டு வியந்தேன்.. அதுமட்டுமல்ல.. ஹிரோஷிமா நகரில் கண்ட நெஞ்சை உலுக்கும் காட்சிகளில் கல்நெஞ்சமும் கரைந்து
போகும்..


-----------



ஜப்பான் நாட்டை அடைந்ததும், என் மனதில் எல்லையில்லா சந்தோசம். இந்த குட்டி தேசத்தைப் பற்றி எவ்வளவு கேள்விப் பட்டிருக்கிறேன் !.

அவர்களின் கடுமையான உழைப்பு, நேரம் தவறாமை போன்றவற்றை நான் நேரிலேயே பார்த்து வியக்கும் வாய்ப்பு கிடைத்தது...

'ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்' ஒன்றில் சந்தித்த ஒரு தமிழ்க் குடும்பத்தின் வீட்டுக்கு நானும் என் கூட வந்த இரண்டாவது ஆபிஸரும் சென்றோம்.

அவர்கள் அங்கே வந்து ஸெட்டிலாகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டதாம். ஜப்பானியர் பலருக்கும் ஆங்கிலம் சரியாகத் தெரியவில்லை.. தாய்மொழியில் தான் எல்லாமுமே. நாங்கள் சந்தித்த அந்தத் தமிழ்க்குடும்ப குழந்தைகளின் கல்வி பற்றி விசாரித்தேன்.

நூறு மைல் தாண்டி இருக்கும் ஒரு ஊரிலுள்ள ஆங்கிலப் பள்ளிக்கு, தினமும் ரயிலில் பயணம் செய்து பள்ளிக்கூடம் போகிறார்களாம்..

இங்கிருந்து அங்கே போய் வாழும் இந்திய மக்கள் கூட ஏழே கால், எட்டு மணி என்று சொல்லாமல் துல்லியமாக, 'ஏழு பனிரெண்டு இரயில் பிடித்து, ஏழு ஐம்பத்தேழுக்கு ஸ்டேசனில் போய் இறங்கி, பஸ் பிடிப்போம்' என்று நிமிடக் கணக்கு வைத்து பேசும் அளவுக்கு ஜப்பானியர்களின் நேரத்தைக் காப்பாற்றும் தன்மை இருக்கிறது.

எனக்கு அதை நினைத்து பெருமூச்சு வந்தது. 'இதெல்லாம் நம்மூரில் எப்போது சாத்தியமாகப் போகிறதோ' என்று.

மறுநாள் ஹிரோஷிமா போக ஏற்பாடு செய்தோம். ஜப்பான் வந்துவிட்டு அந்த ஊரைப் பார்க்காமல் போவதெப்படி?. ஏஜெண்ட் எங்களுக்காக ரயில் டிக்கெட் ஏற்பாடு செய்து கொடுத்தார்.

நாங்கள் புறப்படும் ஸ்டேஷனிலிருந்து அடுத்தடுத்து வரும் ஸ்டேஷன்களின் பெயர்களும், அந்த ஊர்களை எத்தனை மணிக்கு எங்களின் ரயில் அடையும் என்பதெல்லாம் பிரிண்ட் செய்யப்பட்ட ஒரு அட்டவணையையும் ஏஜெண்ட் எங்களிடம் கொடுத்திருந்தார்.

மிகச் சரியாக, குறிப்பிட்ட நிமிடத்தில் எங்கள் ரயில் பிளாட்பாரத்திலிருந்து நகர ஆரம்பித்தது. ஒவ்வொரு ஸ்டேஷன் வரும் முன்பும் அந்த ஸ்டேஷன் வரப்போகும் அறிவிப்பு வண்டிக்குள் இருந்த ஸ்பீக்கர் மூலம் வந்தது.

வண்டி புறப்படும் முன், கதவுகள் மூடப்போகின்றன என்பதையும் அறிவிக்கிறார்கள்.. (எல்லாம் ஆட்டொமேடிக் கதவுகள்).

ஒரு ஸ்டேஷனிலாவது ஒரு நிமிடமாவது ரயில் தாமதமாகப் போய்விடாதா என்ற (அல்பத்தனமான) எதிர்பார்ப்புடன், கண்ணில் விளக்கெண்ணெய் விடாத குறையாக பார்த்துக் கொண்டிருந்த எங்களின் எதிர்பார்ப்பில் மண் விழுந்தது தான் மிச்சம்.

எல்லா இடத்திலும் நிமிடச் சுத்தமாகப் போய்ச் சேர்ந்து, 'ஜப்பானியர்கள் ஜப்பானியர்கள் தான்' என்று எங்களை ஒப்புக் கொள்ள வைத்து விட்டது.

எனக்கெதிர் சீட்டில் ஒரு பத்து வயது குட்டி ஜப்பானியப் பெண் ஒன்று, புத்தகச் சுமையுடன் உட்கார்ந்திருந்தது. வண்டி புறப்பட்டவுடன் தூங்க ஆரம்பித்த அந்தப் பெண் சரியான நிலையத்தில் இறங்கி விடுமா, இல்லை தூக்கத்தில் இறங்குமிடத்தை கோட்டை விட்டுவிடுமா என்று அடிக்கடி நான் கவலைப் பட்டுக் கொண்டிருந்தேன்.

ஆனால் ஏழு ஸ்டேசன் தாண்டி எட்டாவது ஸ்டேசனை நெருங்கும் போது, 'டக்'கென்று சுவிட்ச் போட்டாற்போல் விழித்து, ஸ்டேஷன் வந்தவுடன் அதுபாட்டுக்கு நடந்து போனதைப் பார்த்து நான் வியந்து போய் உட்கார்ந்திருந்தேன்.

தூக்கத்திலும் கூட இந்த ஜப்பானியர்கள் உடம்புக்குள் கடிகாரம் வைத்துக் கொண்டு இருப்பார்களோ?.

ஒவ்வொரு விஷயத்திலும் எங்களை ஆச்சர்யப் படுத்திய அந்த ஜப்பான் உள்ளுக்குள் எத்தனை சோகத்தை உள்ளடக்கி வைத்துள்ளது என்பதை ஹிரோஷிமா போனதும் நான் புரிந்து கொள்ள நேர்ந்தது.

மனதில் மாபெரும் எதிர்பார்ப்புடன் ஹிரோஷிமாவில் காலடி எடுத்து வைத்த எனக்கு அங்கே நான் கண்ட காட்சிகள் தந்த பாதிப்பு, வாழ்நாள் முழுதும் என் நெஞ்சில் இருந்து நீங்கவே போவதில்லை.

'ஹிரோஷிமா அமைதி நினைவு அருங்காட்சியக'த்தில் (Hiroshima Peace Memorial Museum) நுழைந்து, அணுகுண்டால் சேதப்படுத்தப்பட்ட அந்த ஊரின் மாதிரி அமைப்பைப் பார்க்கும் எந்தக் கல் நெஞ்சக்காரனும், உருகிப்போய் கண்ணீர் சிந்திடுவான்.

அணுகுண்டு வெடித்த விளைவுகளின் மிச்சமாக மியூசியத்தில் பள்ளிக் குழந்தைகளின் கிழிந்து போன யூனிஃபார்ம், கருகிபோன டிபன்பாக்ஸ், நசுக்கப்பட்ட ஸ்டீல் ஷட்டர், உருகிய பாட்டில்கள், எட்டு பதினைந்து மணிக்கு நின்று போன வாட்ச், இன்னும் எத்தனை எத்தனையோ..

அதுதவிர, பாதிக்கப் பட்டவர்களின் மெழுகு உருவங்களும் காட்சிக்கு உள்ளன. இதில் 'Sadako Sasaki' என்ற குழந்தை காகிதத்தில் செய்து வைத்த கொக்குகளும் உள்ளன.. அணுகுண்டு தாக்கியபோது இந்தப் பெண் குழந்தைக்கு வயது இரண்டு..

கதிரியக்கத்தால் பாதிக்கப் பட்ட இந்தக் குழந்தை. பத்து வருடங்களுக்குப் பின் தனது நோயைக் (லுக்கிமியா) குணப்படுத்த செஞ்சிலுவைச் சங்க மருத்துவமனைக்கு வந்தபோது, நோயின் வலியையும் தாங்கிக் கொண்டு, தான் குணமடைந்து விடுவோம் என்ற நம்பிக்கையில் காகிதத்தில் கொக்குகளைச் செய்து வைத்தாள்.

ஆனால், என்ன ஒரு கொடுமை.. கடுமையான முயற்சிகளுக்குப் பின்னும் அந்தக் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.

எட்டு மாத போராட்டத்துக்குப் பின் அந்த மலர் கருகிப் போனது.. காரணம் அணுகுண்டு ஏற்படுத்திய கதிரியக்கம் தான்.

ஹிரோஷிமாவில் போடப்பட்ட அணுகுண்டு சுமார் மூன்று மீட்டர் நீளமும், நான்கு டன் எடையும் கொண்டது. அந்த 1945-ம் ஆண்டின் டிசம்பர் மாத இறுதி வரை, 'Little Boy' என்ற அந்த குண்டால் பாதிக்கப் பட்டு, பலியானவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சத்து நாற்பதாயிரத்துக்கும் மேல்..


போரின் தோல்விக்குப் பின்னும், போராடி தலைநிமிர்ந்து நிற்கும் அந்தக் குட்டி தேசத்தை நினைத்து பரவசப்பட்ட எனக்கு, அந்த நாட்டின் மனிதாபிமான உள்ளங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள அன்றே ஒரு வாய்ப்பு கிடைத்தது.

--------------

ஹிரோஷிமாவிலிருந்து திரும்பிய பின் நேராகக் கப்பலுக்குச் செல்லாமல், துறைமுகத்தின் அருகிலுள்ள ஊரின் கடைவீதியின் வழியே நடந்து போனேன். மெதுவாக ஒரு பாலத்தின் ஓரமாக நடந்த போது திடீரென்று மழை தூற ஆரம்பித்தது.

நான் பாலத்தின் பாதி தூரத்தில் இருந்ததால், ஒதுங்குவதற்கு அருகே எந்த இடமும் இல்லை. வேறு வழியில்லாமல் வேகவேகமாகப் பாதி நடையும், பாதி ஓட்டமுமாக திரும்பி புறப்பட்ட இடத்துக்கே போக ஆரம்பித்தேன்.

அப்போது தான் அது நடந்தது. பாலத்தில் வேகமாகப் போய்க் கொண்டிருந்த கார் ஒன்று என்னைத் தாண்டிப்போய் சட்டென 'பிரேக்' அடித்து நின்று, ரிவர்ஸில் வந்தது.

மழை நன்றாகக் கொட்ட ஆரம்பித்தது. வேகமாகப் பின்னால் வந்த கார் என்னருகே நின்றது. திடீரென்று என் அருகே வந்து நின்ற காரைக் கண்ட நான் எதுவும் புரியாமல் நின்று விட்டேன்.

காரிலிருந்து கதவைத் திறந்து கொண்டு இறங்கிய அந்த ஜப்பானியருக்கு வயது நாற்பது இருக்கலாம். என்னைப் பார்த்து புன்னகைத்து விட்டு, "ப்ளீஸ்.. டேக்" என்று சொல்லிவிட்டு என் கையில் எதையோ கொடுத்தார்.

மழை பலமாக இருந்ததால் எனக்கு முதலில் எதுவும் புரியவில்லை. என் கையில் அவ்ர் திணித்த அந்தப் பொருளைப் பார்த்து நான் அனுபவித்த உணர்ச்சியை வார்த்தைகளில் விவரிப்பது சிரமம்.

அது ஒரு குடை.. என் கையில் கொடுத்துவிட்டு, உடனே காரில் ஏறிப் போய்விட்ட அந்த மனிதர் தந்த ஆனந்த அதிர்ச்சியில், குடையைக் கூட விரிக்காமல் நான் தூரத்தில் செல்லும் காரையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன்.

ஒரு தனி மனிதர் தன் நாட்டையே என் மதிப்பில் உயரச் செய்து விட்டார். அவர் குடை கொடுத்து உதவியது எனக்கல்ல.. அவரின் தேசத்துக்கு.. தன் தேசத்தின் பெருமையை இன்னொரு தேசத்தவர் பாராட்ட தன் பங்கை சரியாகச் செய்து விட்டார்.

எத்தனையோ தேசங்களைச் சுற்றி வந்தாலும், இன்றுவரை ஜப்பான் என்ற அந்த சின்ன நாடு என் மதிப்பில் உயர்ந்து நிற்பதற்கு அந்த கார் மனிதரும் காரணமாகிப் போனார். இன்றும் அந்தக் குடையை பத்திரப் படுத்தி என்னுடன் வைத்துள்ளேன்..
---------------
ஜப்பானில் சரக்கை இறக்கிவிட்டு ஆஸ்திரேலியாவை நோக்கி கப்பல் பயணிக்க ஆரம்பித்தது.

தென்சீனக் கடலில் சென்ற போது, அந்தப் பகுதியில் வரும் கப்பல்களை கடல் கொள்ளையர்கள் தாக்குவதாக கப்பலுக்கு தகவல் வந்தது. எங்களுக்கு கொள்ளையர்கள் பற்றி பயம் வந்துவிட்டது.

காலையில் பத்து மணிக்கு இஞ்ஜின் கட்டுப்பாட்டு அறையில் அது பற்றிப் பேசினார்கள். ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்த செய்திகளைச் சொன்னார்கள்.

அருண், பிலிப்பினோ ஃபிட்டரான ஜூலியஸைப் பார்த்து, "ஜூலியஸ், நீ ஒரு சம்பவம் சொன்னாயே.. இவனுக்கு அதைப் பற்றிச் சொல்" என்றான் என்னைக் கைகாட்டி.

அப்போது அருணின் மனைவி ரோஹினியும் அங்கே இஞ்ஜின் கட்டுப்பாட்டு அறைக்கு வந்து சேர்ந்தாள். ரோஹினியைப் பார்த்ததும், ஜூலியஸ் சொல்ல வந்ததை நிறுத்தி விட்டான்.

என்னிடம், "இன்று மாலை உனக்கு அது பற்றி சொல்கிறேன்.. இப்போது வேண்டாம்" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

அவன் ஏன் உடனேயே சொல்லவில்லை என்பது அப்போது புரியவில்லை.. ஜூலியஸ் அதற்கு முன் கிரேக்கக் கம்பெனியின் கப்பல் ஒன்றில் வேலை செய்தபோது, கப்பலில் இருந்த நான்காவது இஞ்ஜினீயரின் கதைதான் அந்தச் சம்பவம்..

ஜூலியஸின் நெருங்கிய நண்பனாகப் பழகிய வில்லியம்ஸ் என்ற அந்த பிரேஸில் இஞ்ஜினீயர் தன் மனைவி கேதரினுடன் அந்தக் கப்பலில் இருந்தான். வில்லியம்ஸ் பற்றி சொல்வதற்காக ஜூலியஸ் என்னை அழைத்துக் கொண்டு, மாலையில் கப்பலில் எங்கள் அறைகள் அமைந்துள்ள தளத்துக்கு வெளியே வந்தான்.

கடல் அமைதியாக இருந்தது. இரண்டு நாற்காலிகளை எடுத்துப் போட்டிருந்தான். மாலை ஆறு மணியிருக்கும்.

நான் டியூட்டி முடித்து குளித்து விட்டு வந்திருந்தேன். 'கோக் டின்'னை உடைத்து இரண்டு மடக்கு குடித்து விட்டு, "நான் ஏன் காலையிலேயே இந்தக் கதையைச் சொல்லவில்லை தெரியுமா.. அப்போது ரோஹினியும் இருந்ததால் தான்.." என்றான்.

காலை பத்து மணி நாங்கள் வழக்கமாக இஞ்ஜின் அறையில் தேநீர் சாப்பிடும் நேரம். ரோஹினி வந்ததிலிருந்து எங்கள் அனைவருக்கும் தேநீர் தயாரிக்கும் வேலையை அவளே செய்வாள்.

அதற்கு முன் எல்லோருக்கும் டீ, காபி தயாரித்துக் கொடுக்க வேண்டியது ஐந்தாவது இஞ்ஜினீயரான என்னுடைய வேலை..

(எல்லா கப்பல்களிலும் இது வழக்கம்.. அதுமட்டுமில்லாமல் ஐந்தாவது இஞ்ஜினீயர் தயாரித்துக் கொடுக்கும் தேநீரை அருந்தும் சீனியர் இஞ்ஜினீயர்களில் பலர் தாங்கள் அருந்தும் கோப்பையைக் கூட கழுவி வைப்பதில்லை.. அதையும் ஜூனியர் இஞ்ஜினீயர்களையே செய்யக் கட்டாயப் படுத்தும் நிகழ்ச்சிகளும் கப்பல் வாழ்க்கையில் மிகச் சாதாரணம்..

இந்தியக் கப்பல் கம்பெனிகளில் 'ஆய்லர்' (Oiler) எனப்படும் பணியில் இருப்பவர்களே டீ தயாரிக்கும் வேலையையும் செய்து கொடுக்கின்றனர். இஞ்ஜினீயர்கள் செய்ய வேண்டியதில்லை.

ரோஹினி வந்ததிலிருந்து எனக்குப் பதிலாக அவளே டீ, காபி தயாரிக்க பத்து மணிக்கு இஞ்ஜின் அறைக்கு வந்து விடுவாள்.. பத்தரை மணி வரை தினமும் இருப்பாள்.)

"ரோஹினி இருந்ததால் என்ன பிரச்னை?" என்று ஜூலியஸைக்
கேட்டேன்.

"அவளுக்கு இந்தக் கதை தெரியக் கூடாது.. மிகவும் பயந்து விடுவாள்.. அதன்பின் கப்பலுக்கு வரவே மாட்டாள்.. அதனால் அவள் இருக்கும் போது இந்தக் கதையைச் சொல்லவில்லை.."-சொல்லிவிட்டு, சிறிது நேர அமைதிக்குப் பின் கதையைச் சொல்ல ஆரம்பித்தான்..


"அப்போது அந்தக் கப்பல் இந்தியப் பெருங்கடலிலிருந்து சிங்கப்பூர் வழியாகப் போய்க் கொண்டிருந்தது.. 'மலாக்கா ஜலசந்தி'யில் கடற்கொள்ளையர் பற்றி எச்சரிக்கை எதுவும் வரவில்லை. கப்பல் சிங்கப்பூர் தாண்டி தென்சீனக் கடல் பகுதியில் போய்க் கொண்டிருந்த போது, கடல்கொள்ளையர் பற்றி அபாய எச்சரிக்கை வந்தது.." என்று சொல்ல ஆரம்பித்தான் ஜூலியஸ்.


---------------

ஜூலியஸ் கடற்கொள்ளையர் பற்றி சொல்ல ஆரம்பித்தான்..

"கப்பல் சிங்கப்பூர் தாண்டி தென்சீனக் கடல் பகுதியில் போய்க் கொண்டிருந்தபோது கடற் கொள்ளையர் பற்றிய அபாய எச்சரிக்கை வந்தது.

கப்பல் போகும் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கடல் கொள்ளையர் கப்பல்களைத் தாக்குவதாகத் தெரிந்தவுடன், அவர்கள் எங்கள் கப்பலைத் தாக்காமல் இருக்க எல்லா
முன்னேற்பாடுகளையும் செய்தோம்.

இரவு ஒன்பது மணியிருக்கும்.. கடல் கொஞ்சம் கடுமையாகவே இருந்தது. திடீரென கப்பலின் அபாய சங்கு ஒலித்தது.


கப்பலில் தீ போன்ற விபத்துக்கள் ஏற்படும் போது, அபாய சைரன் ஒலிப்பது வழக்கம். அந்த சைரன் ஒலி கேட்டால், கப்பலில் உள்ள எல்லோரும், 'எமர்ஜென்ஸி ஸ்டேசன்' என்ற ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வந்து சேர்ந்து விட வேண்டும்.

ஆனால், கடற்கொள்ளையர் வந்துவிட்டால் அது குறித்து எச்சரிப்பதற்காக, வித்தியாசமான ஒலியுடன் கூடிய தனியான சிக்னல் ஏற்பாடு செய்திருந்தனர்.

அந்த சைரன் ஒலித்தால் கேப்டனின் உத்தரவு, தங்குமிடத்தில் உள்ள ஸ்பீக்கர்கள் வழியாக அனைவருக்கும் கேட்கும் வரை, யாரும் அவர்கள் அறையை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டு இருந்தனர்.

இப்போது ஒலிப்பது கடல் கொள்ளையர் கப்பலில் நுழைந்து விட்டார்கள் என்பதற்கான 'எச்சரிக்கை அலாரம்' - சொல்லி விட்டு நிறுத்தினான் ஜூலியஸ்.

கடல்கொள்ளையர் பற்றி நான் இத்தனை நாட்களில் நிறையவே கேள்விப்பட்டு இருந்தேன். சிங்கப்பூர் அருகே உள்ள 'மலாக்கா ஜலசந்தி'யிலும் , தென்சீனக் கடல்பகுதியிலும் அதுதவிர வறுமையும், ஏழ்மையும், உள்நாட்டு போர்களும் அதிகமாக உள்ள ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள சோமாலியா போன்ற சில நாடுகளின் கடற்பகுதியிலும் கடற்கொள்ளையர்களின் நடமாட்டம் அதிகம்.

இதில் வேடிக்கை என்னவென்றால் நிறைய சம்பவங்களில் அந்த நாடுகளின் கடற்படையினரே இந்தக் கொள்ளைகளில் ஈடுபடுவதாக அதிகாரப் பூர்வமான தகவல்கள் சொல்கின்றன. நவீன ரக ஆயுதங்களுடன் சின்னக் கப்பல்களில் வரும் இவர்கள் என்ன கேட்கிறார்களோ அதை மறுப்பின்றி கொடுத்து விட வேண்டும்.

எதிர்ப்பவர்களை ஈவு இரக்கமின்றி கொல்லவும் தயங்க மாட்டார்கள். என்ன சரக்கு ஏற்றி செல்லப்படுகிறது என்பதை மிகச் சரியாக தெரிந்து வைத்துக் கொண்டு, அந்தக் கப்பல்களையே தேர்ந்தெடுத்து தாக்கும் இந்தக் கொள்ளையர்களுக்கு பின்புலத்தில் மிகப் பெரிய சதிக் கும்பல்கள் இயங்குகின்றன.

இவர்களின் மூலம், ஏற்றப்படும் சரக்கு விபரம் கூட கொள்ளையர்களுக்குத் தெரிகிறது. குறிப்பாக இந்த தென்சீனக் கடற்கொள்ளையர்கள்... தங்களின் அதிவேக படகு அல்லது சின்னக் கப்பல்களைக் கொண்டு தொடர்ந்து வரும் இவர்கள், நூல் ஏணி அல்லது கொக்கி போன்ற உபகரணங்கள் மூலம் கப்பலில் ஏறுவார்கள்.

விலை உயர்ந்த சரக்குகளை கொள்ளையடித்து, தங்கள் கப்பலுக்கு மாற்றிக் கொள்ளும் இவர்கள், கேப்டனின் பொறுப்பில் உள்ள லாக்கரில் இருக்கும் பெரும் பணத்தையும் பறித்துக் கொள்வார்கள். கப்பல் ஊழியர்களைத் தாக்கும் இவர்கள் கொலை செய்ய சிறிதும் அஞ்சாதவர்கள்..

சிலசமயம் ஊழியர்கள் அனைவரையும் கொன்று கப்பலையே தங்கள் வசப்படுத்தி, கப்பலின் பெயரையே மாற்றி, தங்களுக்கு சொந்தமாக்கிக் கொண்ட நிகழ்ச்சிகளும் உண்டு..

(ஒருமுறை தெரியாத்தனமாக ரஷ்ய கடற்படைக்கு சொந்தமான கப்பலைத் தேர்ந்தெடுத்து ஒரு கொள்ளைக் கோஷ்டி முற்றுக்கையிட பதிலுக்கு பீரங்கிகள் மூலம் அந்தக் கொள்ளைக்
கப்பலை சிதறடித்த நிகழ்ச்சியும் உண்டு. நிறைய வருடங்களுக்கு முன்பு நடந்ததாக ஜூலியஸ் சொன்ன கதையை வைத்து, நான் கடற் கொள்ளையர்களைப் பற்றிக் கேள்விப்பட்டதையும் சேர்த்து, இந்த சம்பவத்தை விவரித்துள்ளேன்..
மற்றவை சிறிது கற்பனை சேர்த்தே சொல்லியிருக்கிறேன். ஜூலியஸின் பார்வையில் நடப்பதாக இதை விவரித்துள்ளேன்.)
"அலாரம் அடித்த உடனேயே பயத்தில் என் இதயம் வேகமாக அடித்துக் கொண்டது"- என்று தொடர்ந்து நடந்தவற்றைச் சொல்ல ஆரம்பித்தான் ஜூலியஸ்.

அதே சமயத்தில் கேப்டனின் குரல் ஸ்பீக்கர் மூலம் கேட்டது. 'யாரும் எந்தவித எதிர்ப்பும் காட்டவேண்டாம்.. அவர்கள் நம்மை எதுவும் செய்யப் போவதில்லை என்று உறுதி அளித்துள்ளனர். நீங்கள் அனைவரும் நான் இருக்கும் 'வீல் ஹவுஸ்' பகுதிக்கு
வரவும். எல்லோரும் ஒரே இடத்தில் இருப்பது நமக்கும் நல்லது.

இப்போது எனக்கு வேறு வழி எதுவும் தெரியவில்லை.. உங்கள் உயிரைப் பாதுகாப்பது எனது கடமை. அவர்கள் எந்தப் பொருளை எடுத்த்தாலும் தடுக்காதீர்கள்.. இப்போது எல்லோரும் உங்கள் அறைக்கதவுகளைத் திறந்து வைத்து விட்டு இங்கே வாருங்கள். ஆயுதம் எதுவும் எடுத்து வரவேண்டாம்.'

ஒரு பரபரப்பான சூழ்நிலையில் சிக்கிக் கொண்டு விட்டது புரிந்தது.மெதுவாக கதவைத் திறந்து எட்டிப் பார்த்தேன்..

பக்கத்து அறைகளிலிருந்து என்னைப் போலவே எல்லோரும் பயத்தோடு வெளியே வந்தனர்.. தயக்கதுடன் மனதைத் திடப்படுத்திக் கொண்டு ஒவ்வொருவராக 'வீல் ஹவுஸ்' பகுதிக்கு வந்தனர். ஆங்கிலப் படங்களில் பார்க்கும் காட்சி போலிருந்தது.

ஒரு மூலையில் கேப்டனும், அப்போது டியூட்டியில் இருந்த மூன்றாவது ஆபிஸர் மற்றும் ரேடியோ ஆபிஸர் முகத்தில் உறைந்து போன பயத்துடன் நிற்க, அவர்களுக்கு எதிரே நான்கு
கொள்ளையர்கள் கையில் இயந்திரத் துப்பாக்கிகளுடன்.

கொஞ்சம் கூட கருணையை அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது என்று தோன்றியது. எல்லோரையும் கேப்டன் பக்கத்தில் நிற்கச் சொல்லி உத்தரவிட்டான் அந்த நால்வரில் ஒருவன். அந்தக் கும்பலுக்கு தலைவனாக இருக்க வேண்டும்.

அவன் மற்ற மூவரிடம் திரும்பி, புரியாத மொழியில் ஏதோ உத்தரவிட்டான்.. உடனே மற்ற மூவரும் அந்த அறையை விட்டு வெளியேறினர்.. அந்த ஏ.ஸி. குளிரிலும் எனக்கு வேர்த்தது.

யாரோ மெதுவாக பேச முற்பட, கோபம் தெறித்த கண்களுடன் தனது துப்பாக்கியைத் தூக்கிப் பிடித்தான் அந்தக் கொள்ளையன்..

"நோ ஸ்பீச்.. நோ டாக்.. மீ நோ மெர்ஸி.. ஐ கில் யூ ஆல்" - என்று உடைந்து போன ஆங்கிலத்தில் கொடூரமாக பார்த்துக் கொண்டே சொன்னபடி எல்லோரையும் ஒருமுறை சுற்றி
வந்தான்.

அனைவரின் சப்தநாடியும் ஒடுங்கிப் போனது. இவன் செய்யக் கூடியவன் என்று தோன்றியது. அசையாமல் பதினைந்து நிமிடங்கள் அந்த இடத்தில் நின்றோம். கையில் 'வாக்கி டாக்கி' வைத்துக் கொண்டு இடையிடையே யாருக்கோ உத்திரவிடுவதும், பின் வேறு யாரிடமோ பலமாக சிரித்துக் கொண்டு பேசுவதுமாக இருந்தான்.

வீல்ஹவுஸ் கண்ணாடி ஜன்னல்கள் வழியே அந்தக் கப்பலின் இடதுபுறத்தில், இன்னொரு சின்னக் கப்பல் தொடர்ந்து வந்து கொண்டிருப்பது தெரிந்தது. அவர்களின் கொள்ளைக் கப்பலாக இருக்க வேண்டும்.

பதினைந்து நிமிடம் கழித்து மற்ற மூவரும் ஆளுக்கொரு மூட்டையுடன் திரும்பி வந்தனர். எங்கள் அறையிலிருந்து என்னென்ன பொருட்களை எடுத்தார்களோ..

பொதுவாக கடற்கொள்ளயர் இதுபோன்ற நிலக்கரி மற்றும் தாதுப் பொருள் ஏற்றிச் செல்லும் சரக்குக் கப்பல்களை தாக்குவதில்லை. எதுவும் கிடைக்காது. விலை மதிப்புள்ள பொருள்களை ஏற்றிச் செல்லும் கண்டெயினர் ரக கப்பல்களையே தாக்குவார்கள். இந்தக் கப்பலை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியவில்லை..

ஒருவேளை வேறு எதுவும் சிக்கியிருக்காது போலும்.. கப்பலின் கேப்டனிடமிருந்து எல்லா அமெரிக்க டாலரையும் பறித்துக் கொண்டனர்.

"வெரிகுட்.. குட்-கோஆபரேஷன்" என்று சர்ட்டிபிகேட் வேறு தந்தனர். அதுவரை எல்லாம் நல்லபடியாகத்(?) தான் நடந்தது. அவர்கள் அத்தோடு போயிருந்தால் அன்று விபரீதம் எதுவும்
நடந்திருக்காது.

விபரீதத்தின் காரணம் வில்லியம்ஸின் மனைவி.

நான்காவது எஞ்ஜினீயரான வில்லியம்ஸ் மனைவியுடன் அதற்கு முன் நிறைய முறை கப்பலில் பயணம் செய்துள்ளான். அவள் மிகவும் அமைதியான பெண். இயல்பிலேயே கூச்ச சுபாவம் உள்ளவள். அதிகம் பேச மாட்டாள்.

அவள் வில்லியம்ஸின் அருகே நின்றிருந்தாள். கொள்ளயர்கள் கப்பலை விட்டுப் போக முற்படும்போது அவர்களின் கண்களில் முன்வரிசையில் வில்லியம்ஸை ஒட்டியபடி நின்ற அவள் பட்டதோடு அவர்களின் கண்களுக்கு அழகாகவும் தெரிந்து விட்டாள்.

அந்தத் தலைவன் மஞ்சள் நிறப் பற்களைக் காட்டி சிரித்துக் கொண்டே அவளை நெருங்கினான்.

எல்லோருக்கும் பயத்திலும் அதிர்ச்சியிலும் இரத்த அழுத்தம்
அதிகரித்தது..